(பா. ருத்­ர­குமார்)

செவ்வாய்க்கு சென்றும் நிலத்தை கூறுபோட்டு விட்டோம். மனிதனின் தேவையை மட்டுப்படுத்த நிலத்தால் மட்டுமே  முடியும். எனினும்  ஒரு அடி நிலத்தை தனதாக்கிக்கொள்ள  அவன் படும் பாடு சாதாரண குடிமகனுக்கு கூட நன்கு விளங்கியிருக்கும். கொழும்பில் அதுவும் செல்வச்செழிப்பு மிக்க ஒரு இடத்தில் வாழ வேண்டும் என்ற கனவு அனைவருக்குள்ளும் உண்டு. அக்கனவை நனவாக்கிக் கொண்டவர்களே பம்பலப்பிட்டி தொடர்மாடி குடியிருப்பில் உள்ளவர்கள் எனக்கூட சொல்லலாம்.

1952 ஆம் ஆண்டு தலைநகரில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் இடத்தில் குடியிருப்பு மனை தொகுதியொன்று  நிர்மாணிக்கப்பட்டது. 10 ஏக்கர் நிலப்பரப்பில் 298 வீடுகளை இது கொண்டுள்ளது. ஏ முதல் எம் வரையில் குடியிருப்பாளர்கள் வாழ்வதற்கான தொடர் குடிமனைகளாக ஒழுங்குபடுத்தியிருப்பதோடு மேலதிகமாகவுள்ள என்.,பி.,கிவ். ஆகிய தொடர் குடியிருப்புக்கள் களஞ்சியசாலையாகவும் பிற தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டன. 

ஆரம்பத்தில் குறைந்த வருமானம் பெரும் அரச ஊழியர்களுக்கென கட்டப்பட்ட தொடர் குடியிருப்பென அடையாளப்படுத்தப்பட்டாலும் 1978 ஆம் ஆண்டிலிருந்த அரசாங்கம் இத் தொடர் குடியிருப்பை வாடகை கொள்வனவு முறையில் விற்பனை செய்ய தீர்மானித்திருந்தது. அதன் அடிப்படையில் 1982 ஆம் ஆண்டிலிருந்து தனிக்குடியிருப்புக்களுக்கான நிலச் சான்றிதழ்கள் குடியிருப்பாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. 

1962 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை இக்குடியிருப்புக்கான அனைத்து செயற்பாடுகளையும் நலன்புரி சங்கமே மேற்கொண்டு வருகின்றது. அத்தோடு இக்குடியிருப்பில் பல மீள்கட்டுமான மற்றும் திருத்தப்பணிகள் காணப்பட்ட போதும் அதனை சீர்செய்ய எவரும் முன்வராமையினால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்துள்ளனர். அதன்பிறகே குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண கூட்டு ஆதன முகாமைத்துவ சபையிடம் சென்றுள்ளனர். 

2003 ஆண்டு பராமரிப்பு நிர்வாகசபை ஏற்படுத்தப்பட்டது. அதன்பின்னர் இக்கட்டடத்தின் அனைத்து பராமரிப்பு பொறுப்புக்களும் குறித்த நிர்வாகசபையிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அதற்கு பின்னரான காலப்பகுதியில் நிர்வாகம் முறையாக செயற்படாமையினால் பராமரிப்பு பணிகளிலும் பாரிய பிரச்சினைகள் தோற்றம் பெற்றன.

இக்குடியிருப்பு தொகுதியில் கீழ்மாடி குடியிருப்புக்கள் பல சேதமடைந்திருப்பதாக கூறி 2012 ஆம் ஆண்டு இரு குடியிருப்பாளர்கள் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் நீதிமன்றம் கூட்டு ஆதன முகாமைத்துவ சபைக்கு குறித்த விடயங்களை உடனடியாக கவனத்தில் எடுக்கும்படியும் சேதமடைந்துள்ள குடியிருப்புக்களை திருத்தி கொடுக்கும் படியும் உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்தும் கூட்டு ஆதன முகாமைத்துவ சபை எந்த வகையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.  குடியிருப்பாளர் களின் நலன்புரி சங்கம் இக்கட்டட தொகுதிக்கான பொதுவான சில பிரச்சினைகளை தற்போது தீர்த்து வருகின்றது. 

