பல திசைகளிலும் நாதஸ்வர இசை ஒலிக்க வேண்டும் - மயிலை கார்த்திகேயன்நாதஸ்வர இசைக் கலைஞர்

01 Feb, 2022 | 02:45 PM
image

மங்கள வாத்தியம் என்ற சிறப்பு சொற்கள் மூலம் அடையாளப்படுத்தப்படும் இசைக்கருவியாகவும், துளை கருவி என வகைப்படுத்தப்படும் இசைக்கருவிகளில் முதன்மையானதாகவும் குறிப்பிடப்படுவது நாதஸ்வரம். 

இதன் நாத ஒலியை கேட்கும்போது எம்முடைய காதிற்குள் நேர்மறையான அதிர்வுகள் உட்கிரகிக்கப்பட்டு. 

உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஹோர்மோன்களின் உற்பத்தி நடைபெறுவதாக இசை சிகிச்சை நிபுணர்கள் சிறப்பித்துக் கூறுகிறார்கள்.

இத்தகைய இனிமை வாய்ந்த நாதஸ்வரத்தை வாசிக்கும் கலைஞராகவும், இன்றைய இளம் இசைக் கலைஞர்களில் தனித்துவமான வாசிப்பு பாணியுடன் இசைக்கலைஞராக வளர்ச்சி அடைந்து வரும் நாதஸ்வர இசைக் கலைஞர் மயிலை கார்த்திகேயனை அவர்களை சங்கத்திற்காக சந்தித்தோம்.

உங்களைப் பற்றி..?

சென்னையை சேர்ந்த எம்முடைய தந்தையார் மயிலை மோகன்ராஜ் நாதஸ்வர கலைஞர்.  எம்முடைய அப்பப்பா தவில் இசை கலைஞர். எம்முடைய தாய்மாமன் மங்களம் சீனிவாசன் அவர்களும் நாதஸ்வர கலைஞர் தான். 

எம்முடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்கலைஞர்கள் தான் இவர்களுடன் பால்ய பிராயத்திலிருந்தே நாதஸ்வர ஒலியை கேட்டு, அதில் லயித்து, அதனையே கற்று, நாதஸ்வர கலைஞராக இசைசேவையை செய்து வருகிறேன். 

இந்த இசைக்கருவி மீது எப்போது ஈர்ப்பு ஏற்பட்டது..?

குழந்தையாக இருக்கும்பொழுதே இந்த இசைக்கருவி மீது தனி கவனம் கவனமும், விருப்பமும் ஏற்பட்டு இதனை வாசிக்க முயற்சிக்கிறேன்.

எட்டு வயதுக்கு பின் முறைப்படி எனது தந்தையாரிடம் நாதஸ்வர வாசிக்க கற்றுக் கொண்டேன். அதன் பிறகு எம்முடைய தந்தையாருடன் தொடர்ச்சியாக ஆலயங்களுக்கு சென்று அவர் வாசிக்கும் பொழுது உடன் தாளம் வாசித்து, ஒத்து ஊதி ஒத்திகையில் ஈடுபட்டேன். 

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எம்முடைய உறவின்முறை இசைக் கலைஞரான மயிலை ராஜேந்திரன் அவர்களிடம் நாதஸ்வரத்தை கற்றுக்கொண்டேன். 

இதற்கான பயிற்சி சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோயிலில் நாளாந்தம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து நாதஸ்வர வித்வான் திருவாரூர் லட்சப்பா பிள்ளை மற்றும் அவருடைய வாரிசு பாலமுரளி அவர்களிடமும் இதன் நுணுக்கங்களை வாசிக்க கற்றுக் கொண்டேன். 

2015 ஆம் ஆண்டில் சென்னையில் உள்ள இசைக் கல்லூரியில் சேர்ந்தேன் அங்கு நாதஸ்வர கலைஞர் வியாசர்பாடி கோதண்டராமன் அவர்களிடம் இதன் நுட்பங்களை கற்றுக் கொண்டு, எம்மை மேம்ப்படுத்திக் கொண்டேன்.

நாதஸ்வரத்தை தவிர்த்து வேறு ஏதேனும் இசைக் கருவியை வாசிக்கத் தெரியுமா..?

தந்தையாருடன் ஆலயங்களில் நாதஸ்வரம் வாசிக்கும் போது, தவில் இசைக்கருவியை வாசிக்க வேண்டும் என்று விரும்புவேன். 

ஆனால் அப்பா நாதஸ்வர இசையில் மட்டும் ஒருமுகமான கவனம் செலுத்து என கேட்டுக் கொண்டதால், நாதஸ்வரம் இசைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி கற்றுக் கொண்டேன். 

இருப்பினும் சுய விருப்பத்தின் அடிப்படையில் தவில் இசைக்கவும் தெரியும்.

