தொழிற்சங்கத்தினரின் கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து விரைவில் தீர்வு - கெஹலிய 

Published By: Digital Desk 4

08 Feb, 2022 | 10:09 PM
image

(எம்.மனோசித்ரா)

சுகாதார தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து வழங்கப்படக் கூடிய தீர்வுகள் துரிதமாக வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

குறித்த சங்கங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள சில கோரிக்கைகளுக்கு துரித தீர்வினை வழங்க முடியும் என்றும் , அவ்வாறான விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொழிற்சங்க பிரதானிகளுடன் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள சில கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கு 2 வார காலம் தேவைப்படுவதாகவும் , மேலும் சில கோரிக்கைகளுக்கு அமைச்சரவை அனுமதி அவசியமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார சேவையில் அனைத்து தொழிலும் அத்தியாவசியமானது என்றும் , அவற்றில் ஒரு சிலவற்றை மாத்திரம் விசேடமாகக் கருதி செயற்படுவதில்லை என்றும் , அனைத்து தொழில்களையும் மதிப்புடையவையாகவே கருதுவதாகவும் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போது காணப்படும் நிலைமையில் சில கோரிக்கைகள் தொடர்பான தீர்வுகளை வழங்குவதில் சிக்கல் காணப்படுவதாகவும் , குறிப்பாக வௌ;வேறு துறைகளுக்காக புதிய பதவிகளை உருவாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை இவ்வாண்டுக்குள் முன்னெடுக்காமலிருப்பதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.

சுகாதார சேவைக்கான சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளுக்காக பாரிய தொகை செலவிடப்படுகிறது. அவை ஏனைய துறைகளுடன் ஒப்பிடும் போது மிகவும் அதிகமாகும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு சுகாதார சேவைகளின் எதிர்காலத்திற்கான வினைத்திறனான திட்டமொன்றை உருவாக்குவதற்கு பல துறைகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவை நியமிக்க இதன் போது முன்மொழியப்பட்டதோடு அதற்கு தொழிற்சங்கங்களும் இணக்கம் தெரிவித்தன.

இதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள அதே வேளை , தொழிற்சங்க உறுப்பினர்களை இதன் அங்கத்தவர்களாகவும் நியமிப்பதற்கும் , அது குறித்த யோசனையை முன்வைக்குமாறும் தொழிற்சங்கங்களிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் சஞ்சீவ முணசிங்க , சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்