தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றமேற்பட்டுள்ளதாக அப்போலோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இந்திய இணையத்தளங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றோடு 11 நாட்கள் கடந்துவிட்டன. 

‘லண்டனிலிருந்து மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிப்பதற்காக இந்தியா வந்துள்ளனர்.

இந்நிலையில் அப்போலோ மருத்துவர்களின் துணையோடு லண்டன் மருத்துவக் குழுவினர் அளித்த சிகிச்சையின் விளைவாக முதல்வரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போயஸ் கார்டனில் இருந்து காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிப்பட்டார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. 

நுரையீரலில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக, மூச்சுத் திணறலுக்குட்பட்டார். இதையடுத்து, நுரையீரல் தொற்று நோய்க்கு சிறப்பு மருத்துவர்களை தேடி வெளிநாடுகளுக்குப் பறந்தனர் சசிகலாவின் உறவுகள். இதையடுத்து, லண்டனைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் வரவழைக்கப்பட்டார். முதல்வருக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டன.

வைத்தியர்களின் தொடர் கண்காணிப்பில் ஜெயலலிதா வைக்கப்பட்டுள்ளார். தற்போது, அவர் பூரண நலத்துடன் உள்ளார். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்ட வைத்திய குழுவினர்  சீரான இடைவெளியில் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.

இதற்கிடையே ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க லண்டனில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர் வைத்தியர் ரிச்சர்ட்  ஜோன்  பீலே வரவழைக்கப்பட்டுள்ளார். அவரும் வைத்தியர்கள் குழுவினருடன் இணைந்து ஜெயலலிதாவின் உடல்நிலையை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் ஜெயலலிதாவை சந்திக்க நாள்தோறும் அமைச்சர்கள், அரச உயர் அதிகாரிகள், அ.தி.மு.க.வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்ற வண்ணம் உள்ளனர். இவ்வாறு வைத்தியசாலைக்கு செல்பவர்கள் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றனர்.

11 ஆவது நாளாக சிகிச்சை

ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. ஜெயலலிதாவுக்கு 11 ஆவது நாளாக வைத்தியசாலையில் பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பரிசோதனையின் அடிப்படையில் ஜெயலலிதாவின் உடல்நிலை நன்கு குணமடைந்திருப்பது தெரியவந்தது.

இருப்பினும் வைத்தியர்கள் குழுவினர் அவருடைய உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஜெயலலிதாவுக்கு ஓய்வு தேவை என்பதால் இன்னும் சில நாட்கள் வைத்தியசாலையில் இருப்பார் என்று தெரிகிறது. இதற்கிடையே ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி தவறான தகவல் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வதந்திக்கு முற்றுப்புள்ளி

இதற்கிடையே தமிழக ஆளுநரான வித்யாசாகர் ராவ் அப்பல்லோ வைத்தியசாலைக்கு சென்று முதல்வர் ஜெயலலிதாவை பார்வையிட்டு, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து வைத்தியர்களுடன் கலந்தாலோசித்துள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரபூர்வ செய்திக்குறிப்பொன்றையும் அவர் வெளியிடடுள்ளார். இதன் அடிப்படையில் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு ஆளுநர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்த நிலையில்  தமிழக அமைச்சர்கள், பொலிஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன், சென்னை பொலிஸ் கமிஷனர் ஜோர்ஜ் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளும் அப்பல்லோ வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். அங்கு  ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடல்நிலையில் முன்னேற்றம்

இதற்கிடையே அப்பல்லோ வைத்தியசாலையின் தலைமை செயற்பாட்டு அதிகாரி சுப்பையா விஸ்வநாதன், முதல் அமைச்சர் ஜெயலலிதாவின்  உடல்நலம் குறித்து செய்தி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். 

அச் செய்தி அறிக்கையில்,

அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. 

கடந்த மாதம் 30 ஆம் திகதி லண்டனில் உள்ள செயின்ட் தோமஸ் வைத்தியசாலையில் இருந்து சர்வதேச நிபுணரான வைத்தியர்  ரிச்சர்ட் ஜோன் பீலே, அப்பல்லோ வைத்தியசாலைக்கு வந்து முதல்-அமைச்சருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

முதல்-அமைச்சரின் உடல்நிலையை வைத்தியர் ரிச்சர்ட்  ஜோன் பீலே பரிசோதனை செய்தார். ஜெயலலிதாவின் உடல்நிலையை பரிசோதனை செய்து ஏற்கனவே வழங்கப்பட்ட பல்வேறு அறிக்கைகளையும் அவர் ஆய்வு செய்தார். மேலும் முதல் அமைச்சருக்கு சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்ட வைத்தியர்கள் குழுவினருடனும் அவர் ஆலோசனை நடத்தினார்.

ஒத்துழைப்பு தருகிறார்

இந்த ஆலோசனையின் அடிப்படையில், முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கிருமி தொற்றுக்கான நோய் எதிர்ப்பு மருந்தினை தொடர்ந்து வழங்கும்படி அறிவுறுத்தினார். 

ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து வைத்தியர் ரிச்சர்ட் ஜோன் பீலேயிடம் நிபுணத்துவ கருத்தினை நாங்கள் பெற்றிருக்கிறோம்.

