"மண்ணைவிட்டு போகாதே" என்ற நாவலை தந்தவரின் நினைவு தினம்

27 Jan, 2022 | 03:55 PM
image

"செய்தோம் என்பதனை விட நீங்கள் இங்கே செதுக்க வேண்டிய பாறைகள் எத்தனையோ.... ஆகவே மாலை வாங்க மேடை ஏறுவதிலும் பார்க்க மலைகளிலும் கொஞ்சம் ஏறிவாருங்கள்" -  மல்லிகை சி.குமார்  

                                                                                                                         

ஆயுதங்களை கொண்ட கிளர்ச்சியாக இருந்தாலும் அகிம்சை முறையான கிளர்ச்சியாக இருந்தாலும் அதற்கு வலு சேர்க்கும் மிக பெரிய கூர்மைான ஆயுதம் பேனை முனைகளாகதான் இருந்துள்ளன. இன்றும் உள்ளன. 

பேனா முனை என்றால் அது எண்ணங்களின் , வார்த்தைகளின் சக்தி என்றே கூற வேண்டும்..அந்த வகையில்,  150 ஆண்டுகளாக இந்த நாட்டில் அடிமைகளாக்கப்பட்ட ஒரு சமூகத்தின் விடுதலைக்காக பல குரல்கள் ஒலித்தன. இன்னும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன.  

இவர்கள் கேட்பது தனி நாடல்ல சக உரிமை மட்டுமே.   கூடைகளை மட்டுமே சுமந்து லயத்து சிறைக்குள் கூனி குறுகியவர்கள் இன்று கல்வி தொட்டு பல விடயங்களிலும் முன்னேற்றம் கண்டு வருகின்றனர். 

இதற்கு காரணம்,  இந்த அறிவு எழிச்சிக்கு காரணம்  பல பேனை முனைகளின் புரட்சிதான். அந்த வகையில் அந்த மக்களுக்காகவே வாழ்ந்து அந்த மக்களின் சிந்தனையோடு மடிந்த மகா கலைஞன் மல்லிகை சி.குமாரை நாம் மறந்து விட முடியாது. 

அவரது எழுத்துக்கள் இந்த சமூக முன்னேற்றத்துக்கான வித்துக்கள். 

மண்ணைவிட்டு போகாதே என்று தனது நாவலை தந்தவரின்  நினைவு தினம்  இன்று ஆகும். 

'எழுதி குவிக்க வேண்டும் என்பதற்காக எதையும் எழுதாமல் இதைத்தான் எழுதவேண்டும். என் தொழிலாள தோழர்களுக்கு எப்படியும் இதை சொல்ல வேண்டும் என்பதில் என்கவனம்  எப்பொழுதும் உண்டு' என்று தனது வேடத்தனம் நூலில் கூறியுள்ளார். அது உண்மைதான்.

இலக்கியவாதிகள் என்போர் தனது குடும்பத்திற்கோ, தன்னை சார்ந்த உறவு கட்டமைப்புக்குள்ளோ கட்டுப்பட்டவர்கள்; கிடையாது. 

அவர்கள், ஒரு மகா சமூகத்தின் குரலாய், மாபெரும் உந்து விசையாக, தன் பேனை முனைகள் மாற்றானுக்கு பகடைக்காய்களாய்; ஆகிவிடக்கூடாது என்பதில் ஆணித்தனமாக இருப்பார்கள். 

தன் பேனை சிந்தும் மை துளிகள் வாளின் வீச்சை விட கூர்மையாய் இருக்க வேண்டும் என்பதில் கண்டிப்பு கொண்டவர்கள், அரசியல்வாதிகளுக்கு சாமரம் வீசாமல் எதிர்நின்று கவியாயுதம் படைப்பாரகள். 

இவையாவும் ஒருங்கே பார்த்தால் ஐயம் தேவையில்லை மலையகத்தின் மக்கள் கவிஞன்  என்றால்  அது மல்லிகை சி.குமார்தான்.  

பேனையை தான் சார்ந்த சமூகத்தின் விடுதலைக்கான ஆயுதமாகவே பயன்படுத்தியவர்.

