12.1 சதவீதமாக உயர்வடைந்தது பணவீக்கம் - உணவு, உணவல்லாப்பொருட்களின் விலையேற்றமே காரணம் என்கிறது மத்திய வங்கி

Published By: Digital Desk 3

01 Jan, 2022 | 01:37 PM
image

(நா.தனுஜா)

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாக மதிப்பிடப்படும் பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதம் 12.1 சதவீதமாக உயர்வடைந்திருக்கின்றது. இப்பணவீக்கமானது கடந்த நவம்பர் மாதத்தில் 9.9 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில், அது டிசம்பர் மாதத்தில் 2.2 சதவீத அதிகரிப்பைக் காண்பித்திருக்கின்றது.  

கடந்த ஒரு மாதகாலத்தில் மரக்கறிகள், உடன்மீன் போன்ற உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருள், போக்குவரத்துக்கட்டணம் போன்ற உணவல்லாப்பொருட்கள், சேவைகளின் விலைகள், கட்டணங்களில் ஏற்பட்ட அதிகரிப்பே இப்பணவீக்க உயர்விற்குப் பிரதான காரணமாக அமைந்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் கடந்த அக்டோபர் மாதம் பெருந்தொகையான நாணயம் அச்சிடப்பட்டதுடன் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியும் குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சிகண்டிருந்த பின்னணியில், தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாக மதிப்பிடப்படும் நாடளாவிய ரீதியிலான பணவீக்கம் கடந்த நவம்பர் மாதம் 11.1 சதவீதமாகப் பதிவாகியிருந்ததுடன் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து இம்முறையில் கணிப்பிடப்படும் பணவீக்கம் இரட்டை இலக்கங்களில் பதிவாகியிருக்கும் முதலாவது சந்தர்ப்பமாகவும் அது அமைந்திருந்தது.

இவ்வாறானதொரு நிலையிலேயே தற்போது கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டிலும் பணவீக்கமானது நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் டிசம்பர் மாதம் சடுதியான உயர்வைப் பதிவுசெய்துள்ளது. இப்பணவீக்கம் பெரும்பாலும் வழங்கலுடன் தொடர்புடைய காரணிகளாலேயே தூண்டப்பட்டிருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

குறிப்பாக உணவு மற்றும் உணவல்லாப்பொருட்களின் மாதாந்த விலையதிகரிப்பு பணவீக்கம் உயர்வடைவதற்கான முக்கிய காரணமாக அமைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள மத்திய வங்கி, கடந்த நவம்பர் மாதம் 17.5 சதவீதமாகப் பதிவாகியிருந்த உணவுப்பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 22.1 சதவீதமாக அதிகரித்ததாகவும் நவம்பரில் 6.4 சதவீதமாகக் காணப்பட்ட உணவல்லாப்பணவீக்கம் டிசம்பரில் 7.5 சதவீதமாக உயர்வடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.

மரக்கறிகள், உடன்மீன், பச்சைமிளகாய் உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலைகளில் கடந்த மாதம் குறிப்பிடத்தக்களவிலான அதிகரிப்பு அவதானிக்கப்பட்டதாகவும் உணவல்லாப்பொருட்களைப் பொறுத்தமட்டில் குடிவகைகள், புகையிலை ஆகியவற்றின் விலைகள் மற்றும் உணவகங்கள், விடுதிகள், போக்குவரத்து என்பவற்றுக்கான கட்டணங்கள் உயர்வடைந்ததாகவும் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை உணவு மற்றும் உணவல்லாப்பொருட்களின் விலைகளைப் பொறுத்தமட்டில், அவற்றில் முறையே 1.8 சதவீதம் மற்றும் 0.84 சதவீதம் என்ற அடிப்படையிலேற்பட்ட அதிகரிப்பின் காரணமாக கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணின் மாதாந்த மாற்றம் கடந்த டிசம்பரில் 2.64 சதவீதமாகப் பதிவானது.

இக்கணிப்பீட்டின்படி பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தைப் பிரதிபலிக்கின்ற மையப்பணவீக்கமானது கடந்த நவம்பரில் 7.0 சதவீதமாகப் பதிவாகியிருந்த போதிலும், அது டிசம்பரில் 8.3 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. அதேவேளை நவம்பரில் 4.0 சதவீதமாகப் பதிவான ஆண்டுக்கான சராசரி பணவீக்கம் டிசம்பரில் 4.4 சதவீதமாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37