அரசாங்கம் ஏகாதிபத்தியவாத இராணுவ ஆட்சியை நோக்கிப்பயணிக்கின்றதா ?- ரஞ்சித் மத்தும பண்டார 

Published By: Digital Desk 3

07 Jan, 2022 | 02:58 PM
image

(நா.தனுஜா)

நாட்டுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் அவற்றுக்குரிய தீர்வை வழங்குவதைவிடுத்து, ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் விமர்சிப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.

ஆளுந்தரப்பில் அங்கம்வகிக்கும் உறுப்பினர்களே அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சித்துவரும் நிலையில், நியாயமான விமர்சனங்களை முன்வைக்கும் பொதுமக்களுக்கு எதிராக மாத்திரம் நடவடிக்கை எடுப்பதன் காரணம் என்ன?

இத்தகைய செயற்பாடுகள் தற்போதைய அரசாங்கம் ஏகாதிபத்தியவாத, இராணுவ ஆட்சியை நோக்கிப்பயணிக்கின்றதா? என்ற சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுமாத்திரமன்றி மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துமாறு வலியுறுத்தியுள்ள அவர், மாகாணசபைத்தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றியீட்டுவது உறுதி என்றும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஊழல் மோசடிகளற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு தமது கட்சியினால் முன்னெடுக்கப்படவிருக்கும் பயணத்தில் இணைந்துகொள்ளுமாறும் அவர் நாட்டுமக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (7 ) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

அத்தியாவசியப்பொருட்களின் விலையேற்றம், வாழ்க்கைச்செலவு உயர்வு, டொலர் நெருக்கடி, எரிபொருள், பால்மா உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்கான தட்டுப்பாடு, உரப்பற்றாக்குறை காரணமாக தேசிய உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி உள்ளடங்கலாக நாடு பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது.

அவற்றுக்கான தீர்வை வழங்குவதைவிடுத்து, தற்போது ஜனாதிபதியை விமர்சிப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் எமது சக உறுப்பினர் ரோஹினி கவிரத்னவினால் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் வாக்குமூலம் அளிக்குமாறு பொலிஸார் பணிப்புரைவிடுத்துள்ளனர்.

ஆளுந்தரப்பில் அங்கம்வகிக்கும் உறுப்பினர்களே அரசாங்கத்தை விமர்சித்துவரும் நிலையில், விமர்சனங்களை முன்வைக்கும் பொதுமக்களுக்கு எதிராக மாத்திரம் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

எனவே தற்போதைய அரசாங்கம் ஏகாதிபத்தியவாத, இராணுவ ஆட்சியை நோக்கிப்பயணிக்கின்றதா? என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது.

மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதற்கான இடமாக இருக்கக்கூடிய பாராளுமன்றம் ஒருமாதகாலமாக மூடப்பட்டிருக்கின்றது. பாராளுமன்றக்கூட்டத்தொடரைப் பிற்போட்டதன் பின்னர் திருகோணமலை எண்ணெய்த்தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்குவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

நாட்டின் நிதியை முகாமை செய்கின்ற அதிகாரம் பாராளுமன்றத்தின் வசமிருப்பதால் புதிதாகப் பணம் அச்சடிக்கப்படும்போது அதுகுறித்துப் பாராளுமன்றம் அறிந்திருக்கவேண்டும். எனவே இனியும் தாமதிக்காமல் உடனடியாகப் பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு வலியுறுத்துகின்றோம்.

மேலும் அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவித்திருக்கின்றார்.

எனினும் அக்கொடுப்பனவை வழங்குவதற்காக புதிதாகப் பணத்தை அச்சடிக்கும் பட்சத்தில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும். அதுமாத்திரமன்றி இறக்குமதி செய்யப்படும் மருந்துப்பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கான வரியை நீக்குவதாகவும் அவர் அறிவித்திருக்கின்றார்.

எனினும் இதற்கு முன்னரும் மருந்துப்பொருட்களுக்கு வரி அறவிடப்படவில்லை என்பதுடன் சீனி போன்ற உணவுப்பொருட்களுக்கான வரி ஏற்கனவே நீக்கப்பட்டுவிட்டது.

அதேபோன்று கடனுதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச பொதுக்கட்டமைப்புக்களை அரசாங்கம் நாடாமல் இருப்பதற்கான காரணம் என்ன? ஏனெனில் அக்கட்டமைப்புக்களிடம் கடனுதவிகளைப் பெறவேண்டுமெனின், அவற்றின் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யவேண்டும்.

மாறாக ஏனைய தனியார் வங்கிகளிடம் கடன்பெறும்போது, அதில் குறித்தளவு பணத்தை கையூட்டலாகப் (கொமிஷன்) பெறமுடியும். குறைந்த வட்டிக்குக் கடன்பெறக்கூடிய வாய்ப்பு காணப்பட்டபோதிலும், அரசாங்கம் சீனாவிடம் உயர்வட்டிக்குக் கடன்பெற்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துமாறு நாம் அரசாங்கத்திற்கு சவால்விடுக்கின்றோம். அத்தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்தி நிச்சயமாக வெற்றியடையும்.

ஊழல் மோசடிகளின்றி, நாட்டைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி நாம் முன்னெடுக்கவுள்ள பயணத்தில் இணைந்துகொள்ளுமாறு அனைத்துத்தரப்பினருக்கும் அறைகூவல்விடுக்கின்றோம்.

நாம் ஆட்சிபீடமேறியதன் பின்னர் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தை மாற்றியமைத்து, ஜனநாயகத்தை வலுப்படுத்தக்கூடியவாறான புதிய திருத்தமொன்றைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று குறிப்பிட்டார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47