மேய்ச்சல்தரை விவசாயிகள் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்குவதில் இனரீதியான பாரபட்சம் காட்டப்படுகின்றதா என்ற சந்தேகம் வலுத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூபின் கால்நடைகளுக்கு உகந்த மேய்ச்சல் நிலம் ஒதுக்குதல் தொடர்பான தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கிலும், வடக்கு கிழக்கிற்கு வெளியிலும் மேய்ச்சல் தரைகள் தொடர்பான சர்ச்சையில் விவசாயிகளும், கால்நடை வளர்ப்பாளர்களும் பிரச்சினைகளை எதிர்கொண்டவண்ணம் இருக்கின்றனர். இந்த பிரச்சினை தொடர்ச்சியான தீர்வின்றி நீடித்த வண்ணம் இருக்கின்றது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இந்தப் பிரச்சினை 1976 ஆம் ஆண்டு முதல் நீடித்து வருகின்றது. கால்நடை வளர்ப்பாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையில் முரண்பாடுகளைப் போக்குவதற்கு நாம் பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தோம், கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தோம். 

ஒவ்வொரு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டங்களிலும் இவ் விடயம் தொடர்பாக பேசப்படுகின்றபோது தீர்வுகளை எட்டமுடியாதிருக்கின்றது. 

யுத்தம் உக்கிரமாக நீடித்திருந்த காலப்பகுதியில் கூட விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளை நெருக்கடிகளுக்கு மத்தியில் மேற்கொண்டிருந்தனர். 

ஆனால், யுத்தம் நிறைவடைந்த பின்னர் தற்போதைய காலகட்டத்தில் வனபரிபாலன இலாகா, வனவிலங்கு பாதுகாப்புப் பிரிவினர், தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களம் போன்ற அரச திணைக்களங்களின் நிறுவனங்கள் வர்த்தமானி அறிவித்தலை காரணம் காட்டி ஆக்கிரமிப்புகளும் மட்டுப்படுத்தல்களும் செய்யப்படுகின்றன.