இலங்­கையில் புதிய அர­சி­ய­ல­மைப்பை வரை­வ­தற்­கான செயன்­மு­றை­களின் பிர­தான நோக்­கங்­களில் முதன்­மை­யா­னது நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்­சி­மு­றையை ஒழிப்­பது என்றே கூறப்­பட்டு வரு­கி­றது. ஆனால், இது­வ­ரையில் அந்த ஆட்­சி­மு­றையை ஒழிப்­பது தொடர்பில் தென்­னி­லங்கை அர­சியல் சமு­தா­யத்­திற்குள் தெளி­வான நிலைப்­பா­டுகள்  இல்லை என்­பதே உண்­மை­யாகும். தடு­மாற்­ற­மான கருத்­துக்கள் அவ்­வப்­போது வெளிப்­ப­டுத்­தப்­பட்ட வண்­ண­மே­யி­ருக்­கின்­றன.

அர­சி­ய­ல­மைப்புச் சீர்­தி­ருத்­தங்கள் தொடர்பில் மக்­களின் கருத்­துக்­களை அறிந்­து­கொள்­வ­தற்­காக பிர­த­ம­ரினால் நிய­மிக்­கப்­பட்ட பொது­மக்கள் பிர­தி­நி­தித்­துவக் குழு அதன் அறிக்­கையைக் கைய­ளித்து ஐந்து மாதங்கள் கடந்­து­விட்­டன. 20 உறுப்­பி­னர்­களைக் கொண்ட அந்தக் குழுவின் தலை­வ­ரான மூத்­த­சட்­ட­வாதி லால் விஜே­நா­யக்க சில தினங்­க­ளுக்கு முன்னர் கொழும்பு ஆங்­கிலப் பத்­தி­ரி­கை­யொன்­றுக்கு அளித்­தி­ருந்த நேர்­கா­ணலில் 'நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்சி முறைக்கு ஆத­ர­வா­கவும் மக்­க­ளி­ட­மி­ருந்து கருத்­துக்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. அந்த ஆட்­சி­மு­றையை முற்­றா­கவே ஒழிக்க வேண்டும் என்றும் கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. அதே­வேளை, சில தரப்­பினர் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்­சி­மு­றையில் அதி­கா­ரங்­களைக் குறைத்து சில தளர்­வு­களைச் செய்­து­விட்டு அந்தப் பத­வியைத் தொடர்ந்து வைத்­தி­ருக்­கலாம் என்ற அபிப்­பி­ரா­யத்­தையும் கொண்­டி­ருக்­கி­றார்கள். சகல விட­யங்கள் தொடர்­பிலும் மக்கள் வெவ்­வேறு வகை­யான கருத்­துக்­களைத் தெரி­வித்­தி­ருக்­கி­றார்கள். நாம் அவற்­றை­யெல்லாம் எந்­த­வி­த­மான மறைப்­பு­மின்றி அர­சி­ய­ல­மைப்பு சபையின் பரி­சீ­ல­னைக்கு சமர்ப்­பித்­தி­ருக்­கின்றோம்' என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

அதே­வேளை,  கடந்­த­வாரம் நியூ­ஸி­லாந்­துக்கு விஜயம் செய்­தி­ருந்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஒக்லாண்ட் நகர கவுன்­சிலில் தனக்கு அளிக்­கப்­பட்ட வர­வேற்­பின்­போது 'அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் நீங்கள் போட்­டி­யி­டு­வீர்­களா' என்று நியூ­ஸி­லாந்தில் வாழும் இலங்­கையர் ஒரு­வ­ரினால் கேட்­கப்­பட்ட கேள்­விக்கு பதி­ல­ளிக்­கையில் 'நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்­சி­மு­றையை இல்­லா­தொ­ழிப்­ப­தற்­கா­கவே நாம் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்றோம்' என்று குறிப்­பிட்­ட­தாக செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன. நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்சி முறைக்குப் பதி­லாக எத்­த­கைய ஆட்­சி­மு­றையைக் கொண்­டு­வ­ரு­வது என்­பது குறித்து தாங்கள் இன்­னமும் தீர்­மா­னிக்­க­வில்லை என்றும் நிறை­வேற்று அதி­கா­ரங்கள் முழு­மை­யாக பாரா­ளு­மன்­றத்­திற்கு மாற்­றப்­பட வேண்­டுமா அல்­லது தேசிய பாரா­ளு­மன்றம், செனட்­சபை மற்றும் மாகாண சபை­களை உள்­ள­டக்­கி­ய­தான ஒரு கூட்டு அமைப்பு முறைக்கு அதி­கா­ரங்கள் மாற்­றப்­பட வேண்­டுமா என்­பது குறித்து ஆரா­யப்­பட்டு வரு­கின்­றது என்றும் பிர­தமர் நியூ­ஸி­லாந்தின் தலை­ந­கரில் தெரி­வித்­தி­ருந்தார்.