இதன் பின்னர் ஒவ்வொரு கட்டட தொகுதிக்கும் முகாமைத்துவ குழு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என கூறப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே குடியிருப்பாளர்களுக்கும் கூட்டு ஆதன முகாமைத்துவ ஆதன சபைக்குமிடையே பிரச்சினைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் அந்த தொடர்மாடி குடியிருப்பின் நலன்புரி சங்கம் குறித்த பிரச்சினைகளை கூர்மையாக கவனித்திருந்தது.

2014 ஆம் ஆண்டு இந்த தொடர்மாடி குடியிருப்பின் சில மனைகள் சேதமடைந்திருந்தமையால் அதனை மீள திருத்தித் தருமாறு கோரி சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களிடம் செல்ல வேண்டி ஏற்பட்டது. ஆனாலும் அம்முயற்சிகள் சாத்தியப்படவில்லை. பின்னர்  2015 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் திகதி குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபை  அழைப்பு விடுத்திருந்தது. ஆயினும் இந்த கலந்துரையாடலும் சாத்தியப்படாத நிலையில் புதிய கட்டடத்திற்கு அடித்தளமிட்ட பேச்சுவார்த்தை 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் திகதி கதிரேசன் மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 

கதிரேசன் மண்டபத்தில் ஆரம்பமான பேச்சுவார்த்தையின் போது குறித்த கட்டடத்தின் மீள் அபிவிருத்தி பணிகள் பற்றி கலந்துரையாடப் பட்டதோடு புதுப்பிப்பதற்கான அடையாள பேச்சுவார்த்தைகளும் ஆரம்பிக்கப்பட்டன. இதில் 50 மாடிகளை கொண்ட சொகுசு தொடர்மாடி கட்டடத்தை அமைப்பதற்கும் பணச் சீட்டு(வவுச்சர்) விநியோகிப்பது தொடர்பிலும் குடியிருப்பாளர்களிடம் கலந்துரையாடப்பட்டது. 

அதன் பின்னர் கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபை வீட்டு உரிமையாளர்களுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதன்போது ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 50 மாடிகள் கொண்ட குடியிருப்பை அமைப்பதாகவும் ஒரு அறை குடியிருப்பில் உள்ளவர்களுக்கு 60,000 மும் 2 படுக்கையறைகளை கொண்ட வீடுகளுக்கு 70,000 ரூபாவும் 3 படுக்கையறைகளை கொண்ட வீடுகளுக்கு 80,000 ரூபாவும் வழங்க தீர்மானிக்கப்பட்டது.

தலைநகரில் குறித்த தொகைக்கு ஒரு வீடு மனையில் தற்காலிகமாக தங்குவதென்பது சாத்தியப்படாத விடயமாகும். மேலும் குறித்த பணத்தொகை தொடர்பில் எவ்விதமான தீர்க்கமான முடிவுகளும் இதுவரையும் வழங்கப்படவில்லை. 

குறித்த பணத்தை மூன்று வருடங்களுக்கு மீள பெற்றுக்கொள்வதற்கான வசதி வாய்ப்புக்களை பெற்று தருவதாக உறுதியளித்திருந்தனர். இதன்படி குறித்த பண வவுச்சரை பெற்ற நாளிலிருந்து 45 நாட்களுக்குள் குடியிருப்பாளர்கள் அந்த வீட்டை விட்டு செல்ல வேண்டும் என்பதே நிபந்தனையாகும். 

இவ்வருட மார்ச மாதத்தில் குறித்த புதிய கட்டட நிர்மாணப் பணிகளுக்கான அமைச்சரவை பத்திரம் வெளியிடப்பட்ட போதே பல புதிய பிரச்சினைகள் இம்மக்கள் மத்தியில் தோற்றம் பெற்றுள்ளன. 