தலவாக்கலை,பெரிய மல்லியப்பூ தோட்டத்தில் சின்னையா கதிராய் தம்பதிகளுக்கு மூன்றாவது பிள்ளையாக பிறந்தவர். 

ஆரம்ப காலம் முதலே இவரை சார்ந்தவர்கள் வாசிப்பு துறையிலும் கலைத் துறையிலும் ஈடுபட்டதனால் இவர் இயல்பாகவே அத்துறைச் சார்ந்து ஈர்க்கப்பட்டார்.

குறிப்பாக  இவரின் தாய்மாமன்மார்கள் கல்கி,ஆனந்த விகடன் போன்ற சஞ்சிகைகளையும் மற்றும் அக்காலத்தில் வெளிவந்த ஏனைய இதழ்களையும் அறிமுகஞ் செய்தது இவருக்கு வாசிப்பின் மீது தீரா தாகத்தை உருவாக்க காரணமாய் அமைந்தது.

 தனது பாடசாலை கல்வியினை சுமன மகா வித்தியாலயத்தில் பயின்றார். அக் காலத்தில் அப்பாடசாலையில் வெளிவந்த 'தமிழோசை' என்ற சஞ்சிகையில் தனது ஆக்கங்களை முதன்முதலாக வெளியிட்டிருக்கிறார். 

இவரின் ஓவியம்,கவிதைகள்,கதைகள் என்பன தமிழோசை சஞ்சிகையை அக்காலத்தில் அலங்கரித்துள்ளன.  

குடும்ப சூழ்நிலை காரணமாக  இவர் சாதாரணத்தரத்தோடு தனது  கல்வியை இடைநிறுத்தினார். ஆனால், தான் விட்ட கல்வியை தனது பிள்ளைகளுக்கு கொடுத்து, அவர்களை பட்டதாரிகளாக்கியுள்ளார்.

இவர் எழுதிய முதலாவது சிறுகதை 'மது வேட்டையாகும்'  14 வயதில் எழுதப்பட்ட இந்த கதையே   இவரது முதல் சிறுகதையாகும். அதாவது பாடசாலையை விட்டு விலகிய மாணவன் ஒருவன் எவ்வாறு மதுவினால் திசைத்திருப்படுகிறான் என்ற கருப்பொருளில் அந்த சிறுகதையை எழுதியுள்ளார்.

இவர் கவிஞர் கதையாசிரியர் , நாவலாசிரியர் நாடக கலைஞர் மட்டும் அல்ல,  மிகசிறந்த ஓவியரும் கூட.  1963 இல் பூரணி என்ற இவரது சிறுகதை வீரகேசரி நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது. 

அதற்கான ஓவியத்தினையும் ,இவரே வரைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

குறிப்பாக சிறு வயதில் கல்கி மற்றும் ஏனைய சஞ்சிகைகளில் ஓவியம் வரையும் 'சந்திரா' மற்றும் 'மணியம்'; போன்ற ஓவியர்கள் மூலம் ஈர்க்கப்பட்டு தானும் ஓவியம் வரைந்ததாக  கூறிய இவர்,  அக்காலத்தில் இந்தியாவில் இருந்த 'வர்ணம்' என்ற ஓவிய ஆசிரியரிடம் தபால் மூலமாக ஓவியம் தொடர்பான நுணுக்கங்களையும்  பயின்றுள்ளார். 

ஜெர்மனிய நாட்டில் நடைபெற்ற ஓவிய கண்காட்சியில் இவரது  ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேடை நாடகங்கள்,வானொலி நாடகங்கள் என்பனவற்றுடன் 1970-1975 காலப்பகுதியில் 'மல்லிகை' என்ற எழுத்துப் பிரதியை தோட்ட இளைஞர்களுடன் இணைந்து மாதத்திற்கு ஒரு இதழ் என வெளியிட்டிருக்கிறார்கள், ஒரு 80 பக்க அப்பியாச கொப்பியில் இந்த மல்லிகை இதழ் வெளிவந்துள்ளது.

