எனக்கு முத்திரை குத்துவதன் மூலம் சட்டங்களை பிரயோகிப்பதற்கு முயற்சி ? - அம்பிகா சற்குணநாதன்

14 Feb, 2022 | 02:48 PM
image

இனக்குழுமங்களுக்கு இடையிலான பாரபட்சம் சம்பந்தமாக நான் குறிப்பிட்ட கருத்துக்களை விடுதலைப்புலிகளின் பிரசாரத்துடன் ஒப்பிட்டு எனக்கு முத்திரை குத்துவதன் மூலம் பயங்கரவாதத் தடைச்சட்டம் உள்ளிட்ட சட்டங்களை என்மீது பிரயோகிப்பதற்கான தந்திரோபய நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும்ரூபவ் நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவியுமான அம்பிகா சற்குணநாதன் வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு :

கேள்வி:- நீங்கள் அமெரிக்க காங்கிரஸில் இருதடவைகள் இலங்கை விவகாரங்கள் பற்றி கருத்துக்களை பதிவு செய்தபோது அமைதியாக இருந்த இலங்கை அரசாங்கம் இப்போது ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தின் மனித உரிமைகள் பற்றி உபகுழுவில் கருத்துக்களை பதிவு செய்தமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கின்றது. இதனால் நீங்கள் இலக்குவைக்கப்படுவதாக உணர்கின்றீர்களா?

பதில்:- இலங்கை அரசாங்கம் ஜி.எஸ்.பி.வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவுடன் பேச்சுக்களை முன்னெடுத்து வருகின்றது.

அவ்விதமான நிலையில் நான் வெளியிட்ட யதார்த்தமான விடயங்களையிட்டு அரசாங்கம் அதிருப்தி கொண்டிருக்கின்றது.

குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

அதனைவிடவும் மேலும் பல அழுத்தங்களை வழங்குகின்றது. இதனால் தான் எனது கருத்துக்களை அரசாங்கம் நிராகரித்து அறிக்கையொன்றை விடுத்துள்ளது. அதற்கும் அப்பால், அரசாங்கம் இவ்விதமாக தனிநபருக்கு எதிராக அறிக்கைவிடுவதானது புதியதொரு தந்திரோபயமாகும். கடந்த காலங்களில் அரசாங்கமொன்று தனி நபருக்கு எதிராக இவ்விதமான காட்டமான அறிக்கையொன்றை பகிரங்கமாக வெளியிட்டது கிடையாது.

மேலும் வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் கண்காணிப்புக்கள், அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட பல விடயங்களுக்கு மத்தியிலும் தமக்கான உரிமைகளை, நீதியைக் கோரி தொடர்ச்சியாக போராடிக்கொண்டிருக்கின்றார்கள். ஆகவே அரசாங்கம் என்போன்ற தனிநபர்களை அச்சுறுத்துவதன் மூலம் போராடுபவர்களைரூபவ் கருத்துக்களை வெளியிடுபவர்களை மௌனிக்கச்செய்வதற்கு அல்லது அடக்குவதற்கு, எடுக்கப்படும் முயற்சியாகும்.

கேள்வி:- வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் இனப்பாகுபாடு விடயத்தில் நீங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரசாரத்தினை ஒத்தவகையில் கருத்து வெளியிட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மறுபக்கத்தில் நீங்கள் தேர்தலில் போட்டியிடுவதாக தகவல்கள் வந்தபோது, நீங்கள் மென்போக்கு சக்திகளுக்குள் இருப்பவர் விடுதலைப்புலிகளுக்கு எதிரானவர் என்று கூறப்பட்டது. இந்த இருவேறு நிலைமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- தேர்தலில் களமிறங்கப்போவதாக அறிவிக்கப்பட்டபோது நான் அரசாங்கத்திற்கு சார்பனவர். இராணுவத்துடன் இணைந்து பணியாற்றியவர். விடுதலைப்புலிகளுக்கு எதிரானவர் என்று கூறி பிரசாரம் செய்யப்பட்டது.  அதேநேரம், இராணுவத்துக்கு எதிராக நான் 500 அறிக்கைகளை  ஐ.நா.வுக்கு அனுப்பினேன் என்றும் கூறப்படுகின்றது. ஆகவே இந்த விடயத்தினை மையப்படுத்தி இருதரப்பினருமே என்னைத் தாக்கியுள்ளனர்.

