கறுப்புப் பட்டியலிலிருந்து தம்மை நீக்குமாறு கோரும் மக்கள் வங்கி

Published By: Digital Desk 3

10 Jan, 2022 | 12:49 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

சீனாவின் கறுப்புப் பட்டியலில் இருந்து தம்மை நீக்குமாறு இலங்கை மக்கள் வங்கி கோரிக்கை முன் வைத்துள்ளது.

கடன் கடிதத்திற்கு அமைய சீன உர நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளதாக சீன தூதரகத்துக்கு  அறிவித்தே மக்கள் வங்கி தன்னை  கறுப்புப் பட்டியலில் இருந்து விடுவித்துக்கொள்வதற்கான கோரிக்கையை முன் வைத்துள்ளது.  

இந்நிலையில் இன்று  (10) குறித்த கறுப்புப்பட்டியலில் இருந்து தம்மை நீக்கிக்கொள்ள எதிர்பார்ப்பதாக மக்கள் வங்கி  அறிவித்துள்ளது.

முன்னதாக  ஒப்பந்தத்தை மீறி கடன் சான்று பத்திரத்திற்கான கொடுப்பனவை செலுத்தாமையால் மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் இணைப்பதாக இலங்கைக்கான சீனத் தூதரகம்  கடந்த 2021 ஒக்டோபர் 29 ஆம் திகதி அறிவித்திருந்தது.

சீன தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக செயலகத்தினால் கறுப்புப் பட்டியல் தீர்மானம் எடுக்கப்பட்டதாக சீனத் தூதரகம் அப்போது  தெரிவித்திருந்தது.

அதன்படி,  இலங்கையுடனான சர்வதேச கொடுக்கல் வாங்கலின் போது மக்கள் வங்கியினால் வெளியிடப்படும் கடன் சான்று பத்திரத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர்க்குமாறு  சீன முதலீட்டாளர்களுக்கு அறிவிப்பதாகவும் சீன தூதரகம் தெரிவித்திருந்தது. 

இதனைவிட மக்கள் வங்கியுடன் கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுக்கும் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடனான நிர்வாகத்தை முன்னெடுக்குமாறு அறிவிப்பதாகவும் சீனத் தூதரகம்  அறிவித்திருந்தது.

வர்த்தக சட்ட திட்டங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக கொள்கைக்கு அமைய மக்கள் வங்கி செயற்படாது, சேதனப் பசளை இறக்குமதி விடயத்தில் கடன் சான்று பத்திரத்திற்கான கொடுப்பனவை செலுத்தாமையால் சீன நிறுவனத்திற்கு பாரிய நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் குறிப்பிட்டிருந்தது.

உரக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இரு தரப்பினரிடையே ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டிற்கு அமைய வெளியிடப்பட்ட கடன் சான்று பத்திரத்திற்கான கொடுப்பனவை செலுத்துமாறு சீனாவின் சிந்தாவோ சீவிங் பயோடெக் நிறுவனம் மக்கள் வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ள போதும் இதுவரை அது செலுத்தப்படவில்லை எனவும் சீன தூதரகம் குறிப்பிட்டே கருப்புப் பட்டியலில் மக்கள் வங்கியை சேர்ப்பதாக அறிவித்திருந்தது.

இரு வர்த்தக மேல் நீதிமன்றங்களின் உத்தரவுகளுக்கு அமையவே, வர்த்தக நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட தரப்புக்கு வழங்கப்பட்ட கடன் சான்று பத்திரத்திற்கான கொடுப்பனவு செலுத்தப்படவில்லை எனவும், நாட்டின் சட்டத்துக்கு அமையவே வங்கி  நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் மக்கள் வங்கி   கறுப்புப் பட்டியல் அறிவித்தலை அடுத்து விளக்கமளித்திருந்தது.

இந் நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் பக்டீரியா அடங்கிய சேதன பசளையை நாட்டிற்கு அனுப்பியதாக கூறப்பட்ட  சீன நிறுவனமான  குவிங்டாவோ சீவிங் பயோடெக் குறூப் லிமிடட் , அதன் இலங்கை பிரதிநிதிக்கு   பணம் செலுத்துவதை தடுத்து மக்கள் வங்கிக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவுகள்  கடந்த 3 ஆம் திகதி  நீக்கப்பட்டன.  

சேதனப் பசளை விவகாரத்தில்,  கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரு வழக்குகளிலும், முறைப்பாட்டாளர் தரப்புக்கும் பிரதிவாதிகளுக்கும் இடையே சமரச நிலை எட்டப்பட்டதால் இவ்வாறு இடைக்கால தடை உத்தரவுவுகள்  நீக்கப்பட்டன.  

இதற்கான உத்தரவுகளை  கொழும்பு வணிக மேல் நீதிமன்றின் 2 ஆம் இலக்க  நீதிமன்ற அறையின் நீதிபதி பிரதீப் ஹெட்டி ஆரச்சி, வணிக மேல் நீதிமன்றின் 3 ஆம் இலக்க நீதிமன்ற அறையின் நீதிபதி பிரியந்த பெர்ணான்டோ ஆகியோரால்  பிறப்பிக்கப்பட்டன.

இந்நிலையில் வழக்கு சமரசத்தின் போது இணங்கப்பட்ட நிபந்தனைகளுக்கு அமைய, கடன் கடிதத்திற்கு அமைய சீன உர நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் டொலர் கடந்த 7 ஆம் திகதி செலுத்தப்பட்டது. இதனையடுத்தே  மக்கள் வங்கி தற்போது, கறுப்புப் பட்டியலிலிருந்து தம்மை விடுவிக்குமாறு கோரியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37