27.06.2016 அன்று கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபை பம்பலப்பிட்டி தொடர்மாடி குடியிருப்பிலுள்ள அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் கடிதமொன்றை அனுப்பியிருந்தது. அக்கடிதத்தில் கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் குறித்த திட்டம் தொடர்பில் இறுதி பரிந்துரைகளை முன்வைக்க தீர்மானித்துள்ளதாகவும் 14 நாட்களுக்குள் அதற்கான பரிந்துரைகளை வழங்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

கூட்டு ஆதன அதிகார சபை 2003 ஆம் தோற்றம் பெற்றிருந்தது. இருந்த போதிலும் குறித்த தொடர்மாடி குடியிருப்புக்கான அனைத்து புனர்நிர்மாண மற்றும் ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளும் நலன்புரி சங்கத்தினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனாலும் தற்போது புதிய கட்டட நிர்மாணத்திற்கு கூட்டு ஆதன அதிகாரசபையின் ஆதிக்கம் மற்றும் அதன் செல்வாக்குகள் என்பன குடியிருப்பாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த கடிதத்திற்கு பதிலளிக்கும் முகமாக 50 மாடிகளை கொண்ட குடியிருப்பு தொகுதிக்கு பதிலாக 25 மாடிகளை கொண்ட 2 தொகுதிவீடுகள் அமைப்பதற்கும் முறையான வாழ்வாதாரத்துடன் கூடிய பொருத்தமான அமைவிடத்தை விசாலமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத் திருந்தனர். ஆயினும் அக்கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப் பட்டிருக்கின்றன. இதன் பின்னர் செப்டெம்பர் மாதம் அன்று மீண்டும் ஒரு கடிதத்தினை அனைத்து வீடுகளுக்கும் அனுப்பியி ருந்ததோடு வீட்டு பத்திரத்தின் தகவல்கள் பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம் போன்ற பல விடயங்களை அடையாளப்படுத்தி கையொப்பம் இட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டது.

மேலும் அக்கடிதத்தில் குறித்த தொடர்மாடி கட்டடத்திற்கான பரப்பு கட்டுமான காலம், மாற்றீடு நடவடிக்கைகள் போன்றவற்றினை சாதகமாகவே குறிப்பிட்டிருந்தது. ஆனாலும் எமது எதிர்பார்ப்புக்களை அல்லது பிரேரணைகள் எவற்றையும் கண்டுக் கொள்ளாமல் உள்ளமை ஒட்டுமொத்த திட்டத்தை நம்பிக்கையற்றதாக மாற்றியுள்ளது. 

அங்குள்ள மக்கள் ஆடம்பர சொகுசு வாழ்வை விட நிம்மதியான வாழ்க்கையையே விரும்புகின்றனர். அரசாங்க உத்தியோகத்திலிருந்து ஓய்வுபெற்ற, முதியோர்களை அதிகம் கொண்ட அங்கவீனர்களை அதிகமாக கொண்ட இத் தொடர்மாடி குடியிருப்பில் உள்ளவர்களின் எதிர்பார்ப்பு 50 மாடி கட்டட வாழ்வு எத்தனை காலம் நிலைக்கும் என்பதும் எமது பூர்வீக நிலத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுமோ என்ற ஆதங்கமும் பயமும் கடந்த மாதங்களில் இடம்பெற்ற கூட்டங்களின் போது தெளிவாக உணர முடிந்தது.

அரசாங்கம் இத்திட்டத்தை அமுல்படுத்தும் முன்னர் முறையான மதிப்பீட்டு பணிகளை செய்ததா என்பது இத்திட்டத்திற்கு எதிர்ப்புகள் கிளம்ப பிரதான காரணமாகின்றது. அத்துடன் நேர்மையான அணுகுமுறைகள் இத்திட்டத்தில் பின்பற்றப்படவில்லை என்பது குடியிருக்கும் மக்களை சந்தித்த போது தெளிவானது. அதாவது ஆவணங்களை பொறுப்பானவர்களுக்கு வெளிப்படுத்துவதிலிருந்து சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்துவது வரை முறையான படிமுறைகள் எவையும் மாநகர சபையினாலோ அல்லது குடியிருப்பு நலன்புரி சங்கத்தினாலேயோ அல்லது கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபை யாலோ முன்னெடுக்கப்படவில்லை. 

கட்டட பொறியியலாளர்கள் மற்றும் கட்டட வரைஞர்களுக்கு குறித்த திட்டத்தை முடித்துக்காட்டி ஏனைய அபிவிருத்தி திட்டங்களை கைபற்றுவதே நோக்காக கொண்டிருந்தாலும் இங்கு வாழும் மக்கள் காலாகாலமாக தங்களது பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து விடயங்களையும் மேற்கொள்ளக்கூடிய இடமாக இது அமையும் என்பதை உணர்ந்திருப்பார்களா என்பது சந்தேகம் என அக்குடியிருப்பிலுள்ள ஒருவர் கருத்து தெரிவித்தார்.

