சிறையில் புனித அல் குர் ஆனை வைத்திருக்க அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு ; 25 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Published By: Digital Desk 3

13 Jan, 2022 | 01:03 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சில பிரதிவாதிகளுக்கு, சிறைச்சாலைக்குள் புனித அல் குர் ஆனை பயன்படுத்துவதற்கும் சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதி மறுப்பதாக  நீதிமன்றில் நேற்று முறையிடப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 25 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம்   தாக்கல் செய்துள்ள வழக்கு நேற்று (12) விசாரணைக்கு வந்த போதே  இந்த விடயம்  விஷேட ட்ரயல் அட்பார் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. பிரதிவாதிகள் இருவரின் சட்டத்தரணிகள் இதனை நீதிமன்றில் தெரிவித்தனர்.

அத்துடன்  ஏற்கனவே பிரதிவாதிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ள  குற்றப் பத்திரிகைகளின் தமிழ் மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்புகள் தயாராக இன்னும் கொஞ்ச கால அவகாசம் தேவைப்படுவதாக சட்ட மா அதிபர் சார்பில் நேற்று விஷேட ட்ரயல் அட்பார் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது. மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா ஜயசுந்தர இதனை நீதிமன்றுக்கு தெரிவித்தார்.

இந்நிலையில் பிரதான பிரதிவாதியாக அரச தரப்பால் அறிமுகப்படுத்தப்படும் அபூ செய்த் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் மொஹம்மட் நெளபர் அல்லது நெளபர் மெளலவி உட்பட 25 பேருக்கு எதிராக தொடுக்கப்ப்ட்டுள்ள வழக்கு எதிர்வரும்  மார்ச் 3 ஆம் ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

வழக்கு விசாரணை ஆரம்பம் :

இந்த குண்டுத் தாக்குதல் தொடர்பிலான விவகாரத்தை விசாரிக்கவென நியமிக்கப்பட்டுள்ள,  கொழும்பு மேல் நீதிமன்றின் தலைமை நீதிபதி தமித் தொடவத்த தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகளான  அமல் ரணராஜ மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோர் அடங்கிய  சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ற குழாம் முன்னிலையிலேயே  இந்த வழக்கு  நேற்று (12) 3 ஆவது தடவையாக  இவ்வாறு விசாரணைக்கு வந்தது.

பாதுகாப்பு பலப்படுத்தல்:

கொழும்பு மேல் நீதிமன்றின் முதலாம் இலக்க விசாரணை அறையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றின் பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டிருந்தது.   மேல் நீதிமன்ற விசாரணை அறைக்குள்  நுழையும் அத்தனை பேரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பொலிஸாரும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டிருந்த நிலையில், குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

25 பேர் மன்றில் ஆஜர்

இந்நிலையில், இந்த விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 25 பிரதிவாதிகளும் நேற்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். மெகஸின்,  அங்குணகொலபெலஸ்ஸ, மஹர, நீர்கொழும்பு , பூசா உள்ளிட்ட பல சிறைச்சாலைகளில் இருந்து அவர்கள் அழைத்து வரப்பட்டனர்.

16 பிரதிவாதிகளுக்கு மட்டும் சட்டத்தரணிகள் ஆஜர் 

நேற்றைய தினம் மன்றில் இவ்வழக்கு விசாரணைகள் ஆரம்பமான போது, தலைமை நீதிபதி தமித் தொட்டவத்த, பிரதிவாதிகளுக்கான அரசாங்க செலவில் சட்டத்தரணிகளை நியமிப்பது  தொடர்பில் அவதானம் செலுத்தினார்.

இதன்போது  25 பேரில் 9 பேருக்கு சட்டத்தரணிகளின் பிரசன்னம் இருக்கவில்லை.

நேற்றைய தினம் மன்றில் 7,8,11,12,17,18,19,20,21 ஆம் பிரதிவாதிகளுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட் ஆஜரானார். 

9 ஆம் பிரதிவாதிக்காக சிரேஷ்ட சட்டத்தரணி கஸ்ஸாலி ஹுசைனும்,   13 ஆவது பிரதிவாதிக்காக சட்டத்தரணி  ஜி.கே. கருணாசேகரவும்,  22,23,24 ஆம் பிரதிவாதிகளுக்காக சட்டத்தரணி விஜித்தாநந்த மடவலகமவும், 25 ஆவது பிரதிவாதிக்காக சட்டத்தரணி சுரங்க பெரேராவும் ஆஜராகினர்.  3 ஆம் பிரதிவாதி மில்ஹானுக்காகவும் நேற்று சட்டத்தரணி ஒருவர் பிரசன்னமானார்.

மன்றில் ஆஜரான சட்ட மா அதிபர் தரப்பு

நேற்றைய தினம் இந்த வழக்கில் சட்ட மா அதிபர் சார்பாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி ஹரிப்பிரியா ஜயசுந்தரவின் தலைமையில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் ஆஜராகினர்.

பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பிலும் சட்டத்தரணிகள் இருவரைக் கொண்ட குழாம் பிரசன்னமாவதாக அறிவிக்கப்பட்டது.

