முதல்வரின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக அமைச்சர்கள் கூறியதாகவும், எனவே வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

கடந்த 14 நாட்களாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை தமிழக அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோர் சந்திக்க முயற்சித்து வருகின்றனர்.

ஆனால், யாரையும் வைத்தியசாலை நிர்வாகம் சந்திக்க அனுமதிக்கவில்லை. இதற்கிடையில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் மட்டும் முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டு இருந்த வார்டுக்கு சென்றதாகவும், ஜெயலலிதா நலமுடன் இருப்பதாகவும் கூறினார். 

தொடர்ந்து, தென்னிந்திய திரைப்பட சங்க தலைவர் நாசர், திருமாவளவன், பொன்.ராதாகிருஷ்ணன், முத்தரசன், வேல்முருகன், தா.பாண்டியன் ஆகியோர் முதலவர் ஜெயலலிதாவை சந்திக்கச் சென்று திரும்பி வந்தனர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான், இன்று காலை அப்பல்லோ வைத்தியசாலைக்கு சென்றார். அவர், அங்கிருந்த அமைச்சர்களை சந்தித்து பேசியதாக கூறியுள்ளார்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ‘சுகாதார துறை அமைச்சரை சந்தித்து பேசினேன். முதல்வர் நலமுடன் உள்ளதாக தெரிவித்தார். 

தொடர்ச்சியாக முதல்வரின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக அமைச்சர்கள் கூறினார். இதுதான் நம்பிக்கைக்கு உரியது. அதிகாரப்பூர்வமானது. எனவே வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.