இக்கருத்துக்கும் மாற்று கருத்தை நாம் தந்துவிட முடியாது. ஒட்டுமொத்த திட்டமும் உற்பத்தி மற்றும் பொருளாதார நோக்கை அடிப்படையாகக் கொண்டது என்பதை அறியக்கூடியதாக இருந்தது. உதாரணமாக புதிய தொடர்மாடி குடியிருப்பில் முறையான பராமரிப்பு நடவடிக்கை, பாதுகாப்பு நடைமுறைகள் ,பொழுதுபோக்கு  மற்றும் வாழ்க்கை முறைமை தொடர்பில் எவ்வித அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை. அவ்வாறிருக்கும் போது புதிய திட்டத்திற்கு மக்களிடத்தில் ஆதரவு கோருவது சாத்தியப்படாத ஒன்றாகும். 

மேலும் தற்போதுள்ள மத்தியதர வீடுகளுக்கு பதிலாக சாதாரண வீடுகள் கிடைத்துவிடுமோ என்ற ஏக்கமும் அதற்கு தகுந்தாற்போல் எவ்வித நம்பத்தகுந்த ஆதாரங்களையும் அரசாங்கம் முன்வைக்காமல் இருப்பதால் இத்திட்டத்தின் நோக்கு தொடர்பில் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. புதிய கட்டடம் ஆரம்பிக்கப்படமுன்பே ஏன் இந்த வீண் சந்தேகம் என கேட்கத்தோன்றினாலும் தற்போதுள்ள சுதந்திர வாழ்வை விடுத்து 50 மாடிகளை கொண்ட மாடிமனையில் எப்படி வாழப் போகின்றோம் என சோகத்தில் புலம்பும் மக்களுக்கு தன்னம்பிக்கையளிக்க வேண்டியது பொறுப்பு மிக்கவர்களின் கடமையாகும்.

அரசாங்கத்தினால் வழங்குவதற்கு எதிர்ப்பார்த்துள்ள உதவித்தொகை தற்போதுள்ள வாழ்க்கையை தந்துவிடாது எனவும் 25 தொடக்கம் 30 மாடிகளை கொண்ட இரு கட்டடங்களை அடிப்படை வசதிகளோடு வழங்க வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. அத்தோடு இறுதி திட்டத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள வரைபுகள் தொடர்பில் பலவாறான கருத்துக்கள் வெளிவந்த நிலையில் உறுதியான திட்ட வரைபைப்பற்றி தெளிவுபடுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். 

பெரும்பான்மை மக்கள் ஆதரவு வழங்காத போது இத்திட்டத்திற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்வது சரியானதா? எவ்விதமான அறிவிப்புகளுமின்றி எங்கள் வீடுகளுக்கு கடிதங்களை அனுப்புவது முறையானதா என கேட்கும் மக்கள் தற்போதைய நிலைப்பாட்டின்படி இத்திட்டத்திற்கான நம்பகத் தன்மையை வெளிப்படுத்துமாறே அரசாங்கத்திடமும் நலன்புரி சங்கங்களிடமும் கோரிக்கை விடுக்கின்றனர். 

ஒரு ஏக்கர் நிலத்தில் தங்களை அடைத்துவைக்க முயல்கிறார்கள் கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபையின் செயற்பாடுகளின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துங்கள் தங்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வழி செய்யுங்கள். நல்லாட்சி, பொறுப்புகூறல் தகவல் அறியும் உரிமை என அனைத்து வாக்குறுதிகளையும் அளிக்கும் அரசாங்கம் எங்களது செயற்பாடுகளுக்கு வாழ்வில் மட்டும் பராமுகமாக இருக்கின்றது என கேட்கும் மக்களின் அழுகுரல்களும் உறுதியான நம்பிக்கையான தீர்மானத்திற்காக எவ்வாறான முன்நகர்வுகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்பதையும் தொடர்ந்து அவதானிப்போம்.