உள்நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழல் காரணமாக இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்தவர்களின் 30 பேர் எதிர்வரும் 18 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்த சமய அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமைச்சின் செயலாளர் வேலாயுதன் சிவஞானசோதி  தெரிவித்துள்ளதாவது, 

இலங்கையிலிருந்து சென்று அகதிகளாக தமிழகத்தில் தங்கியுள்ளவர்களை படிப்படியாக மீண்டும் அழைத்து வரப்படுகின்றனர். அதன் பிரகாரம் மதுரையிலுள்ள இலங்கை அகதி முகாம்களில் தங்கியுள்ளவர்களில் 30பேர் எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் தயாகம் திரும்பவுள்ளனர். இவர்களில் 13 ஆண்களும், 17 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.  

இவ்வாறு நாடு திரும்பவுள்ள அகதிகள் திருகோணமலை, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் மீளவும் குடியேற்றப்படவுள்ளனர். மேலும்  தாயகம் திரும்பும் அகதிகளுக்கு தேவையான இலவச விமான பயணச் சீட்டுகள் ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தினால் வழங்கப்படுவதோடு அவர்களுக்கான ஆரம்பகட்ட வாழ்வாதார உதவிகளும் வழங்குவதற்கு அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றார்.