தை அமாவாசை  தர்ப்பணம் மட்டுமல்ல தானமும் செய்யுங்கள்

29 Jan, 2022 | 03:18 PM
image

வேர்களைப் பொறுத்தே விருட்சங்களின் உறுதி முடிவு செய்யப்படும் என்கிறது ஆன்மிகம். 

ஆம் ஒருவனின் சிறப்பான வாழ்க்கை என்பது அவனுடைய முன்னோர்களின் வினைப்பயனைக் கொண்டும் முடிவு செய்யப்படுகிறது.

ஒருவன் அவனுடைய முன்னோர்களையும், முன்னோர்களின் அம்சமான குல தெய்வத்தையும் வணங்காது விட்டால், மற்ற தெய்வங்களை வணங்கியும் பலனில்லை என்கின்றன நம்முடைய சாஸ்திரங்கள். ஆத்ம சாந்தி அடையாத தன்னுடைய முன்னோர்களுடைய மனக்குறையைத் தீர்க்கும் பொருட்டு பகீரதன் கடும் முயற்சி எடுத்து கங்கையை பூமிக்கு வரவழைத்து தம் முன்னோர்களின் ஆன்மாவை சாந்தப்படுத்தினான் என்கிறது புராணம்.

சாதாரண மானிடரான நாம், நம்முடைய முன்னோர்களின் ஆன்மாவை குளிர்விக்கப் பெரும் பிரயத்தனங்களைச் செய்ய வேண்டியதில்லை.

ஆண்டுக்கு மூன்று முறை பித்ருக்களுக்கான வழிபாட்டைச் செய்தாலே போதும் என்கின்றன சாஸ்திர நூல்கள். அதில் முக்கியமான தினம் தை அமாவாசை.

பிதுர் லோகத்தில் இருந்து ஆடி அமாவாசை தினத்தில் கிளம்பி வரும் பித்ருக்கள் தங்களுடைய வழித்தோன்றல்களை ஆசீர்வதித்து மீண்டும் மேலோகம் செல்லும் திருநாளே தை அமாவாசை நாள். 

இந்த நாளில் நாம் நம்முடைய பித்ருக்களுக்கான வழிபாட்டை முறையாகச் செய்து, சிறிய அளவிலான தானங்கள் செய்து மகிழ்வித்தால் பெரும் நலங்கள் நம்மை வந்தடையும். 

தை அமாவாசை நாளில், நாம் செய்யும் ஒவ்வொரு வழிபாடும் நம் பித்ருக்களுப் போய்ச் சேரும். இதனால் அவர்களுடைய ஆசிகளும் நமக்கு வந்துசேரும். 

அவை நமக்கு மட்டுமின்றி, நம் சந்ததிகள் நன்கு தழைத்தோங்க நலலாசிகளும் நமக்கு கிடைக்கப்பெறும்.தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு வழிபாடு செய்யாமல் அலட்சியமாக இருப்பின், அவர்களின் சாபத்திற்கு ஆளாகிவிட்டால் தெய்வத்தால்கூடக் கருணை காட்ட முடியாது என்கிறது கருட புராணம்.

தை அமாவாசை நாளில் திதி, தர்ப்பணம், படையல், ஆலய வழிபாடு, தீர்த்தமாடுதல் மட்டுமின்றி மேலும் சில சடங்குகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. 

பஞ்சகவ்யப் பிரசாதம், பூசணி தானம், வாழைக்காய் சமையல் போன்றவை சில. முக்கியமாக பித்ருக்கள் வழிபாட்டை 'அபரான்ன காலம்' எனப்படும் பகல் 1:12 முதல் 3:36 வரையிலான நண்பகல் காலத்தில் செய்ய வேண்டும் என்பது நியதி. 

இந்த காலத்தில் தான் பித்ருக்கள் பூமிக்கு வந்து நமது வழிபாட்டை ஏற்கிறார்கள். மேலும் 'குதப காலம்' என அழைக்கப்படும் நண்பகல் 11:36 முதல் 12:36 மணி வரையிலான காலத்தில் முன்னோர்களுக்கு வழிபாடு செய்வதும் நல்லதே. 

ராகு காலம், எமகண்டம் போன்ற விஷயங்கள் பித்ருக்கள் வழிபாட்டிற்கு தொடர்பில்லை என்கிறது சாஸ்திரம்.

இயலாதோருக்கு தானம் கொடுப்பதன் மூலம் நாம் செய்த பாவங்கள், கர்மவினைகள், தீவினைகள் நீங்கும். அன்னதானம், வஸ்திரதானம் செய்ய முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.

இந்தியாவில் பித்ரு ஸ்தலங்கள் 7 உள்ளன. 

அவை, காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, ஏழாவதாக திலதர்ப்பணபுரி.ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள் இராமேஸ்வரம், திருப்புல்லானி மற்றும் கயா அக்ஷயவடம் போன்ற இடங்களில் தில ஹோமம் செய்வது தர்ப்பணம் செய்வது பித்ரு தோஷத்தை போக்கும் என்கிறது சாஸ்திரம்.

தை அமாவாசை நாளில் கடற்கரையிலும் நதிக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் முன்னோருக்கு தர்ப்பணம் செய்வார்கள். கொரோனா கால கட்டுப்பாடுகள் அதிகம் உள்ளதால் நாம் புனித தலங்களுக்கு செய்ய முடியாவிட்டாலும் வீட்டில் இருந்தும் வழிபட்டு தர்ப்பணம் செய்யலாம்.

அதாவது வீட்டில் இருக்கும் நீரை கங்கா சுலோகம் கூறுவதன் மூலம் அதைப் புனிதப்படுத்தி நீராடி அதன் பயனை  அடையலாம். 

முன்னோர்களின் வருட திதியை மறந்தவர்கள்,விடுபட்டு விட்டதென கவலை கொள்வோர்கள் அனைவரும் தை அமாவாசை,ஆடி அமாவாசை போன்ற தினங்களில் தர்ப்பணம் செய்வதன் மூலம் விடுபட்டுப்போன போன பயன்களை அடையலாம்.  

எனவே நம் முன்னோர்களுக்கான இப்புனித நற்தினத்தில் அவர்களின் நல்லாசி வேண்டி நாம் ஆற்றும் தர்ப்பணங்கள்,தானங்கள் அனைத்தும் நம் சந்ததியினரின் நன்மைக்காகவே என எண்ணி இதயசுத்தியுடன் விரதமிருந்து நற் பலனை அடைவோமாக.

ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right