புதிதாகப் பணத்தை அச்சடிப்பது மிகமோசமான பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவிக்கும் - காவிந்த ஜயவர்தன

Published By: Digital Desk 3

05 Jan, 2022 | 11:41 AM
image

(நா.தனுஜா)

அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ திடீரென்று தூக்கத்திலிருந்து விழித்தவர்போன்று அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதாக அறிவித்திருக்கின்றார். 

தற்போதைய வாழ்க்கைச்செலவிற்கு ஈடுகொடுப்பதற்கு 5,000 ரூபா போதுமானதல்ல என்பது ஒருபுறமிருக்க, எவ்வித கொடுப்பனவு அதிகரிப்பும் செய்யப்படாத தனியார்துறை ஊழியர்கள், விவசாயிகள், மீனவர்கள், நாளாந்தக் கூலித்தொழிலாளர்கள், கைத்தொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்ட ஏனைய தரப்பினரின் நிலையென்ன? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுமாத்திரமன்றி துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளைக் கேட்டறிந்து உரியவாறான செயற்திட்டங்களை வகுப்பதன் மூலம் நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணாமல், புதிதாகப் பணத்தை அச்சிட்டு குறிப்பிட்டதொரு தரப்பினருக்கு மாத்திரம் அதனைக் கொடுப்பனவாக வழங்குவதற்கு அரசாங்கள் மேற்கொண்டிருக்கும் முயற்சி மிகமோசமான பின்விளைவுகளைத் தோற்றுவிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

நாட்டுமக்கள் அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்களைக் கூறுகின்ற போதிலும், தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகத்தின்கீழ் புதுவருடம் இனிதாக அமையுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

அண்மைக்கால நெருக்கடிகளால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மக்கள் இனியும் இங்கு வாழமுடியாது என்று நாட்டைவிட்டு வெளியேறுகின்ற நிலையுருவாகியிருக்கின்றது. 

அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் மாத்திரமன்றி அத்தியாவசியமற்ற பொருட்களின் விலைகளும் முன்னரை விடவும் இருமடங்கினால் அதிகரித்திருப்பதுடன் நாடு மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ திடீரென்று தூக்கத்திலிருந்து விழித்தவர்போன்று அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதாக அறிவித்திருக்கின்றார். 

ஆனால் மரக்கறிகளின் விலைகள்கூட வெகுவாக அதிகரித்திருக்கின்ற தற்போதைய சூழ்நிலையில், வாழ்க்கைச்செலவை ஈடுசெய்வதற்கு 5,000 ரூபா எந்தவகையிலும் போதுமானதன்று.

எமது நாட்டில் அரச ஊழியர்கள் சுமார் 1.5 மில்லியன் பேர் இருக்கின்றார்கள். அதேபோன்று ஓய்வூதியம் பெறுவோர் சுமார் 650,000 பேரும் சமுர்த்தியப்பயனாளர்கள் 2.2 மில்லியன் பேரும் இருக்கின்றார்கள். இவர்கள் அரசாங்கம் அனைவருக்கும் பியகமவில் உள்ள பணத்தை அச்சடிக்கும் இயந்திரத்தின் ஊடாக தேவையாளனவு பணத்தைப் புதிதாக அச்சடித்து கொடுப்பனவை வழங்கும். 

ஆனால் தனியார்துறை ஊழியர்கள், விவசாயிகள், மீனவர்கள், சிறுகைத்தொழில் முயற்சியாளர்கள், சுற்றுலாத்துறைசார் முயற்சியாளர்கள், அன்றாடக்கூலித்தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏனைய தரப்பினரின் நிலை என்ன? ஆகவே 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவதெனின் அதனை நாட்டுமக்கள் அனைவருக்கும் வழங்கவேண்டும். 

போதியளவான பணம் இருந்தால்கூட சமையல் எரிவாயு, பால்மா உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொருளியல் நிபுணர்களின் ஆலோசனைகளைக் கேட்டறிந்து உரியவாறான செயற்திட்டங்களை வகுப்பதன் ஊடாக நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண முற்படாமல், புதிதாகப் பணத்தை அச்சிட்டு குறிப்பிட்டதொரு தரப்பினருக்கு மாத்திரம் வழங்குவதற்கு அரசாங்கம் முற்படுமாக இருந்தால் அதன் விளைவுகள் மிகவும் மோசமானவையாகவே அமையும்.

அடுத்ததாக சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்புப்பிரச்சினையைப் பொறுத்தமட்டில், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராகத் தற்போதுவரை எந்தவொரு சட்டநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. 

சிலிண்டர் வெடிப்புச்சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கப்படுமா என்பது குறித்து அரசாங்கம் இன்னமும் அறிவிக்கவில்லை. அதேபோன்று சிவப்புநிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, சந்தைக்குப் புதிதாக விநியோகிக்கப்பட்ட சிலிண்டரும் நேற்று முன்தினம் வெடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

இதனால் சாதாரண மக்கள் முகங்கொடுத்திருக்கக்கூடிய அச்சத்தையும் வேதனையையும் அரசாங்கத்தினால் ஒருபோதும் புரிந்துகொள்ளமுடியாது.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்துத் தீர்மானங்களுக்கும், அதன் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் ஆதரவு வழங்கிய சிலர் இப்போது அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டே அதன் செயற்பாடுகளை விமர்சிக்கின்றார்கள்.

ஆனால் ஆளுந்தரப்பில் அங்கம்வகிப்பதன் ஊடாகக் கிடைக்கப்பெறும் அனைத்து வரப்பிரசாதங்களையும் அவர்கள் பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள். 

ஆகவே இப்போது நாடு முகங்கொடுத்திருக்கின்ற மிகமோசமான நெருக்கடிக்கு ஒட்டுமொத்த அரசாங்கமும் பொறுப்புக்கூறவேண்டியது அவசியமாகும். 

குறிப்பாக இரசாயன உர இறக்குமதியைத் தடைசெய்வதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தினால் நாடளாவிய ரீதியில் விவசாயிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதுடன் நாட்டின் தேசிய உணவுற்பத்தி பெருமளவிற்கு வீழ்ச்சிகண்டிருக்கின்றது. 

இப்பிரச்சினைக்கு இன்னமும் உரியவாறான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாத நிலையில், எதிர்வருங்காலத்தில் ஏற்படப்போகின்ற உணவுப் பஞ்சத்திற்கு அரசாங்கமே பொறுப்புக்கூறவேண்டும்.

ஆனால் மறுபுறம் 50 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் வெறுமனே இரண்டு மாதங்களுக்குள் சஜித் பிரேமதாஸ தலைமையில் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கடந்த தேர்தல்களில் பெருமளவான மக்களின் வாக்குகளைப் பெற்றது. 

அதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சி என்ற நிலையில் மாத்திரம் இருந்துவிடாமல், நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகளுக்கு அவசியமான மருத்துவ உபகரணங்களை வழங்குதல், பாடசாலைகளுக்குத் தேவையான டிஜிட்டல் கற்றல் உபகரணங்களை வழங்குதல் என்பன உள்ளடங்கலாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் நாட்டுமக்களுக்கு அவசியமான பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. 

எனவே எதிர்வருங்காலத்தில் ஆட்சிப்பொறுப்பைக் கையேற்று, நாட்டை மீட்டெடுக்கக்கூடிய இயலுமையும் தலைமைத்துவமும் சஜித் பிரேமதாஸவிடம் மாத்திரமே இருக்கின்றது என்பதை இப்போது மக்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்கள் என்று தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33