வீட்டின் வறுமை நிலை காரணமாக தனது பருவ வயதில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்ய தொடங்கியுள்ளார். சுமார்  ஒன்றரை  வருடங்கள் தொழிலாளியாக இருந்தவர்,  

தொழிலாளர்கள் பட்ட துன்பங்கள் ,அவர்கள் வாழ்வியல் போராட்டம், அடிமை முறை ,ஆதிக்க வர்க்கத்தின் அடக்குமுறை, தொழிலாளர்களின வறுமை, சந்தோசம் ,இன்பம் கொண்டாட்டம் இவை எல்லாவற்றையும் களத்தில் இருந்து கொண்டே அனுபவித்தார்.  அங்கிருந்துதான்,  தனது கதைக்கான கருவையும்,பாத்திரங்களையும் இவர் பெற்றுக்கொண்டார். 

இவரது கதைகள் அனைத்துமே தோட்டத் தொழிலாளர்களின் துயர வாழ்வினை உலகிற்கு வெளிக்கொணர்வதற்கு காரணமாய் இருந்தது  இக்காலப்பகுதியில் இவர் பெற்றுக்கொண்ட அனுபவங்களே ஆகும்.

ஒருமுறை வேலை முடித்து விறகு கட்டு (மிளாரு) கட்டிக் கொண்டு வரும் போது அன்றைய தோட்ட கண்டெக்டர் முத்துசாமி 'டேய்! நீ எப்படி எனக்கு கூறாமல் விறகு பொறுக்கி வருகிறாய் நீ எங்கேயோ யாருக்கும் தெரியாமல் தான் விறகு வெட்டிக்கொண்டு வருகிறாய்' என அவருக்கு உரிய வசை மொழியில் இவரை வாழ்த்தியுள்ளாராம். 

இது அப்பாவின் மனதில் ஆதிக்க வர்க்கத்திற்கு மக்கள் எவ்வாறு அடிமைப் படுத்தப் படுகின்றனர் என கேள்வி எழுப்ப இதனை வெளி உலகிற்கு சொல்ல வேண்டும் என எத்தனித்தார் உடனே 'ஒரு கட்டு விறகு' என்ற தலைப்பில் முத்துசாமி கண்டெக்டரை 'சாமி முத்து' என மாற்றி அன்றைய நேரத்தில் தோட்டப் பகுதியில் மிகவும் பிரபல்யம் பெற்றிருந்த சிந்தாமணி இதழுக்கு ஒரு சிறுகதையை அனுப்பியுள்ளார்.

ஓரிரு நாட்களில் ஒரு கட்டு விறகும் வெளிவர, முத்துசாமி கண்டெக்டர் முகத்தில் எள்ளும் கொள்ளுமாக வெடித்தது சிதறியதாம் மறுபுறம் தோட்டத்தில் இருந்த சக தொழிலாளிகளுக்கு இது உற்சாக பானமாக மாறிப்போனது. 

கங்காணி முதல் தோட்ட துறை வரை அவரை  கண்டித்து மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனராம்.

பின்னர் தேயிலை தொழிலை விட்டுவிட்டு அரசாங்க மிருக வைத்திய சாலையில் பணிபுரிய சென்றுள்ளார். மிருக வைத்திய சாலையில் பணிபுரியும் காலப்பகுதியில் இவரின் முதலாவது கவிதைத் தொகுப்பான 'மாடும் வீடும்' வெளிவந்தது. 

இருப்பினும் இவர் முதலாவதாக ஒரு சிறுகதைத் தொகுப்பினை வெளியிடவே உத்தேசித்திருந்தார் ,  சிறுகதைகளை வெளியீடு செய்வதாக கூறி கதைகளை வாங்கிச் சென்றவர்களிடமிருந்து இவருக்கு எந்த பதிலும் வராமல் போகவே ஆங்காங்கே பத்திரிக்கைகளிலும் ஏனைய சஞ்சிகைகளிலும் வெளிவந்த கவிதைகளை ஒருங்கிணைத்து மாடும் வீடும் என்ற தொகுப்பினை 1995 ஆம் ஆண்டில் 'கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவம்' உதவியின் ஊடாக வெளியிட்டார்.

