ஜனாதிபதியின் கொள்கைப்பிரகடன உரை ஏமாற்றமளிக்கின்றது : நாட்டைக்கட்டியெழுப்புவதற்கான செயற்திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்காததன் காரணம் என்ன? - லக்ஷ்மன் கிரியெல்ல

Published By: Digital Desk 3

19 Jan, 2022 | 11:05 AM
image

(நா.தனுஜா)

ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய கொள்கைப்பிரகடன உரையில் தற்போதைய நிதிநெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான செயற்திட்டங்கள், கடன்களை மீளச்செலுத்துவதற்கான வழிமுறைகள் உள்ளடங்கலாக அரசாங்கத்தின் எதிர்காலத்திட்டங்கள் தொடர்பில் எவ்வித தெளிவுபடுத்தல்களையும் வழங்கவில்லை. 

எதிர்வரும் 3 வருடங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ள செயற்திட்டங்கள் குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்தும் பட்சத்தில் அதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

இருப்பினும் அத்தகைய நீண்டகாலத் திட்டமிடல்கள் எவையும் அரசாங்கத்திடம் இல்லை என்பது தற்போது தெளிவாகியிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை தற்போது நாட்டில் பால்மா, எரிவாயு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்ற சூழ்நிலையில், பிணைமுறிகளுக்காக 500 மில்லியன் டொலர்களைச் செலுத்துவதற்குப் பதிலாக அரசாங்கம் மக்களின் தேவைகளை நிறைவுசெய்வதற்காக அதனைப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

குருநாகல் அதிவேக நெடுஞ்சாலையின் வரலாறு தொடர்பில் சில விடயங்களைக் கூறவேண்டியிருக்கின்றது. குறிப்பாக 2015 ஆம் ஆண்டில் நாம் ஆட்சிபீடமேறும் வரையில் கடவத்தை - கலகெதர அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகளுக்கான எந்தவொரு ஆயத்தமும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. 

இருப்பினும் நாங்கள் ஆட்சிபீடமேறியவுடன் கடவத்தையிலிருந்து கலகெதர வரையில் மூன்று பிரிவுகளாக அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்கான திட்டத்தைத் தயாரித்தோம். அதனைத்தொடர்ந்து அதற்கு அண்மைய பகுதிகளிலிருந்த தேவையான நிலப்பரப்பை அரச உடைமையாக்கி, அதற்குப் பதிலாக நட்டஈட்டை வழங்கினோம்.

பின்னர் குறித்த அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்கான பொறுப்பை உள்நாட்டு நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்குத் தீர்மானித்தோம். ஆனால் இடைநடுவே அரசியலமைப்பிற்கு முரணான வகையில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டதன் விளைவாக அந்நிர்மாணப்பணிகள் தடைப்பட்டன. 

அவ்வாறிருக்கையில் சுமார் 41 கிலோமீற்றர் தூரம்கொண்ட அதிவேக நெடுஞ்சாலையில் வெறுமனே 4 கிலோமீற்றரை மாத்திரம் நிர்மாணித்துவிட்டு, ஏற்கனவே 37 கிலோமீற்றர் நெடுஞ்சாலையை நிர்மாணித்தவர்களுக்குத் தெரியப்படுத்தாமல் அதனைத் திறந்துவைத்திருப்பதென்பது வெட்கத்திற்குரிய செயலாகும்.

அதுமாத்திரமன்றி கடந்த 2014 ஆம் ஆண்டில் மத்திய அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்கு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடிக்கல் நாட்டிவைத்தார்.

இருப்பினும் அத்திட்டத்திற்காக அவரது அரசாங்கத்தினால் கையகப்படுத்திக்கொள்ளப்பட்ட இடங்களின் உரிமையாளர்களுக்கான நட்டஈடு எமது அரசாங்கத்தினாலேயே வழங்கப்பட்டது. 

மேலும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையானது அதிக மழைவீழ்ச்சியின்போது நீரில் மூழ்காதவகையில் நிர்மாணிக்கப்படவில்லை. 