நெளபர் மெளலவிக்கு சட்டத்தரணிகள் இல்லை

இந்நிலையில் பிரதான பிரதிவாதியாக அடையாளப்படுத்தப்பட்ட  நெளபர் மெளலவி உள்ளிட்ட 9 பேர் சார்பில் சட்டத்தரனிகள் பிரசன்னமகையிருக்கவில்லை.   

சட்டத்தரணிகள் ஆஜராகாத பிரதிவாதிகள் அனைவருக்கும் அரசின் செலவில் சட்டத்தரணிகளை நியமிப்பது தொடர்பில் விருப்பமா எனவும்  இல்லையேல் கட்டணம் செலுத்தி சட்டத்தரணிகளை நியமிக்க சந்தர்ப்பம் வேண்டுமா எனவும் தலைமை நீதிபதி தமித் தொட்டவத்த   நீதிமன்ற உரைப் பெயர்ப்பாளரின் ஊடாக பிரதிவாதிகளிடம் கடந்த தவணையின் போது ( 2021 ஒக்டோபர் 4) வினவியிருந்தார்.

இதன்போது பிரதிவாதிகள் ஒவ்வொருவராக, தமக்கு தமிழ் தெரிந்த  சட்டத்தரணி ஒருவரை அரசாங்க செலவில் நியமிக்குமாறு கோரியிருந்தனர்.

சட்டத்தரணிகள் சங்கம் பட்டியல் கையளிப்பு  

இதனையடுத்து,  பிரதிவதிகள் சார்பில் ஆஜராவதற்காக தமிழ் தெரிந்த சட்டத்தரணிகளின் பட்டியலொன்றினை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸுக்கு, நீதிமன்றம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி அறிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று அச்சங்கம்  குறித்த பட்டியலை வழக்கை நெறிபப்டுத்தும் சட்ட மா அதிபர் திணைக்கலத்தின் மேலதிக சொலீச்ட்டர் ஜெனரால்  ஹரிப்பிரியா ஜயசுந்தரவுக்கு கையளித்திருந்தது.,

அதன்படி  முதல் பிரதிவாதி நெளபர் மெளலவி மற்றும் 10 ஆவது  பிரதிவாதிக்கு சிரேஷ்ட சட்டத்தரனி ருஷ்தி ஹபீப் அரச் செலவில் நியமிக்கப்ப்ட்டுள்ளார்.  2,14 ஆம் பிரதிவாதிகளுக்காக சட்டத்தரணி ரிஸ்வான் ஹுசைனும், 4,15 ஆம் பிரதிவாதிகளுக்கு சட்டத்தரனி அசார் முஸ்தபாவும், 5,16 ஆம் பிரதிவாதிகளுக்கு சட்டத்தரணி இம்தியாஸ் வஹாபும், 6 ஆம் பிரதிவாதிக்கு சட்டத்தரணி சச்சினி விக்ரமசிங்கவும் அரச செலவில் சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டனர்.

குற்றப் பத்திரிகை மொழி பெயர்ப்பு 

இந்நிலையில், முழுமையாக சிங்கள மொழியில் இருந்த  குற்றப் பத்திரிகை தொடர்பிலும் தலைமை நீதிபதி கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி பிரதிவாதிகளிடம் வினவியிருந்தார்.

அதன்போது, 7 பிரதிவாதிகளைத் தவிற ஏனைய  17 பிரதிவாதிகளில் 16 பேர் தமக்கு குற்றப் பத்திரிகை தமிழில் வேண்டும் எனவும் 25 ஆவது பிரதிவாதியான  மொஹம்மட் அக்ரம் அஹக்கம் தமக்கு அங்கில மொழியில் குற்றப் பத்திரிகை வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இதனையடுத்து  பிரதிவாதிகள் கோரும் குற்றப் பத்திரிகையின் தமிழ் மற்றும் ஆங்கில வடிவங்களை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, சட்ட மா அதிபர் தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனினும் நேற்றும் அந்த மொழி பெயர்ப்புகள் வழங்கப்படவில்லை.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா கோரிய கால அவகாசம் 

இது தொடர்பில் நேற்று மன்றுக்கு தெளிவுபடுத்திய, வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா ஜயசுந்தர, மொழி பெயர்ப்பு  அச்சுப் பணிகளுக்கு மேலும் கால அவகாசம் வேண்டும் என அறிவித்தார்.  அடுத்த தவணையில் அவற்றை வழங்க முயற்சிப்பதாகவும் அதற்குப் முன்பதாக கிடைக்கப் பெற்றால் இடையீட்டு மனு ஊடாக அதனை மன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர்  தெரிவித்தார்.

குற்றச்சாட்டுக்களின் சுருக்கத்தை மன்றுக்கு அளிக்க கோரிக்கை 

இதனிடையே, மன்றில் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணிகளான என்.எம். சஹீட் மற்றும் கஸ்ஸாலி ஹுசைன் உள்ளிட்டவர்கள், 23270 குற்றச்சாட்டுக்களில், தத்தமது சேவை பெறுநர்கள் பொறுப்புச் சட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை சுருக்கமாக தமக்கு கையளிக்குமாறும் அது வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த உதவும் எனவும்  சுட்டிக்காட்டினர்.

