பல்லினசார் கலைகளின்  ஊடான  நல்லிணக்கத்தை  மையப்படுத்திய தேசிய திட்டத்திற்காக ஐரோப்பிய ஒன்றியம் 280 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.

இலங்கையில் அனைத்தின நல்லிணக்கத்தினையே ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்ப்பதாக ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான திட்டப்பணிப்பாளர் மாரிமுத்து திருநாவுக்கரசு தெரிவித்தார்.

கிளிநொச்சி , அம்பாறை மற்றும் கொழும்பில் முன்னெடுக்கப்பட உள்ள இந்த பல்லினசார் கலை விழாவிற்கு “நம்பிக்கையின் சிறகசைப்பு” ( விங்ஸ் ) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது குறித்து தெளிவுப்படுத்தும் ஊடக சந்திப்பு நேற்று  புதன் கிழமை கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்றது. 

இதன் போது உரையாற்றுகையிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான திட்டப்பணிப்பாளர் மாரிமுத்து திருநாவுக்கரசு மேற்கண்டவாறு தெரிவித்தார். 

நம்பிக்கையின் சிறகசைப்பு கலை விழா இம்மாதம் 21 ஆம் திகதி கிளிநொச்சியில் ஆரம்பமாக உள்ளது. தொடர்ந்தும் மூன்று நாட்கள்  இடம்பெறவுள்ள கலை விழாவின் இரண்டாவது பாகம் அம்பாறையில் 27 ஆம் திகதியிலிருந்து 29 ஆம் திகதி வரை நடைப்பெறவுள்ளது. 

இறுதி நிகழ்வு நவம்பர் மாதம் 7 ஆம் திகதியில் இருந்து 13 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது. தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள் பலரும் இந்த தேசிய நல்லிணக்க கலை விழாவில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

இந்த விழாவில் 900 இளங்கலைஞர்கள் பங்குபெற்றுவதுடன் 200 க்கும் மேற்பபட்ட மூத்த கலைஞர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

கலை சிந்தனை, உணவு சார்ந்த கொண்டாட்டமாக இடம்பெறும் இவ் விங்ஸ் விழாவில் பல்வகையான கலைப்படைப்புக்கள், அறிஞர்கள் மாநாடு மற்றும் திறந்தவெளி உணவுச் சந்தை என்பன இதில் உள்ளடக்கபடும்.

நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் முகமாக அனைத்து பின்னணிகளிலுமிருந்து ஒன்றிணைத்துக் கொண்டு இவ் விழாக் கொண்டாட்டங்கள் அமையப்பெறவுள்ளன.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் உள்ளிட்ட பல அமைப்புகள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் இந்த தேசிய விழாவிற்கு  ஐரோப்பிய ஒன்றியம் 280 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.