மாடு,வீடு சாதாரணமாக தேயிலை தோட்ட மக்களின் வாழ்வியலோடு இணைந்த இரண்டு; அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், இந்த தலைப்பினையே சற்று ஆழமாக அவதானித்தால் அது அன்றைய நாட்களில் ஆட்சியில் இருந்த மலையக மந்திரிகளை சூட்சுமமாக சுட்டிக்காட்டும் குறியீட்டு சொல்லாக பயன்படுத்தியிருப்பார். 

இக்கவிதைகளில் பல அரசியல் விவாதங்களை அங்கதச் சுவையுடன் வெளிகொணர்வதாகவும் சில தீர்க்கதரிசன கனவுகளை நம்மிடம் விட்டுச் செல்வதாகவும் அமைந்திருக்கும்.

இத் தொகுப்பு வெளிவந்து 'மாடும் வீடும்' என்ற தலைப்பில் ஈர்க்கப்பட்ட அரசியல்வாதிகள் உடனடி சன்மானமாக மல்லிகை சி.குமாரை  தலவாக்கலையில் இருந்து நுவரெலியா மிருக வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்ததுடன், அன்றைய வருட சாகித்திய விருது விழாவிலிருந்தும் இவரின் பெயரை நீக்கிவிட்டனர். 

ஆனால் ஒரு கலைஞனாக அதனை இன்முகத்துடன் இவர் ஏற்றுக்கொண்டார். ஒரு சிறிய கவிதைத் தொகுப்பு இன்றளவும் எம் சமூகத்தில் தாக்கத்தை செலுத்தி வருகின்றது என்று எனக்கு இன்றும் ஆச்சரியமாக இருக்கிறது.

“ஆயிரம் கிளிஞ்சல்களுக்கு மத்தியில் ஒரு சிப்பியும் 

ஆயிரம் சிப்பிகளுக்கு மத்தியில் ஒரு முத்தும்

ஆயிரம் முத்துக்களுக்கு மத்தியில் ஓர் இடம்புரி முத்தும்

ஆயிரம்இடம்புரி முத்துக்களுக்கு மத்தியல் ஒரு வலம்புரி முத்தும்” கிடைக்கும் என்பார்கள்

குமாரின் கவிதைகள் அனைத்தும் வலம்புரி முத்துக்கள் என கவிபேரரசு வைரமுத்து மாடும் வீடு பற்றி  கூறியுள்ளார். ஆனால்  உண்மையில் மல்லிகை சி.குமாரின் அனைத்து படைப்புகளும் வலம்புரி முத்துக்கள்தான்..  

குறிப்பாக மலையக மக்களின் வாழ்வியலை அரசியலிலிருந்து பிரிக்க முடியாது தொழிலாளர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு துன்பத்திலும் அரசியல்வாதிகளின் முகங்களே பிரதிபலிக்கும்.

எனவே மக்கள் என்று 'அரசியல்வாதியின் தலையீடின்றி ஜனநாயக ரீதியான சுதந்திரக்காற்றை அனுபவிக்கிறார்களோ அன்றுதான் அரசியல்வாதிகளை அதிலிருந்து பிரிக்க முடியும்' எனவே என்னுடைய அனைத்து கதைகளிலும் அரசியல்வாதிகளின் பாத்திரம் இருக்கும் அதனை பிரித்துப் பார்க்க முடியாது என்று அவர் கூறுவார்.

இவர் தனது இளம் பராயத்தில் தோட்ட பொது இடங்கள், மைதானம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் தனது தோழர்கள் மற்றும் குடும்ப அங்கத்தவர்களின் உதவியுடன் பல நாடகங்களையும் மேடையேற்றியுள்ளார். .

மேலும் அன்றைய நாட்களிலேயே இலங்கை வானொலி சேவையில் ஒலிபரப்பாகும் 'குன்றின் குரல்' நிகழ்ச்சிக்கு நாடகங்களையும் தயாரித்து வழங்கியுள்ளார். 