இத­னி­டையே, இரு­வா­ரங்­க­ளுக்கு முன்னர் யாழ் நகரில் தமிழ் மக்கள் பேர­வை­யினால் நடத்­தப்­பட்ட 'எழுக தமிழ்' பேர­ணியில் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் நிகழ்த்­திய உரை தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­வித்த தேசிய ஐக்­கிய அர­சாங்­கத்தின் முக்­கிய அமைச்­சர்­களில் ஒரு­வ­ரான மகிந்த சம­ர­சிங்க, 'முத­ல­மைச்­சரின் அச்­சு­றுத்தும் வகை­யி­லான செயற்­பா­டு­க­ளுக்குப் பிறகு நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்­சி­மு­றையை இல்­லா­தொ­ழிப்­பதற்கு  எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்தை மறு­ப­ரி­சீ­லனை செய்­ய­வேண்டும்' என்று குறிப்­பிட்­டதைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. விடு­தலைப் புலி­களின் தோல்­விக்குப் பின்­னரும் கூட, பிரி­வி­னை­வாத உணர்­வு­களை உற்­சா­கப்­ப­டுத்­து­கின்­ற­வர்­க­ளுக்கு ஜனா­தி­பதி ஆட்­சி­முறை ஒழிப்பு பெரும்­வ­ச­தி­யாக அமைந்­து­விடும். அதனால், தீர்­மானம் குறித்து மறு­சிந்­தனை தேவைப்­ப­டு­கி­றது. முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் போன்­ற­வர்­க­ளினால் தோற்­று­விக்­கப்­ப­டு­கின்ற அச்­சு­றுத்­தலை விவே­க­மு­டைய எந்­த­வொரு அர­சியல் கட்­சியும் அலட்­சியம் செய்­து­வி­ட­மு­டி­யாது இன­ரீ­தி­யாக நாட்டைப் பிள­வு­ப­டுத்தும் முயற்­சி­க­ளுக்கு எதி­ரான ஒரே பாது­காப்­பாக நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்­சி­மு­றையே இருக்­கி­றது என்றும் அமைச்சர் சம­ர­சிங்க கூறி­யி­ருந்தார்.

இதை­விட, அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க போன்­ற­வர்கள் ஜனா­தி­பதி ஆட்­சி­மு­றையை முற்­றாக ஒழிக்­காமல் அதை கூடு­த­லான அள­வுக்கு ஜன­நா­ய­கப்­ப­டுத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களை புதிய அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்­க வேண்டும் என்ற அபிப்­பி­ரா­யத்தைத் தொடர்ச்­சி­யாக வெளிப்­ப­டுத்தி வந்­தி­ருக்­கின்­றார்கள் என்­பதும் கவ­னிக்­கத்­தக்­கது. ஆக மொத்­தத்தில், இவ்­வ­ருட இறு­திக்கு முன்­ன­தாக புதிய அர­சி­ய­ல­மைப்பு வரைவை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கக்­கூ­டிய சாத்­தியம் குறித்து அர­சாங்கத் தலை­வர்கள் பேசிக்­கொண்­டி­ருக்கும் நிலை­யிலும் ஜனா­தி­பதி ஆட்­சி­மு­றையின் எதிர்­காலம் தொடர்பில் அர­சியல் கட்­சி­களின் மத்­தியில் தெளி­வான கருத்து இன்­னமும் வெளிப்­ப­ட­வில்லை என்­பது வெளிப்­ப­டை­யாகத் தெரி­கி­றது.

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்சி முறையை ஒழிக்க வேண்­டு­மென்ற கோரிக்கை அண்­மைக்­கா­லத்தில் தோன்­றிய ஒன்­றல்ல. ஜே.ஆர்.ஜய­வர்­தன தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்கம் 1978 அர­சி­ய­ல­மைப்பில் ஜனா­தி­பதி ஆட்­சி­மு­றையை அறி­மு­கப்­ப­டுத்­திய நாளில் இருந்தே அதை ஒழிக்­க­வேண்­டு­மென்ற கோரிக்­கையும் எழுந்­தது.