நாதஸ்வரம் என்ற இசைக்கருவியின் தனித்துவம் குறித்து..?

துளைக்கருவி, நரம்புக்கருவி, தோல் கருவி, கஞ்சக்கருவி என நான்கு வகையான இசைக்கருவிகளில் துளை கருவி என்ற பிரிவில் நாதஸ்வரம் இடம்பெறுகிறது. 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஆலயத்தில் வீற்றிருக்கும் ஆண்டவனுக்கு நாளாந்தம் நடைபெறும் பூசையின் போது 108 வாத்திய கருவிகள் இசைக்கப்பட்டதாகவும், அதில் நாதஸ்வரம் பிரதான இடம்பெற்றதாகவும் எம்முடைய முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். 

அந்தக் காலகட்டத்தில் 5 முதல் ஏழரை கட்டை ஸ்ருதியில் வாசிக்கும் வகையில் நாதஸ்வரம் வடிவமைக்கப்பட்டு, அதற்கு, திமிரி நாதஸ்வரம் என அழைக்கப்பட்டிருக்கிறது. 

1920ஆம் ஆண்டில் நாதஸ்வர வித்வான் திருப்பாம்பரம் சுவாமிநாத பிள்ளை மற்றும் 1932 ஆம் ஆண்டில் நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் சீரிய முயற்சியால் இரண்டரை கட்டை சுருதியில் வாசிக்கும் வகையில் நாதஸ்வரம் வடிவமைக்கப்பட்டு அதனை இடைப்பாரி என்றும் குறிப்பிட்டனர். 

இதனைத் தொடர்ந்து அவர் அதே ஆண்டில் இரண்டு கட்டை சுருதியில் வாசிக்கும் வகையில் பாரி நாதஸ்வரம் என்ற நாதஸ்வர கருவியை வடிவமைத்து இசைக்கத் தொடங்கினார்.  இன்றுவரை அந்த நாதஸ்வரமே இசைக்கப்பட்டு வருகிறது.

உங்களுடைய முதல் கச்சேரி எங்கு எப்போது நடைபெற்றது..?

ஒன்பது வயதாக இருக்கும் பொழுது எம்முடைய பாடசாலையில் நடைபெற்ற வைபவத்தின்போது நாதஸ்வரத்தை வாசித்திருக்கிறேன்.  சக மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் பாராட்டியதால் அதை மறக்க இயலாது.

உங்களுடைய இசை பயணம் குறித்து..?

2015 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பொங்கல் விழாவின்போது வாசித்திருக்கிறேன். அதனைத் தொடர்ந்து எம்முடைய குருநாதர் வியாசர்பாடி கோதண்டராமன் அவர்களுடன் அமெரிக்காவிலுள்ள கிளீவ்லேன்ட் என்னும் இடத்தில் நடைபெற்ற தியாகராஜ ஆராதனை இசை விழாவில் பங்குபற்றியிருக்கிறேன். 

நியூசிலாந்து நாட்டிலுள்ள விநாயகர் ஆலயத்தில் நடைபெறும் பத்துநாள் பிரம்மோற்சவத்தில் பங்குபற்றி வாசித்திருக்கிறேன். ஒவ்வொன்றும் மறக்க இயலாத அனுபவங்கள்.

எம் மாதிரியான இசை நிகழ்ச்சிகளில் பங்குபற்றி சேவையாற்றி வருகிறீர்கள்..?

திருமண விழாக்கள், ஆலய உற்சவங்கள், வாய்ப்பாட்டு இசைக்கச்சேரிகள், பரதநாட்டிய நிகழ்வுகள்., ஃப்யூஷன் இசை நிகழ்ச்சிகள் என அனைத்து வகையான கச்சேரிகளிலும் வாசித்திருக்கிறேன். 

மும்பையில் உள்ள சண்முகானந்தா ஹாலில் இசைமேதை எம் எஸ் சுப்புலட்சுமி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் வயலின் மேதை கன்னியாகுமரி அவர்களுடன் இணைந்து வாசித்திருக்கிறேன். 

தவில் என்ற பக்க வாத்தியக் கருவியுடன் மட்டுமல்லாமல் ஏனைய பக்க வாத்தியக் கருவிகளுடன் இணைந்தும் வாசித்திருக்கிறேன்.

மறக்க இயலாத அனுபவம் குறித்து..?

சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற ‘பல்லவி வாசிப்பு’க்கான இசைப் போட்டியில் பங்குபற்றி முதல் பரிசு வென்றதை மறக்க இயலாது.

உங்களை அடையாளப்படுத்திய ‘சஹானா’ குறித்து..?

ஒருமுறை திருமண நிகழ்வில் ஊஞ்சல் சடங்குக்குரிய இசையை வாசித்துக் கொண்டிருந்தேன். 