தனது தோட்டத்தில் இருக்கும் சக தோழர்களையும் இவர் தனது நாடக கதாபாத்திரங்களில் இணைத்துக் கொள்வதில் ஆர்வமாக இருந்துள்ளார். அப்போது அவரது வருங்கால மனைவியான  சரோஜாவுக்கும் தனது நாடகங்களில் வாய்ப்பு வழங்கியுள்ளார்.

நாடக ஆசிரியராக மட்டுமல்ல நடிகனாக, ஒப்பனைக் கலைஞராக, மேடை வடிவமைப்பாளராக, பின்னணி குரல்,இசை ,ஓவியம் என பல்துறை அம்சங்களை நாடகத் துறை சார்ந்து செய்துள்ளார்.

ஒரு கலைஞனுடைய நூல் வெளியீடு என்பது 'பெண்ணின் பிரசவ வலிக்கு ஒப்பானதாகும்'. பிரசவம் கூட பத்து மாதத்தில் வெளிவந்துவிடும் ஆனால் ஒரு வறுமைப்பட்ட கலைஞனின் வெளியீடு பிரசவ நிகழ்வினும் கொடுமையானது பல தடைகளை கடந்து தான் அதற்கான விடை தெரியும். 

எழுத்தாளர்களின் ஆக்கங்களில் சில பிரசவமாகும், சில குறை பிரசவமாகும், சில கருவிலே கலைந்து போகும், இன்னும் சில மாற்றான் வீட்டு தத்துப் பிள்ளையாகும் இவரின் கருவுக்கும் இவையாவும் பொருந்தும்.

இவர் அதிகமான தொகுப்புகளை கைவசம் வைத்திருந்த போதும் பொருளாதார சிக்கல் அத்துடன் ஏமாற்று வாதிகளின் கைவரிசை போன்றவையால் இவரது நூற்றுக்கணக்கான கருக்கள் பிரசவம் ஆகாமலே கலைந்து போயிருக்கின்றன. 

மீண்டும் அதனைத் தன் வசப்படுத்த முடியாமல் மாற்றான் வீட்டில் தத்துப் பிள்ளையாக இருக்கும்  தன் பிள்ளையை தூரத்திலிருந்து ரசித்துக் கொண்டிருந்திருக்கிறார் இந்த மனிதன்.

இவர் இலங்கையின் இலக்கியத் துறைக்கு வழங்கப்படும் அதிமுக்கிய விருதுகள் அனைத்தையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

எளிமையாகவே தன்னை உலகிற்கு அடையாளப்படுத்திக் கொள்வார்.  

வீட்டில் தனியறை தனி மேசை கதிரை என எதனையும் உரிமையாகக் கொண்டு அதிலிருந்து கதை படைப்பதில்லை பெரும்பாலான படைப்புகள் படுக்கையிலும்  வீட்டு சமையல் அறையிலுமே இருந்துக்கொண்டே எழுதி முடிப்பார். 

தனது கதைக்கான கருவினை எப்போதுமே தன்னுடனேயே வைத்துக் கொண்டிருப்பவர். தான் கண்ட காட்சி, அனுபவம், தன்னுடன் பேசுபவர் கூறும் கதைகள் என்பனவற்றினை தனது கதைக்கான கருவாக எடுத்து அதனை தனக்கான பாணியில், மொழிநடையில், சுவையுடன் வெளிக்கொணர்வார்.

இவரின் எழுத்துத் துறைக்கு  மனைவியின் பங்கு அளப்பரியதாக இருந்தது. தனது மாமன் மகளான  சரோஜாவை மணம் முடித்தார். 

இவரது கதைகளில் எழுத்துப்பிழை பார்ப்பது, தேயிலைத் தோட்ட வழக்கு மொழிகளை கூறுவது, கதைகளுக்கு பொருத்தமான தலைப்பு வைப்பது மற்றும் கதைக்கான முதல் விமர்சனம் என்பன எல்லாமே மனைவியின்  வசமே. 

இவர்களுக்கு மாறன்,  சுகுணா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். எதிர்பாராத விதமாக அவரது மனைவி அகால மரணம் அடைந்தமையை இவரால் தாங்கிக் கொள்ள முடியாது போனது துரதிஸ்டமே. 

