(எஸ் .என் .நிபோஜன் )

முல்லைத்தீவு  வசந்திபுரம் கிராமத்துக்கு பின்புறமாக உள்ள காட்டில் திடீர் என பரவிய  தீயினால் சுமார் இருபது ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளது.

இன்று  பிற்பகல்  ஒருமணியளவில்  முறிகண்டி கோவிலுக்கு முன்புறமாகவும்  வசந்திபுரம் கிராமத்து பின்புறமாகவும் உள்ள  காட்டில் திடீர் என தீ பரவியுள்ளது.

குறித்த பிரதேசத்தினை  அண்மித்ததாக  இருக்கின்ற இரண்டு இராணுவ முகாமில் காவல்கடமையில் இருந்தவர்களால் அவதானிக்கப்பட்டதனை  அடுத்து  குறித்த பகுதிக்குச் சென்ற இராணுவத்தினர்,  உழவு இயந்திரங்கள் மற்றும் இராணுவ நீர்த்தாங்கி வாகனங்களின் துணையோடு சுமார்  இரண்டு மணி நேரத்துக்குள் தீ  மக்கள் குடியிருப்பினுள் பரவாதவாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இருப்பினும்  குறித்த காட்டுப்பகுதியில் சுமார் இருபது ஏக்கர்வரை எரிந்து நாசமாகி உள்ளது. குறித்த பிரதேசத்தை இராணுவத்தினர் மற்றும் பொது மக்கள் பயன்படுத்துகின்றமையால் குறித்த தீ இயற்கையால்  ஏற்பட்டதா அல்லது எவராவது தீ மூட்டினார்களா என இதுவரை அறியப்படவில்லை.

அத்துடன் குறித்த பகுதியில் வேகமாக  தீ பரவிக்கொண்டிருந்தமையால் பாதுகாப்புக் காரணங்களுக்காக  செய்திசேகரிக்கச் சென்ற செய்தியாளருக்கு குறித்த பகுதிக்குள் சென்று செய்தி சேகரிக்க இராணுவத்தினரால் அனுமதி மறுக்கப்பட்டு சிறிது நேரத்தின் பின்னரே வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.