இருப்பினும் அதிலிருந்து பாடங்கற்றுக்கொண்ட நாம் குருநாகல் - மீரிகம அதிவேக நெடுஞ்சாலையை மழைநீரில் மூழ்காதவகையில் பாலத்துடன் இணைந்ததாக நிர்மாணித்தோம். அதற்காக நாம் வெளிநாடுகளிடமிருந்து கடன்களைப் பெறவில்லை. 

அதேபோன்று மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிக்கும் பொறுப்பு சீன நிறுவனங்களிடமே ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும் நாம் அந்தப் பொறுப்பை உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்கினோம்.

மேலும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையுடன் ஒப்பிடுகையில் குருநாகல் - மீரிகம அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு கிலோமீற்றர் தூரத்தை நிர்மாணிப்பதற்கு ஏற்பட்ட செலவு குறைவாகும். அதன் நிர்மாணப்பணிகளில் மோசடிகள் இடம்பெற்றதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றஞ்சாட்டுகின்றார்.

ஆனால் கோப் குழுவின் அறிக்கையின் ஊடாக அதில் எவ்வித மோசடிகளும் இடம்பெறவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது என்று சுட்டிக்காட்டினார்.

கேள்வி - பிணைமுறிகளுக்கான 500 மில்லியன் டொலர் கொடுப்பனவு இன்றைய தினம் (நேற்று) மத்திய வங்கியினால் செலுத்தப்பட்டிருக்கின்றது. இதுபற்றிய உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பதில் - பிணைமுறிகளுக்கான கொடுப்பனவைச் செலுத்துவதை விடுத்து, மக்கள் வாழ்வதற்கு உகந்த சூழலை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் அந்நிதியைச் செலவிட்டிருக்கலாம். அண்மையகாலங்களில் பால்மா, எரிவாயு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. அதுமாத்திரமன்றி அவை உள்ளடங்கலாக மேலும் பல பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தம்மிடம் டொலர் இல்லை என்றும் அரசாங்கம் கூறுகின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் அரசாங்கம் பிணைமுறிகளுக்கான கொடுப்பனவை மீளச்செலுத்துவதற்குக் மேலும் கால அவகாசம் கோரியிருக்கலாம். 

இந்தப் பிணைமுறிகளின் உரிமையாளர்கள் அரசாங்கத்திற்கு மிகநெருக்கமானவர்கள் என்பதாலேயே அதற்கான கொடுப்பனவைச் செலுத்துவதில் அரசாங்கம் அவசரம் காண்பிக்கின்றது என்றவாறான கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.

அதேவேளை இன்று (நேற்று) ஜனாதிபதியின் கொள்கைப்பிரகடன உரையில் எதிர்காலத்திட்டங்கள் என்னவென்பது குறித்து எவ்வித தெளிவுபடுத்தல்களும் வழங்கப்படவில்லை. 

கடன்களை மீளச்செலுத்துவதற்கான வழிமுறைகள், தற்போதைய நிதிநெருக்கடியைக் கையாள்வதற்கான செயற்திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி எதனையும் கூறவில்லை. 

இதன்மூலம் அரசாங்கத்திடம் முறையான திட்டங்கள் எவையுமில்லை என்பது தெளிவாகின்றது. நாடு பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் எதிர்வரும் இரண்டு வருடங்கள் தொடர்பில் பேசுவதைவிடுத்து, அடுத்து வரக்கூடிய இரண்டு வாரங்கள் தொடர்பில் பேசுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். 

அரசாங்கத்திடம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான முறையான செயற்திட்டமொன்று காணப்படுமாயின், அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். இருப்பினும் அரசாங்கத்திடம் அத்தகைய திட்டங்கள் எவையுமில்லை. 

இவ்வாறானதொரு பின்னணியில் எமது நாட்டுமக்களை வாழவைப்பதற்கு இந்தியாவிடம் கையேந்தும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருப்பதானது வெட்கப்படவேண்டிய விடயமாகும் என்று குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38