பொரளை தேவாலய குண்டு விவகாரம் : திடுக்கிடும் உண்மைகளைப் போட்டுடைத்த வைத்தியர் 

Published By: Digital Desk 4

21 Jan, 2022 | 08:21 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகே, பொரளை  - ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சகல பரிசுத்தவான்கள் தேவாலய வளாகத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட விவகாரத்தில், அக்குண்டை அங்கு கொண்டு சென்று வைத்தவர் என நம்பப்படும் நபர் கொழும்பு மேலதிக நீதிவான்  ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் இரகசிய வாக்கு மூலம் அளித்துள்ளார்.

எம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பணாமுர பகுதியில் அன்னதான வீடொன்றில் வைத்து, அரச உளவுச் சேவையின் தகவலுக்கு அமைய  கொழும்பு தெற்கு வலய குற்ற விசாரணைப் பிரிவினர்  கடந்த 15 ஆம் திகதி மாலை கைது செய்த கம்பஹா - கடவத்தை - மங்கட வீதி  பகுதியைச் சேர்ந்த  லியனகே தயாசேன எனும் சந்தேக நபரே இவ்வாறு இரகசிய வாக்கு மூலம் அளித்துள்ளார்.

 குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 127 ஆவது அத்தியாயத்துக்கு அமைய, அவர் வெள்ளிக்கிழமை ( 21) சுமார் ஒன்றரை மணி நேரம் நீண்ட இந்த வாக்கு மூலத்தை அளித்தார்.

 இதற்கு முன்னர் இந்த விவகாரத்தில் 13 வயதான சிறுவன் ஒருவரும்  இரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த தேவாலய குண்டு விவகாரத்தில் இதுவரை 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 11 ஆம் திகதி பொரளை  - ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சகல பரிசுத்தவான்கள் தேவாலய’ வளாகத்தில் குண்டு மீட்கப்பட்டதை தொடர்ந்து சம்பவம் தொடர்பில்  29,25,41,55 வயதுகளை உடைய, தெமட்டகொடை மாலிம்பட மற்றும் மருதானை பகுதிக்ளைச் சேர்ந்த சந்தேக நபர்கள் நால்வர்  முதற்கட்டமாக கைது செய்யப்பட்டனர்.

பொரளை பொலிஸாரும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரும் அக் கைது நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

அதன் பின்னர்  விசாரணைகள் தொடர்பில் திருப்தியடைய முடியாது எனவும்,  விசாரணைகளின் குறைப்பாடுகளை சுட்டிக்காட்டியும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஊடக சந்திப்பொன்றினை நடாத்தி சி.சி.ரி.வி. ஆதாரங்களையும் வெளியிட்டிருந்தார்.

 இதனையடுத்தே எம்பிலிபிட்டிய - பணாமுர பகுதியில் வைத்து 65 வயதான சந்தேக நபர் ( இன்று இரகசிய வாக்கு மூலம் வழங்கியவர்) கைது செய்யப்பட்டிருந்தார்.

 அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய கடந்த 17 ஆம் திகதி  இரவு,  ஓய்வுபெற்ற வைத்தியர் ஹேரத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரே 65 வயதான தனது சகாவுக்கு கைக்குண்டினை கொடுத்து  தேவாலயத்தில் வெடிக்க வைக்கச் சொன்னதாக  பொலிஸ் தரப்பு கூறியது.

 இவ்வாறான நிலையில்,  குறித்த வைத்தியர்  மேலதிக விசாரணைகளுக்காக  அவர் கைது செய்யப்பட்டு கொழும்பு தெற்கு வலய குற்ற விசாரணைப் பிரிவினரால் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டிருந்தார்.

 அவ்வாறான நிலையில், வைத்தியரிடம் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய நேற்று இரவு, அம்பாந்தோட்டை -  ரன்ன பகுதிக்கு சென்றிருந்த சிறப்பு பொலிஸ் குழு, ருவன் என அறியப்படும் துறைமுக அதிகார சபைக்கு உட்பட்டு சேவையாற்றும் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையவர் என கூறப்படும்  கே. ஆர்.  பிரேமசந்ரவை கைது செய்திருந்தனர். 

அவரே வைத்தியருக்கு  கைக்குண்டினை வழங்கியவர் என விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த சந்தேக நபரிடமும் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் கூறுகின்றனர்.

 இதனிடையே, கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும்  வைத்தியர் பொலிஸாரிடம் இந்த குண்டு விவகாரத்தின் பின்னணியில் தானே உள்ளதாக ஒப்புக்கொண்டதாக, விசாரணைகளை முன்னெடுக்கும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் தகவல்களை ஊடகங்களுக்கு கசியவிட்டுள்ளனர்.

 அத்துடன் பொரளை தேவாலய குண்டு விவகாரத்துக்கு மேலதிகமாக, கடந்த 2021 செப்டம்பர் மாதம் பதிவான நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலை கைக்குண்டு மீட்பு விவகாரம், அதனை தொடர்ந்து பெல்லன்வில விகாரைக்கு அருகே கைக்குண்டு மீட்கப்பட்ட விடயங்களின் பின்னணியிலும் இந்த வைத்தியரே இருப்பதாக அந்த தகவல்கள் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குறிப்பாக, வைத்தியரின் மனைவி அண்மையில் கொவிட் தொற்றால் உயிரிழந்திருந்தார். கொவிட் தொற்றுக்கு உள்ளான அவரை கொம்பனித் தெரு பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் முதலில் சேர்க்க முற்பட்ட போது  சாத்தியப்படவில்லை எனவும், பின்னர் நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் சேர்த்து சிகிச்சையளித்ததாகவும் இதன்போதே அவர் உயிரிழந்ததாகவும்  வைத்தியர் தனது வாக்கு மூலத்தில் கூறியதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் தனது மனைவிக்கு சிகிச்சையளித்த வைத்தியசாலையை பிரபலப்படுத்தும் நோக்கில் அங்கு குண்டு வைத்ததாக வைத்தியர் தெரிவித்ததாக பொலிஸ் தரப்பு தகவல்களை கசியவிட்டுள்ளது.

 எவ்வாறாயினும்  விசாரணையுடன் தொடர்புடைய, பொரளை தேவாலயத்தில் குண்டு வைக்க காரணத்தையும் அவர் வெளிப்படுத்தியதாக பொலிஸ் தரப்பு ஊடகங்களுக்கு தகவலளித்துள்ளது. 

அதன்படி, பொரளை  - ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சகல பரிசுத்தவான்கள் தேவாலயத்தில் தனது திருமணம்  நடந்தத்காகவும், பெளத்த பெண் ஒருவரை மணந்த தனக்கு அப்போது தேவாலயத்தில் காலை நேர வைபவம் ஒன்றினை முன்னெடுக்க அனுமதி மறுக்கப் பட்டதாகவும் , மனைவி மீதுள்ள அளவு கடந்த பிரியத்தால் அச்சம்பவத்தை மையப்படுத்தி குண்டு வைக்க நடவடிக்கை எடுத்ததாகவும் சந்தேக நபர் கூறியதாக  பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில், தனது மனைவியின் இறப்பின் பின்னர் சடலம் தகனம் செய்யப்பட்டதாகவும், அதன் அஸ்தியை வைத்து மோதிரம் ஒன்றினை செய்து தான் அணிந்துள்ளதாகவும் வைத்தியர் பொலிசாரிடம் கூறியதாக பொலிசார் ஊடகங்களுக்கு தகவலளித்துள்ளனர்.

 இவ்வாறான நிலையிலேயே இந்த விவகாரத்தில் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59