
நாட்டில் நிலவும் கடும் வரட்சியான காலநிலை காரணமாக குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மோசமான குடிநீர்த் தட்டுப்பாடு காரணமாக 4 இலட்சத்து 53 ஆயிரத்து 881 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் 181 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை பாராளுமன்ற கூட்டத் தொ டரின் போது பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23 இன் கீழ் 2 இல் தினேஷ் குணவர்தன வினவிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்;
நாட்டில் நிலவும் கடுமையான வரட்சி காரணமாக பொலன்னறுவை, அநுராதபுரம், திருகோணமலை, அம்பாறை உள்ளிட்ட 16 மாவட்டங்கள் மோசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக நாம் பரவலாக ஆராய்ந்துள்ளோம். இதேவேளை தற்போதைக்கு 46 ஆயிரத்து 624 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளன. குடிநீர்த் தட்டுப்பாடுகளின் காரணமாக நீர் வழங்கல் நடவடிக்கைக்கு 1080 தண்ணீர் தொட்டிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலை நாட்டில் 16 மாவட்டங்களில் நிலைமை மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதற்காக நீர் தேக்கங்களில் 17 மீற்றர் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
வரட்சியான கால நிலை காரணமாக 20 மாவட்டங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 18 ஆயிரத்து 524 குடும்பங்களை சேர்ந்த 4 இலட்சத்து 53 ஆயிரத்து 881 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குடிநீர்த் தட்டுப்பாடு பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்ய தயாராகவே உள்ளது. எவ்வாறாயினும் கால நிலையில் மாற்றம் காணும் என வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கு 16 மாவட்டங்களுக்கு 181 இலட்சம் ரூபாவை தற்போது ஒதுக்கியுள்ளோம்.
வரட்சியின் காரணமாக மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.