9, 23 ஆம் பிரதிவாதிகளின் முறைப்பாடு 

இதன்போது 9 அவது பிரதிவாதிக்காக மன்றில்  ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி கஸ்ஸாலி ஹுசைன்,  ட்ர்ஹனது சேவை பெறுநருக்கு சிறையில் குர் ஆன் பிரதியை வைத்திருக்க  சிறைச்சாலைகள் அதிகாரிகள் தடை விதித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் புனித குர் ஆன் பிரதியை வைத்திருக்க தடை இல்லை எனவும், அவ்வாறிருக்கையில் அதற்கு மருப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதால் அது தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றினை பிறப்பிக்க வேண்டும் எனவும்,    அரசியலமைப்பு ஊடாக உறுதி செய்யப்பட்ட உரிமையை மீற முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

23 ஆவது பிரதிவாதிக்காக ஆஜரான சட்டத்தரணி மடவலவும், தனது செவை பெறுநருக்கும்  பூசா சிறையில் குர் ஆன் பிரதியை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்தும் உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறும் கோரினார்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் பொதுவான உத்தர்வைப் பிறப்பித்த சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம்,  சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்துக்கு அமைய,  புனித அல் குர் ஆன் பிரதியை வைத்திருப்பது தொடர்பில் அனுமதியளிக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டத்தரணி என்.எம். சஹீட்டின் கோரிக்கை

இதன்போது மன்றில் 7,8,11,12,17,18,19,20,21 ஆம் பிரதிவாதிகளுக்காக் மன்றில் ஆஜராகிய  சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட், தனது சேவை பெறுநர்கள் கடந்த இரண்டரை வருடங்களாக விளக்கமறியலில் உள்ள நிலையில் அவர்களுக்காக அடுத்த தவணையில் பிணை கோரி வாதங்களை முன் வைக்க எதிர்பாப்பதாக குறிப்பிட்டார்.

இதனையடுத்து இது குறித்த வழக்கை எதிர்வரும் 2022 மார்ச் 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், பிரதிவாதிகள் அனைவரும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

வழக்குத் தொடரப்பட்டுள்ள பிரதிவாதிகள்

1.அபூ செய்த் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் மொஹம்மட் நெளபர் அல்லது நெளபர் மெளலவி 2.அபூ ஹதீக் எனப்படும் கபூர் மாமா அல்லது கபூர் நாநா எனும் பெயரால் அறியப்படும்  மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை

3. அபூ சிலா எனப்படும் ஹயாத்து மொஹம்மது மில்ஹான்

4.  அபூ உமர் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம்  சாதிக் அப்துல்லாஹ்

5.  அபூ பலா எனப்படும்  மொஹம்மட் இப்ராஹீம்  சாஹித்  அப்துல் ஹக்

6.அபூ தாரிக் எனப்படும் மொஹம்மட் அன்வர் மொஹம்மட் ரிஸ்கான்

7. அபூ மிசான் எனப்படும்  மொஹம்மட் மன்சூர் மொஹம்மட் சனஸ்தீன்

8. அப்துல் மனாப் மொஹம்மட் பிர்தெளஸ்

9. அபூ நஜா எனப்படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்லது சாஜித் மெளலவி

10. ஷாபி மெளலவி அல்லது அபூ புர்கான் எனப்படும் அப்துல் லதீப் மொஹம்மட் ஷாபி

11.  ஹுசைனுல் ரிஸ்வி ஆதில் சமீர்

12.அபூ தவூத் எனப்படும்  மொஹம்மட் சவாஹிர் மொஹம்மட் ஹசன்

13. அபூ மொஹம்மட் எனப்படும் மொஹம்மட் இப்திகார் மொஹம்மட் இன்சாப்

14. ரஷீத் மொஹம்மட் இப்றாஹீம்

15.அபூ ஹினா எனப்படும் மொஹம்மட் ஹனீபா செய்னுள் ஆப்தீன்

16.அபூ நன் ஜியார் எனப்படும் மொஹம்மட் முஸ்தபா மொஹம்மட் ஹாரிஸ்

17. யாசின் பாவா அப்துல் ரவூப்

18. ராசிக் ராசா ஹுசைன்

19.கச்சி மொஹம்மது ஜெஸ்மின்

20.செய்னுல் ஆப்தீன் மொஹம்மட் ஜெஸீன்

21. மொஹம்மட் முஸ்தபா மொஹம்மட் ரிஸ்வான்

22.அபூ சனா எனப்படும் மீரா சஹீட் மொஹம்மட் நப்லி

23. மொஹம்மட் அமீன் ஆயதுல்லாஹ்

24.மொஹம்மட் அன்சார்தீன் ஹில்மி

25. மொஹம்மட் அக்ரம் அஹக்கம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியாவில் பாலித தேவப்பெருமாளுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 02:50:20
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02