'வளையோசை கலகலவென' - மக்கள் மனங்களில் இடம்பிடித்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்

07 Feb, 2022 | 02:08 PM
image

குமார் சுகுணா 

இந்திய திரையுலகின் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் நேற்று 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தனது  92 ஆவது வயதில் காலமானார்.

இந்திய இசையுலகில் மெல்லிசை ராணியாக சுமார் அரை நூற்றாண்டு காலம் வலம் வந்தவர் லதா மங்கேஷ்கர்.

அவரின் தேன் சொட்டும் குரல் அதிகம் ஒலித்தது ஹிந்தியில் என்றாலும், தமிழ் உள்ளிட்ட 36 மொழிகளில் பல்லாயிரக்கணக்கான திரைப்படப்பாடல்களை பாடியுள்ளார். 

தமிழில் நேரடியாக மொத்தம் 5 பாடல்கள் பாடியிருந்தாலும் அதில் 3 பாடல்களே வெளியானது.

இசைஞானிஇளையராஜா இசையில் 1987இல் தமிழில் இவர் நேரடியாக பாடிய முதல் பாடல் 'கண்ணுக்கொரு வண்ணக்கிளி' படத்தில் 'இங்கே பொன் வீணை' என்ற பாடல்தான், அனால் அந்த படம் வெளியாகவே இல்லை.

அதன்பின்னர் அதே ஆண்டில் மீண்டும் இளையராஜா இசையில் பிரபு நடித்த 'ஆனந்த்' திரைப்படத்தில் ' ஆராரோ ஆராரோ' பாடலை பாடினார். அந்த பாடல் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

1988 ஆம் ஆண்டில் இளையராஜாவின் இசையில், கமல்ஹாசன் நடித்த 'சத்யா' திரைப்படத்தில் 'வளையோசை கலகலவென' மற்றும் 'இங்கேயும் அங்கேயும்' என இரு பாடல்களை பாடினார். 

இதில் இங்கேயும் அங்கேயும் பாடல் திரைப்படத்தில் இடம்பெறவில்லை, அனால் தற்போது அந்த பாடலையும் யூடியூப்பில் கேட்கலாம்.

இந்த படத்தில் இடம்பெற்ற வளையோசை பாடல் பட்டி தொட்டியெங்கும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 

அதே ஆண்டில் கார்த்தி நடித்த 'என் ஜீவன் பாடுது' படத்தில் 'எங்கிருந்தோ அழைக்கும்' என்ற பாடலை பாடியிருந்தார் அவர். 

இதுதான் அவர் கடைசியாக பாடிய தமிழ் பாடல்.

லதா மங்கேஷ்கர் தமிழில் இணைந்து பணியாற்றிய ஒரே இசையமைப்பாளர் இளையராஜா மட்டும்தான். 

1988இல் நாகார்ஜுனா நடித்த 'அகாரி போராட்டம்' படத்தில் 'தெல்ல சீரக்கு' என்ற பாடல் மூலமாக லதா மங்கேஷ்கரை தெலுங்கில் பாட வைத்த பெருமையும் இசைஞானி இளையராஜாவையே சேரும். 

தெலுங்கிலும் லதா மங்கேஷ்கர் ஒரே ஒரு நேரடிப்பாடலையே பாடியுள்ளார், மற்றும் மலையாளத்தில் ஒரு பாடலையும், கன்னடத்தில் 2 பாடல்களையும் பாடியுள்ளார்.

1987க்கு முன்பாக 1953 ஆம் ஆண்டே ' ஆண் முரட்டு அடியாள்' என்ற இந்தி டப்பிங் திரைப்படம் மூலமாக தமிழில் 4 பாடல்களை லதா மங்கேஷ்கர் பாடியுள்ளார், இதுவே தமிழில் ஒலித்த இவரின் முதல் பாடல்கள் ஆகும். 

இந்த படத்திற்கு நவுசாத் இசையமைத்திருந்தார், கம்பதாசன் பாடல்களை எழுதியிருந்தார். 5 நேரடி தமிழ்ப்பாடல்கள் , 4 டப்பிங் தமிழ் பாடல்கள் என லதா மங்கேஸ்கர் தமிழில் மொத்தம் 9 பாடல்களை மட்டுமே பாடியுள்ளார். 

அவர் தமிழில் பணியாற்றியுள்ள ஒரே இசையமைப்பாளர் இளையராஜா மட்டுமே ,  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து இந்தி பாடல்களை பாடியுள்ளார்.

இந்தியாவின் நைட்டிங்கேலாக கருதப்படும் லதா மங்கேஷ்கர் 1929ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் திகதி பிறந்தார். 

லதா மங்கேஷ்கர் தனது தந்தையிடம் இளம் வயதிலேயே இசை கற்றுக்கொண்டார். 

கடந்த 1942ஆம் ஆண்டு முதன் முதலாக “கிதி ஹசால்” என்ற மராத்தி பாடலைப் பாடினார். அதே ஆண்டில் திடீரென அவருடைய தந்தையும் இறந்து விடவே, குடும்பம் கடுமையான நிதி நெருக்கடிக்குள்ளானது.

அந்த நேரத்தில் இசையமைப்பாளர் குலாம் ஹைதர் என்பவர் “மஜ்பூர்” என்ற திரைப்படத்தில் பாட வாய்ப்பு அளித்தார். 

இது அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது எனலாம். 

இதனை தொடர்ந்து வந்த ‘மகால்’, ‘அந்தாஸ்’, ‘பர்சாத்’, ‘துலாரி’ போன்ற படங்கள் இவருக்கு பெரும் புகழை ஈட்டிக்கொடுத்தது. 

தந்தை இறந்த பிறகு மும்பை வந்த லதா மங்கேஷ்கர் 80 ஆண்டுகளாக திருமணமே செய்து கொள்ளாமல் இசைக்காகவே தன்னை  அர்ப்பணித்துக்கொண்டார்.

1942 முதல் சினிமா துறையில் பாடத்தொடங்கிய அவர், இந்தியாவின் அனைத்து இசையமைப்பளர்களுடன் இணைந்து பாடியுள்ளார்.

லதா மங்கேஷ்கருக்கு நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா' கடந்த 2001ஆம் வருடம் வழங்கப்பட்டது. திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் 1989ஆம் ஆண்டு லதா மங்கேஷ்கர் பெற்றார்.

1999ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2005 நவம்பர் வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 11ஆம் திகதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். 

அவர் உடல் நிலை தேறி வந்த நிலையில், திடீரென மீண்டும் அவரது உடல்நிலை மோசமடைந்தது. 

மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வந்தனர். லதா மங்கேஷ்கரின் சகோதரி ஆஷா போஸ்லே நேரில் சென்று  பார்த்து வந்தார். 

ஆயினும் நேற்று  காலை 8.12 மணிக்கு சிகிச்சை பலனலிக்காமல் உயிரிழந்தார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

லதா மங்கேஷ்கரின் மறைவையொட்டி 2 நாட்கள் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48