அவரது பிரிவோடு இவரது உடல் நிலையும் பாதிக்கப்பட்டது. இறுதியாக வேடத்தனம் என்ற சிறுகதையையும் மண்ணை விட்டு போகாதே என்ற நாவலையும் வெளியிட இவரது மனைவி முயற்சித்துக்கொண்டிருந்தபோது அவர் எதிர்பாராத விதமாக இறையடிசேர்ந்தார். 

ஆயினும் கொடகே நிறுவனம் மூலம் அவரது வேடத்தனம் நூல் இறுதி வடிவை அடைந்தது.

தனது இறுதி காலத்தில் வேடத்தனம் (2019) என்ற நூலினை வெளியிட முயற்சித்துக் கொண்டிருந்தார் அப்போது அதிகமான பொழுதுகள் வைத்தியசாலைகளில் இருந்து தொலைபேசியின் மூலமாகவே அதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். 'தான் எவ்வாறு முகமூடி அணிந்த மனிதர்களினால் ஏமாற்றப்பட்டேன் எனது படைப்புகள் எவ்வாறு பிறர் வசமானது' என்பதனை குறியிட்டு காட்டவே வேடத்தனம் என்ற தலைப்பினை தெரிவு செய்தார்.

இந்நுலினை அவர் தன் மனைவிக்கு சமர்ப்பணம் செய்தார் இருந்தும் குழந்தை பிரசவிக்கும் போது அது தகப்பனும் தாயும் இல்லா அனாதை குழந்தையாகவே இந்த பூமியில் கால் பதித்தது. 

ஆம் 2020 பெப்ரவரி மாதம் நூல் வெளியீடுகொழும்பு தமிழ்சங்கத்தில்  இருந்த நிலையில் 2020 ஜனவரி 27ஆம் திகதி அவர் இறையடிசேர்ந்தார்.இந்த நூலுக்கு அரச மற்றும் கொடகே சாகித்திய விருதுகள் கிடைத்துள்ளன.

தேயிலைத் தோட்டத்து லயத்தில் பிறந்த இவர் இறுதிவரை அந்த லயதிலேயே குடி கொண்டிருந்தார் ஆரம்பத்தில் 'மலைப்பொன்னி' என்ற புனைப்பெயரை கொண்டிருந்தபோதும் பிறகு தான் பிறந்து வளர்ந்த தோட்டமான பெரிய மல்லிகைப்பூவின் 'மல்லிகை'யை அடைமொழியாக கொண்டு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். எழுத்தின் மூலம் புகழ் அடைந்த இவருக்கு பொருளாதாரம் கைகொடுக்கவில்லை. 

இறுதிவரை இவரது பல கனவுகள்; நிறைவேறாது அவருடன் ஆழப்புதைந்து போயுள்ளன.  இவர்  எழுதியவற்றில் தலைப்பிடப்பட்ட மண்ணை விட்டுப் போகாதே நாவல் மற்றும் சில சிறுகதைத் தொகுப்புகள் எதிர்காலத்தில் நம் வசம் வரலாம்.

மல்லிகை சி. குமார் ஓர் சமூகத்தின் இருப்பிற்கும் அதன் விடிவிற்கும் முன்னோடியாக இருந்துள்ளார். 

'தொடர்ந்து எழுத வேண்டும்...மலையக சமூகத்திற்காக தொழிலாளர் வர்க்கத்திற்காக...என் எழுத்துபயனுறவேண்டும். எதையும் எழுத வேண்டும் என்பதைவிட இதைதான் எழுத வேண்டும் எனபதற்காக எழுதிக்கொண்டிருக்கிறேன்' என்பார்.

இன்று அவர் எம்மை விட்டு சென்ற போதிலும் அவரின் படைப்புக்கள் மூலமாக இந்த தேயிலை தோட்டங்களில் இந்த மல்லிகையின் நறுமணம் என்றுமே வீசிக்கொண்டேயே... இருக்கும்.

நீர், இங்கில்லா பொழுதிலும் நீங்கள் விட்டுச்சென்ற படைப்புக்கள் இன்னமும் எங்கள் விடுதலைக்காக முழங்கிக் கொண்டே தான் இருக்கின்றன..

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13