பிர­தா­ன­மாக முன்னாள் பிர­தமர் திரு­மதி சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க தலை­மையில் இருந்த ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் இட­து­சாரிக் கட்­சி­களும் இதை வலி­யு­றுத்தி நின்­றன. என்­ற­போ­திலும், அவர்­களால் எந்­த­வி­த­மான உருப்­ப­டி­யான போராட்­டங்­க­ளையும் நடத்­தக்­கூ­டி­ய­தாக இருக்­க­வில்லை.

ஜனா­தி­பதி ஆட்சி முறையை அறி­மு­கப்­ப­டுத்தப் போவ­தாக 1977 ஜூலை பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­கான விஞ்­ஞா­ப­னத்தில் ஐக்­கிய தேசியக் கட்சி குறிப்­பிட்­டி­ருந்த போதிலும், அத்­த­கை­ய­தொரு ஆட்­சி­மு­றையின் மீதான விருப்­பத்தின் கார­ண­மா­கத்தான் அக்­கட்­சியை அத்­தேர்­தலில் நாட்­டு­மக்கள் அமோ­க­மாக ஆத­ரித்து ஆட்­சிக்குக் கொண்­டு­வந்­தார்கள் என்று எவரும் கூற­மு­டி­யாது. அதற்கு பல்­வேறு கார­ணங்கள் இருந்­தன.

திரு­மதி பண்­டா­ர­நா­யக்­கவைப் பொறுத்­த­வரை, ஆரம்பம் முத­லி­ருந்தே ஜனா­தி­பதி ஆட்சி முறைக்கு எதி­ரான நிலைப்­பாட்டைக் கொண்­ட­வ­ராக இருந்­த போதிலும் 1988 டிசம்பர் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்டு ஜனா­தி­ப­தி­யாக வரு­வ­தற்கு அவர் விரும்­பினார். ஆனால், ஜனா­தி­பதி ஜய­வர்­த­னவின் அர­சாங்­கத்தில் பிர­த­ம­ராக இருந்த ரண­சிங்க பிரே­ம­தா­ச­விடம் திரு­மதி பண்­டா­ர­நா­யக்க தோற்றுப் போனார்.

ஜனா­தி­பதி பிரே­ம­தா­சவின் அர­சாங்­கத்தில் அமைச்­சர்­க­ளாக இருந்த ஐக்­கிய தேசியக் கட்­சியின் முக்­கிய தலை­வர்­க­ளான லலித் அத்­துலத் முத­லியும் காமினி திசா­நா­யக்­கவும் அவ­ருடன் முரண்­பட்டுக் கொண்டு கட்­சி­யை­விட்டு வெளி­யேறி நிறை­வேற்று அதி­கார ஜனா­ப­தி­பதி ஆட்­சி­மு­றைக்கு எதி­ராகப் போர்க்­கொடி தூக்­கி­னார்கள். தங்­களை அனு­ச­ரித்துப் போகக்­கூ­டிய ஜய­வர்­தன அதே­ப­த­வியில் ஒரு தசாப்­த­கா­ல­மாக இருந்­த­போது அவர்கள் இரு­வ­ருக்கும் அதே ஜனா­தி­பதி பத­வி­மீது எந்த வெறுப்பும் ஏற்­ப­ட­வில்லை.  எதிர்­கா­லத்தில் அப்­ப­த­வியை அடை­வது குறித்த கனவும் அவர்­க­ளிடம் இருந்­தது. தங்­க­ளது எதிர்­கால அர­சியல் மேம்­பாட்­டுக்கு எதி­ரா­ன­வ­ராக பிரே­ம­தாச இருந்த கார­ணத்­தி­னா­லேயே அவ­ருக்கு எதி­ரான பிர­சா­ரத்தின் ஒரு அங்­க­மாக அத்­துலத் முத­லியும், திசா­நா­யக்­கவும் ஜனா­தி­பதி ஆட்­சி­மு­றையை எதிர்க்கத் தீர்­மா­னித்­தார்கள். இதில் அவர்கள் திரு­மதி பண்­டா­ர­நா­யக்­க­வு­டனும் அணி­சேர்ந்­­தார்கள்.

ஜனா­தி­பதி பிரே­ம­தாச ஒரு­போ­துமே ஜனா­தி­பதி ஆட்­சி­மு­றைக்கு எதி­ரான கருத்தைக் கொண்­டி­ருக்­க­வில்லை. அந்தப் பத­விக்கு இருந்த மட்­டு­மீ­றிய அதி­கா­ரங்­களைப் பயன்­ப­டுத்தி பலம்­பொ­ருந்­திய ஆட்­சி­யா­ள­ராக அவர் விளங்­கினார்.