அதுவொருபுறமிருக்கையில், ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உபகுழுவில், நான் இலங்கையின் இனக்குழுமங்களுக்கு இடையில் பாரபட்சம் நீடிப்பதாக குறிப்பிட்டுள்ளேன். இந்தப் பாரபட்சமே ஆயுதப்போராட்டத்திற்கு வித்திட்டது என்பதையும் சுட்டிக்காட்டினேன்.

ஆகவே இனங்களுக்கு இடையிலான பாரபட்சம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். ஆகவே இதில் என்ன தவறுள்ளது என்று எனக்குத் தெரியவில்லை.

ஆனால், நான் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்த விளைகின்றேன். வெறுப்புப்பேச்சின் ஊடாக வன்மத்தை தூண்டுகின்றேன் என்று என்மீது குற்றச்சாட்டுக்களை சுமத்த அரசாங்கம் முயல்கின்றமை வெளிப்படையாகத் தெரிகின்றது.

இதன் மூலம் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை ( ஐ.சி.சி.பி.ஆர் ) மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் ஆகிய இரண்டையும் பயன்படுத்தி என்மீது நடவடிக்கை எடுப்பதற்காக வழிவகுக்கும் நகர்வாக அரசாங்கம் இவ்விதமான பிரசாரத்தினை  முன்னெடுக்கின்றது என்றும் கருதுகின்றேன்.

இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் தசாப்தங்கள் கடந்து தமிழர்களுக்கு எதிராக பயன்படுதப்படுகின்றது. பின்னர் முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றது. அண்மைய காலங்களில் அரசாங்கத்திற்கு எதிராக மாற்றுக்கருத்துக்களை வெளியிடும் அனைவருக்கும் எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றது. ஆகவே தான் அரசாங்கம் எனக்கு விடுதலைப்புலிகள் முத்திரையை குத்துவதற்கு விளைகின்றதோ என்ற சந்தேகம் உள்ளது.

கேள்வி:- பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்கட்சியில் இருந்த கடந்த காலத்தில் இந்திய புலனாய்வு அமைப்பான ‘றோ’ மற்றும் மேற்குலகத்தின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்கள், செயற்பாட்டாளர்கள் இலங்கையில் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு துணைபோய் இருந்தார்கள் என்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது அரசுக்கு எதிரான மக்கள் வெறுப்பு அதிகரித்துள்ள நிலையில் உங்களைப் போன்றவர்கள் சர்வதேச தளங்களில் அரசாங்கத்திற்கு எதிராக வெளியிடும் கருத்துக்களைரூபவ் அளிக்கைகளை மட்டுப்படுத்துவதற்கு முனைப்புச் செய்யப்படுகின்றதா?

பதில்:- ராஜபக்ஷவின் முதலாவது ஆட்சிக்காலத்தில் போர் நிறைவுற்ற கையோடு இராணுவ மயமாக்கல் ஆரம்பிக்கப்பட்டது. அக்காலத்தில் சிவில் சமூகத்தினரின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டதாக காணப்பட்டது. சில ஆர்வலர்கள் வெளியில் வருவதற்கே தயங்கினார்கள். ஆனால் கடந்த ஆட்சியில் அந்த நிலைமையில் மாற்றங்கள் இருந்தன.

சிவில் சமூகத்தினரும், ஆர்வலர்களும் செயற்படுவதற்கான ஒரு இடைவெளி காணப்பட்டது. ஆனால் இராணுவமயமாக்கலில் மாற்றங்கள் காணப்பட்டிருக்கவில்லை. இராணுவ மயமாக்கல் அதிகரிக்கப்படாது விட்டாலும் அவ்வாறே தான் காணப்பட்டது. அதனை கட்டப்படுத்துவதற்கு எவ்விதமான நடவடிக்கைகளும் மாற்றம் காணவில்லை.

குறிப்பாக, இராணுவத்தினர் வர்த்தகத்தில் ஈடுபடுதல், விவசாயத்தில் ஈடுபடுதல் உள்ளிட்ட செயற்பாடுகள் நடைபெற்றன. வடக்கு, கிழக்கில் புலனாய்வாளர்கள் பின்தொடருகைரூபவ் வீடுகளுக்குச் சென்று விசாரணைகளை செய்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தன.

