(லியோ நிரோஷ தர்ஷன்)

பொது மக்கள்  கேட்பதை கொடுப்பதற்கு நான் தயாராக உள்ளேன். ஆளால் மாற்றத்திற்கான நேரம் வந்துள்ளது. நாட்டை பிளவுப்படுத்தும் ரணில் - மைத்திரி கூட்டு ஆட்சியை  வீட்டிற்கு அனுப்புவதே மக்களின் எதிர்பார்ப்பு. அதனை நிறைவேற்றுவதற்கு நான் தயாராக உள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்தார். 

அப்பம் சாப்பிட்டு இரவில் சதி செய்பவன் நானல்ல. எதனையும் வெள்ளிப்டையாகவே செய்வேன். அரசியலமைப்பு  ஊடாக நாட்டை  பிளவுப்படுத்தும் தற்போதைய நல்லாட்சியின் சதியை வேடிக்கை பாரக்க முடியாது. ஆகவே மக்கள் ஒன்றிணைந்து  வெற்றிப்பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 

இரத்தினப்புரியில் இடம்பெற்ற கூட்டு எதிர்க் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். 

போராட்டங்களுக்கு உயிர் கொடுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரத்தினப்புரி கூட்டம் சர்வமத வழிபாடுகளுடன் இடம்பெற்றது.  

பிற்பகல் 3மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் பின்வரிசையில் அமர்ந்திருந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களான  தினேஷ் குணவர்தன , வாசுதேவ நாணயக்கார , விமல் வீரவன்ச , உதய கம்மன்பில  உள்ளிட்ட கூட்டு எதிரணியில் உள்ள அனைவரும் கலந்து  கொண்டனர். 

இந்த கூட்டத்தில் கலந்து  கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 5.15 மணியளவில் வந்ததுடன் 6.15 க்கு மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

இதன் போது அவர் கூறுகையில் ,

இந்த மக்கள் தொகையை பார்த்து  பவித்ராவை விலக்கியது  முட்டாள்தனம் என கூட மைத்திரிபால சிறிசேன சிந்திக்கலாம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கியவர்கள்  மக்கள் செல்வாக்கை பெற்றுக் கொண்டுள்ளனர். 

கொள்கையில் இருந்தே  செயற்படுகின்றோம் .  ஆனால் தற்போது சுதந்திர கட்சியை  யானையின் பின்பக்கம் கொண்டு போய் வைத்துள்ளனர். 

எனக்கு  யாருடனும் தனிப்பட்ட  கோபம் இல்லை. நாட்டை  துண்டாட தயாராகின்றனர். அரசியலமைப்பில் உரிமைகளை பறித்து சதியை செய்கின்றனர். 

அம்பாந்தோட்டை துறைமுகத்தை ஏலத்தில் விடுகின்றனர். எனவே மாற்றம் வேண்டும். 

மக்கள் எதிர்பார்ப்பதை கொடுப்பதற்கு  நான் தயாராக உள்ளேன். அனைத்து தரப்புகளையும் ஒன்றிணைத்து செல்வதற்கு  தேவையான அனைத்து பணிகளையும் முன்னெடுப்போம். 

எதற்கும் அச்சப்பட வேண்டாம். பாராளுமன்றத்தில் எண்ணிக்கையை அதிகரிப்பது கடினமான விடயமல்ல. அதற்கு பல வருடங்களும் தேவையில்லை.  நல்லாட்சியில் உள்ள பலர் எம்முடன் வருவார்கள்.  இன்னும் கொஞ்ச காலம் பொறுத்தால் தெரியும். இனி அனைத்து அமைச்சர்கள் பின்னாலும் ஆள் அனுப்புவார்கள். 

நான் இரகசியமாக சதி செய்பவன் அல்ல. வெள்ளிப்டையானவன். எதனையும் வெளிப்படையாக செய்வேன்.  இரவில் அப்பம் சாப்பிட்டு சதி செய்ய மாட்டேன். மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை கொண்டு வர நான் தாயாராக உள்ளேன் .

மூழ்குகின்ற கப்பலில் யாரும்  பயணிக்கமாட்டார்கள். பாதுகாப்பை கருத்தில் கொண்டு தாவ முற்படுவர்.  இதுவே இனி நடக்க போகின்றது என  குறிப்பிட்டார்.