தனது முத­லா­வது பத­விக்­காலம் முடி­வ­டை­வ­தற்கு முன்­ன­தா­கவே 1993 மே தினத்­தன்று பிரே­ம­தாச தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தலில் கொல்­லப்­பட்­ட­தை­ய­டுத்து ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்ற (அன்­றைய பிர­தமர்) டி.பி.விஜே­துங்க ஒன்­றரை வரு­டங்­களே பத­வியில் இருந்தார். ஜன­தி­பதி ஆட்சி முறைக்கு எதி­ராக அவர் ஒரு போதும் கருத்து   வெளி­யிட்ட­தில்லை

17 வரு­ட­கால ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்­சிக்குப் பிறகு நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்சி முறையை ஒழிப்­ப­தையே பிர­தான வாக்­கு­று­தி­யாக முன்­னி­லைப்­ப­டுத்திக் கொண்டு 1994 நவம்பர் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்ட திரு­மதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க வெற்­றி­பெற்று அதி­கா­ரத்­துக்கு வந்­த­வு­டனே ஒரு வருட காலத்தில் அப்­ப­த­வியை ஒழிப்­ப­தாகக் கூறினார். ஆனால், இறு­தியில் 11 வரு­டங்கள் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யி­லி­ருந்த அவர், மேலும் ஒரு வரு­டத்­துக்கு அதி­கா­ரத்தில் இருக்­க­மு­டி­ய­வில்­லையே என்ற கவ­லை­யுடன் தான் கதி­ரையிலிருந்து இறங்­கினார்.

அதற்குப் பிறகு 2005 நவம்பர் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்ட மஹிந்த ராஜபக் ஷ, தனது முத­லா­வது பத­விக்­கா­லத்தின் முடிவில் ஜனா­தி­பதி ஆட்­சி­மு­றையை ஒழிப்­ப­தாக வாக்­கு­று­தி­ய­ளித்தார். ஆனால், 2010 ஜன­வ­ரியில் இரண்­டா­வது பத­விக்­கா­லத்­துக்­காக தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்ற இவர், ஜனா­தி­ப­தி­யாக ஒருவர் இரு பத­விக்­கா­லங்­க­ளுக்கு மாத்­தி­ரமே பத­வி­வ­கிக்க முடியும் என்ற அர­சி­ய­ல­மைப்பு ஏற்­பாட்டை ரத்துச் செய்­வ­தற்கு திருத்­த­மொன்றைக் கொண்­டு­வந்து பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேறச் செய்தார்.

தொடர்ந்தும் எத்­தனை பத­விக்­கா­லத்­துக்­கென்­றாலும் அதி­கா­ரத்தில் இருப்­பதே அவரின் நோக்­க­மாக இருந்­தது..

 ஆனால், அவரின் சுமார் பத்து வரு­ட­கால ஆட்­சியில் அதி­க­ரித்­தி­ருந்த முன்­னென்­று­மில்­லாத வகை­யி­லான எதேச்­சா­தி­காரம், சட்­டத்தின் ஆட்­சியின் சீர்­கு­லைவு,  ஊழல், முறை­கே­டுகள் கார­ண­மாக மக்கள் மத்­தியில் அவ­ருக்கு ஆத­ரவு குறையத் தொடங்­கி­யது. போரில் விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ராக அர­சாங்கப் படைகள் பெற்ற வெற்­றி­கா­ர­ண­மாக தென்­னி­லங்­கையில் சிங்­கள மக்கள் மத்­தியில் மஹிந்த ராஜபக் ஷ பெரும் செல்­வாக்குக் கொண்­ட­வ­ராக இருந்­த­போ­திலும், 2015 ஜன­வரி ஜனா­தி­பதித் தேர்­தலில் அவர் தனது அர­சாங்­கத்தில் அமைச்­ச­ராக இருந்த மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டமே தோல்­வி­ய­டைய வேண்­டி­யேற்­பட்­டது. இது அண்­மைக்­கால சரித்­திரம்.

ராஜபக் ஷவின் ஆட்­சியில் எதேச்­ச­ாதி­காரம் முன்­னென்­று­மில்­லாத வகையில் அதி­க­ரித்து குடும்ப ஆட்­சியும் வலுப்­பெற்­றி­ருந்த கார­ணத்தால், மீண்டும் 2015 ஜன­வரி 8 தேர்­தலில் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்­சி­முறை ஒழிப்பு என்ற கோஷம் முக்­கி­யத்­துவம் பெற்­றது.