தற்போது இராணுவ மயமாக்கல் மிகவும் அதிகளவில் நடைபெறுகின்றது. இதனால் அரச சார்பற்ற மற்றும் சிவில் சமூகங்களின் செயற்பாடுகள் குறைவடைந்துள்ளன.

மேலும், அரச சார்பற்ற நிறுவனங்களும், சிவில் சமூகங்களும் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதில்லை. அவர்கள் மக்களுக்காகவே செயற்படுகின்றார்கள். ஜனநாயக விழுமியங்களுக்காக செயற்படுகின்றார்கள். அச்செயற்பாடுகளுக்கு அரசியல்வாதிகள் உதவிகளை வழங்குகின்றார்கள்.

ஆகவே அவ்விதமான தரப்பினர் ஆட்சியை மாற்றத்துக்காகச் செயற்படுகின்றார்கள் என்பது தவறானது. மேலும் ஜனநாயக ரீதியாக ஆட்சியை மாற்றுவதற்கான ஆணையை வழங்குவதற்கு மக்களுக்கு முழுமையான உரித்தும் உள்ளது என்பதை மறுதலிக்க கூடாது.

கேள்வி:- உங்களுடைய பாதுகாப்பு தொடர்பில் விசேட கரிசனைகளைக் கொண்டிருக்கின்றீர்களா?

பதில்:- நான் அறிந்த வரையில் அவ்விதமான நிலைமைகளை உணரவில்லை. ஆனால் வெளிவிவகார அமைச்சின் அறிக்கை வெளியான கையோடு பலர் எனக்கு தொலைபேசி அழைப்பினை எடுத்து என்னை ‘கவனமாக’ இருக்குமாறு கூறினார்கள். அதற்காக எனது பணிகளை இடைநிறுத்தி வைக்க முடியாது.

அதேநேரம், அண்மைய நாட்களில் சமூக ஊடகங்களில் என்னை மிகவும்மோசமாக விமர்சிக்கின்றார்கள். அதில் தவறான பிரசாரங்களும் செய்யப்படுகின்றன. இவ்வாறு என்னை இலக்கு வைத்த தனிநபர் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

கேள்வி:- மக்கள் பிரதிநிதிகள் தவறுகள் இழைத்தால் கேள்வி கேட்பேன் என்று வெளிவிவகார அமைச்சின் அறிக்கைக்கு அளித்த பதிலில் கூறியுள்ள நிலையில்ரூபவ் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கறுப்புச் சந்தையில் டொலர்களை கொள்வனவு செய்தமை, மற்றும் வடகொரியாவில் ஆயுதங்களை கொள்வனவு செய்தமை தொடர்பில் என்ன கூற விளைகின்றீர்கள்?

பதில்:- இந்தக் கருத்தினை பஷில் ராஜபக்ஷ வெளியிட்ட பின்னர் அதனை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மறுதலித்திருந்தார். எனினும் பஷில் ராஜபக்ஷ பிறிதொரு ஊடக சந்திப்பில் தனது மேற்படி கருத்தினை ‘மறுக்காது மறுத்திருக்கின்றார்’.

வடகொரியாவில் இருந்து ஆயுதங்கள் கொள்வனவு செய்வதற்கு ஐக்கியநாடுகள் சபை உட்பட சர்வதேச நாடுகள் பல தடைகளை விதித்துள்ள. அவ்விதமாக இருக்கையில் பஷில் ராஜபக்ஷ அவ்வாறு செய்திருந்தால் ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச நாடுகள் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதுபற்றிய முழுமையான விசாரணைகளை நடத்த வேண்டும்.

கேள்வி:- ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் இலங்கையில் தற்போதைய களயதார்த்த நிலைமைகள் மாற்றமடையுமா?

பதில்:- வரலாற்றில் பல ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றபோதும் அடிப்படையான விடயங்களில் மாற்றங்கள் ஏற்படவில்லை. குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள், அதிகாரங்கள் பகிரப்படுதல், அரசியல் தீர்வுரூபவ் பொருளாதார விடயங்கள் என்பவை முக்கியமானவை.

இவற்றைவிடவும் அரசியல் கட்டமைப்புக்கள் பொறிமுறைகளில் மாற்றங்கள் ஏற்படாது நீடிக்கின்ற தன்மைகள் மிகவும் முக்கியமான விடயமாக காணப்படுகின்றது. ஆகவே இவைதொடர்பில் மாற்றங்கள் ஏற்பட வேண்டியது மிகவும் முக்கியமானது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13