அப்போது எம்முடைய வாசிப்பை பாராட்டி சமூக வலைதளம் நடத்தும் மகேஷ் என்பவர் எம்மை அணுகி, இந்த வாசிப்பை எங்களுடைய இணையதளத்திற்காக பிரத்தியேகமாக வாசித்து தர இயலுமா? என கேட்டார். அவர்கள் விருப்பத்தை ஏற்று, பதிவரங்கத்தில் சென்று வாசித்துக் காட்டியபோது, எம்முடைய வாசிப்பில் சகானா வாசிப்பு அவர்களுக்கு பிடித்துப்போய், அதனை மட்டும் பதிவு செய்தார்கள். 

அதன் பிறகு அதனுடன் இசைக்கோர்வை செய்து சமூக வலை தளத்தில் வெளியிட்டனர். அதனை பார்வையாளர்கள் பாராட்டியதால் சஹானா என்பது என்னுடைய அடைமொழியாக ஒட்டிக்கொண்டது.

இதற்கான பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களைப் பற்றி..?

ஆலயம் மற்றும் திருமண விழாக்களில் நாதஸ்வர கலைஞர்கள் வாசிக்கும் போது அதனை எளிதாக கடந்து விடுவார்கள். 

ஆனால் அவர்களுக்கு பிடித்த பாடல் வரிகளுடன் கூடிய பாடலை இசைக்கும்போது அவர்களின் கவனம் எங்கள் மீது இயல்பாக திரும்பும். 

தற்பொழுது இணையதளம், பிரத்தியேக வலைத்தளம், ஓன்லைன் மூலமாக கேட்கக் கூடிய வசதிகள், சவுகரியங்கள் இருந்தாலும், அதிகாலை நேரத்தில் ஆலயங்களின் வாசிக்கும் நாதஸ்வர கலைஞர்களின் வாசிப்பை நேரலையாக கேட்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.

உங்களுடைய எதிர்கால திட்டம் என்ன?

நாதஸ்வர இசையை திருமண விழாக்கள், ஆலய உற்சவங்களைக் கடந்து இதன் எல்லையை விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதற்கான திட்டங்களையும் வகுத்து வைத்திருக்கிறேன். 

மேலும் இசைத்துறையில் பிரபலமான கலைஞர்களுடன் இணைந்து மேடையில் வாசிக்க வேண்டும் என்ற விருப்பமும் உண்டு. அதே தருணத்தில் நாதஸ்வரம் மூலம் என்னென்ன கீர்த்தனைகளை வாசிக்க இயலும் என்ற ஆய்வு செய்யும் திட்டமும் உண்டு.

இளம் கலைஞர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பும் விடயம் என்ன?நாதஸ்வர இசைக்கருவியை இசைக்க வேண்டுமென்றால் மூச்சுப் பயிற்சி அவசியம். 

சாகித்தியங்களை துல்லியமாக நாதஸ்வர ஒலியில் எழுப்ப வேண்டும் என்றால் நாளாந்தம் அசுரத்தனமான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். 

இசைத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய உத்திகளை உடனடியாக உட்கிரகித்துக் கொண்டு, அதனை நாதஸ்வரத்தில் வாசிக்க இயலும் என்பதை நிரூபிக்க வேண்டும்.

(சந்திப்பு: கும்பகோணத்தான்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இறந்த தம் மூதாதையருடன் இயல்பாக பேசும்...

2024-04-18 12:15:34
news-image

வவுனியா, கோதண்டர் நொச்சிக்குளத்தில் நாகர் கால...

2024-04-18 10:23:08
news-image

'குரோதி' வருடப்பிறப்பு - சுப‍ நேரங்கள் 

2024-04-11 14:47:43
news-image

திருக்கோணேஸ்வரத்தில் சாமி தூக்கிய சுற்றுலா பயணிகள்...

2024-04-06 11:06:59
news-image

சித்தி விநாயகர் கும்பாபிஷேகம்

2024-03-28 16:01:41
news-image

நல்லூர் மனோன்மணி அம்மன் ஆலய பங்குனி...

2024-03-19 16:13:26
news-image

ஈழத்து லிங்காஷ்டகம் : மறந்துபோன வரலாறுகள்!...

2024-03-10 13:57:26
news-image

இன்று மகா சிவராத்திரி!  

2024-03-08 11:05:25
news-image

இன்று சர்வதேச தாய்மொழி தினம் 

2024-02-21 12:08:36
news-image

சிவானந்தினி துரைசுவாமி எழுதிய தந்தை -...

2024-02-07 13:18:00
news-image

வாழ்வில் பயத்தை அகற்றும் கம்பகரேஸ்வரர் :...

2024-01-29 17:43:35
news-image

அயோத்தி ராமர் கோவிலை இந்தியப் பிரதமர்...

2024-01-22 15:53:05