அத் தேர்­தலில் வெற்­றி­பெற்று  கொழும்பு சுதந்­திர சதுக்­கத்தில் பத­வி­யேற்ற புதிய ஜனா­தி­பதி சிறி­சேன, அங்­கி­ருந்து நாட்டு மக்­க­ளுக்கு ஆற்­றிய உரையில் இனிமேல் ஜனா­தி­பதித் தேர்தல் ஒன்றில் தான் போட்­டி­யிடப் போவ­தில்லை என்று அறி­வித்தார்..

இப்­போது அவரின் ஆட்­சியில் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயன்­மு­றைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் நிலை­யி­லேயே ஜனா­தி­பதி ஆட்­சி­மு­றையின் எதிர்­காலம் குறித்து தடு­மாற்­ற­மான கருத்­துக்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன.

கடந்த 38 வரு­டங்­க­ளாக நடை­மு­றையில் இருந்­து­வரும் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்­சி­மு­றையை அடிப்­ப­டை­யாகக் கொண்ட அர­சி­ய­ல­மைப்பு நாட்டின் ஆட்சி நிறு­வனக் கட்­ட­மைப்பில் எதேச்­சா­தி­காரப் போக்கை படிப்­ப­டி­யாக வளர்த்­து­வந்­தி­ருக்­கி­றது. ராஜபக் ஷ  ஆட்சியில் அது ஒரு உச்ச நிலைக்கு வந்தது. இந்த அர­சி­ய­ல­மைப்பை மாற்ற வேண்­டு­மென்ற கோரிக்கை அடிக்­கடி எழுந்­த­போ­திலும் அடிப்­ப­டையில் அந்தக் கோரிக்கை குறிப்­பாக, ஜனா­தி­பதி ஆட்­சி­மு­றையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதி­கா­ரத்­தி­லி­ருந்த ஜனா­தி­ப­தி­களைக் குறி­வைத்து மேற்­கொள்­ளப்­பட்ட கட்சி அர­சியல் நோக்­கங்­களின் விளைவானதே என்பதை நாமெல்லோரும் அனுபவத்தின் வாயிலாக கண்டிருக்கிறோம். அரசியல் சந்தர்ப்பவாத அடிப்படையிலேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு குறித்த கோரிக்கை எழுப்பப்பட்டு வந்ததன் விளைவாக அந்தக் கோரிக்கை ஒருபோதுமே பரந்து பட்ட முறையில் ஒரு வெகுசனக் கோரிக்கையாக மேலெழும்ப முடியவில்லை என்பதே உண்மையாகும். ஜனாதிபதி ஆட்சிமுறையை முற்றாக ஒழிக்காத வகையில் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படுமானால், நாட்டுமக்கள் கொதித்தெழுவார்கள் என்று எவராலும் கூறமுடியுமா?  

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்புக்   கோரிக்கைக்கு ஒருபோதுமே மானசீகமான  ஆதரவை வழங்கியது கிடையாது. தனது நெருங்கிய உறவுக்காரரான ஜே. ஆர். ஜயவர்தனவின் அரசியல் கொள்கைகள், செயற்பாடுகளைப் பற்றி எப்போதுமே பெருமையாகப் பேசிக்கொள்ளும் விக்கிரமசிங்க, ஜனாதிபதித்  தேர்தல்களில் தன்னால்  போட்டியிட்டு  வெற்றிபெற முடியாது என்ற   சூழ்நிலைகளின் கீழ்  எதிரணியின் பொது  வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய  நிர்ப்பந்தம் ஏற்பட்ட வேளைகளில்தான் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு கோரிக்கைக்கு ஆதரவானவராகத் தன்னைக் காட்டிக்கொண்டார். ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றமுடியாமல்  போகுமேயானால் விக்கிரமசிங்க  ஒன்றும்  கவலைப்படப் போவதில்லை.

ஆரம்பத்திலிருந்தே  நிறைவேற்று  அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைக்கு எதிரான நிலைப்பாட்டைக்  கொண்டிருந்த சுதந்திரக் கட்சிக்குள்தான் அந்த ஆட்சி முறை தொடர்ந்தும் இருக்க வேண்டுமென்று விரும்புகின்ற பல அரசியல்வாதிகள்  இன்று இருக்கின்றார்கள் என்பது இன்னொரு அரசியல் விசித்திரம்.