எரிவாயு சிலிண்டர் வெடிப்பு விவகாரம் ; நீதிமன்றத்தை நாடுவதற்கு பிரதான எதிரணி தீர்மானம்

Published By: Digital Desk 3

07 Jan, 2022 | 10:38 AM
image

(நா.தனுஜா)

நாடளாவிய ரீதியில் பதிவான சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரியவாறான நட்டஈட்டைப் பெற்றுக்கொடுப்பதுடன் அவர்களுக்கான நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யவிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

எரிவாயு சிலிண்டர் வெடிப்புச்சம்பவங்கள் தொடர்பில் சுயாதீனமானதும் விரைவானதுமான விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குற்றப்புலனாய்வுத்திணைக்களத்தில் முறைப்பாடளித்திருந்தனர்.

இருப்பினும் அம்முறைப்பாட்டை அடிப்படையாகக்கொண்டு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படாமையினால் அதிருப்தியடைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், தற்போது இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்தை நாடத்தீர்மானித்துள்ளனர்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இவ்விடயம் தொடர்பில் கூறியதாவது,

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச்சம்பவங்கள் பதிவாகத்தொடங்கி சுமார் 4 - 5 மாதங்கள் கடந்துள்ள நிலையில், அரசாங்கம் இன்னமும் இப்பிரச்சினைக்கு உரியவாறான தீர்வை வழங்கவில்லை.

எரிவாயு கலவையில் மாற்றம் செய்யப்பட்டமையே இத்தகைய வெடிப்புச்சம்பவங்கள் இடம்பெறுவதற்குக் காரணம் என்று சம்பந்தப்பட்ட எரிவாயு சிலிண்டர் நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றன. அவ்வாறிருந்தும் அந்த நிறுவனங்களின் தலைவர்கள் இன்னமும் கைதுசெய்யப்படாததன் காரணம் என்ன?

எரிவாயு சிலிண்டர் வெடிப்பினால் சில மரணங்களும் சம்பவித்திருக்கும் நிலையில், இதுபற்றிய சுயாதீன விசாரணைகளை விரைந்து முன்னெடுக்குமாறு வலியுறுத்தி நாம் குற்றப்புலனாய்வுத்திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தோம்.

இருப்பினும் தற்போதுவரை சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் முறையான விசாரணைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை. மறுபுறம் வீடுகளில் சமைப்பதற்கு அவசியமான எரிவாயு சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன் உணவகங்கள், ஹோட்டல்களின் உரிமையாளர்கள் அவற்றை மூடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் இவ்விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தை நாடுவதற்கு எமது கட்சி தீர்மானித்திருக்கின்றது.

அதன்படி எரிவாயு சிலிண்டர் வெடிப்புச்சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய நட்டஈட்டைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இன்றைய தினம் அல்லது நாளை நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யவிருக்கின்றோம் என்று குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17