மருத்துவ சிகிச்சைக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா முழு ஒத்துழைப்பு தருகிறார். இந்த சிகிச்சையை மேலும் சில நாட்கள் வைத்தியசாலையில்  தங்கியிருந்து அவர் பெறவேண்டும் என்று நாங்கள் அறிவுறுத்தியிருக்கிறோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு

இந்நிலையில் அ.தி.மு.க. வின் ஊடகப் பேச்சாளர் சி.ஆர். சரஸ்வதி தெரிவிக்கையில்,

“முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆரோக்கியமாக உள்ளார். அவருக்கு வைத்தியசாலையில்  நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஏதாவது குற்றம் சொல்லவேண்டும் என்பதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டிவருகிறார்.

சட்டம்-ஒழுங்கை சீர் குலைக்க வேண்டும் என்பதற்காக வேண்டும் என்றே வதந்திகள் பரப்பப்படுகின்றன. இது தவறானது. இதனை செய்பவர்கள் யாராக இருந்தாலும் நிறுத்திக்கொள்ள வேண்டும். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றாலும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா அரசு பணிகளை அன்றாடம் கவனித்து வருகிறார்” என்றார்.

ஜோதிடர்கள் கருத்து 

இதேவேளை, தமிழக முதல்வர் பூரணநலம் பெற்று விரைவில் வீடு திரும்புவதோடு ஆரோக்கியத்துடன் மீண்டும் தமிழகத்தினை ஆட்சி செய்வார் என இந்திய பிரபல ஜோதிடர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தமிழக முதல்வர் ஜெயலலிதா சுகயீனம் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22 ஆம் திகதி முதல் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 12 நாட்களாக அவரது முகத்தைக் கூட பார்க்க முடியாமல் தொண்டர்கள் கவலையடைந்துள்ளனர். 

மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டாலும் அவரின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வருகின்றன. 

முதல்வர் ஜெயலலிதாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதில் இருந்தே தொண்டர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் கோவில் கோவிலாக சென்று சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். 

இந்த சூழ்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாதகப்படி அவரது உடல்நிலையில் உள்ள பிரச்சினை மற்றும் அது எப்பொழுது சரியாகும் போன்ற தகவல்கள் சமூக வலைதளமான வாட்ஸ்அப் மூலம் பரவி வருகிறது.

வாட்ஸ் அப் தகவல் அ.தி.மு.க. தொடர்பான வாட்ஸ் அப் குரூப் ஒன்றில் வந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஜாதக தகவலில், முதல்வர் ஜெயலலிதாவின் ஜாதகத்தில், குருவுக்கு திரிகோணத்தில் ராகு இருக்கிறது. குரு நமது பிராணனை குறிப்பார். ராகு அதை தடுக்கும் செயல்கள் செய்வார். தற்போது எனவே பிறப்பு குருவுக்கு திரிகோணத்தில், கோச்சார ராகு செல்லும் போது இவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இருப்பினும் கோச்சார குருவின் பார்வை பிறப்பு சுக்கிரன் மீது இருப்பதால் மருந்துகள் வேலை செய்யும். மேலும் செய்யும் பரிகாரங்கள் பலிக்கும். குரு கல்லீரல் மற்றும் சுவாசத்தை குறிப்பவர், எனவே இந்த உறுப்புகளில் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம்.

ராகு காலத்தில் பரிகாரம் அமாவாசை நாளில் தொடங்கி பரிகாரமாக ராகுவின் அதிதேவதை தெற்கு திசை பார்த்து காளிக்கு பால் அபிஷேகம் 9 நாட்கள் ராகு காலத்தில் செய்வது நல்ல பலன்களை தரும் என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் ராகுகாலத்தில் பாலபிஷேகம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா சிம்மராசி, மகம் நட்சத்திரம், மிதுன லக்னம் என்பது அனைவருக்கும் தெரியும். கேது திசையில் பிறந்த ஜெயலலிதாவிற்கு தற்போது குரு திசை சனி புத்தி நடக்கிறது. ஒருவரின் ஜாதகத்தில் தசாபுத்தி மாறும் போது விபத்து, உடல்நலக்குறைவு ஏற்படும். பரிகாரங்கள் செய்வதன் மூலம் இந்த சிரமங்களைத் தவிர்க்கலாம். கோடிகணக்காக தொண்டர்கள் செய்யும் பிரார்த்தனைகள் ஜெயலலிதாவைக் காக்கும் என்கின்றனர் தமிழகத்தில் உள்ள பிரபல ஜோதிடர்கள்.

சிம்ம ராகு புரட்டாசி மாதம் சூரியன் கன்னி ராசியில் இருக்கிறார். குரு பெயர்ச்சி சமீபத்தில் நடைபெற்றதால் கன்னியில் குரு இருக்கிறார். இது ஜெயலலிதாவின் சிம்மராசிக்கு 2 ஆவது இடம் ஆகும். ஜென்ம ராசியில் இருந்த புதன்  கன்னி ராசிக்கு மாறுகிறார். இது இரண்டாம் இடமாகும். சிம்மத்தில் தற்போது ராகு அமர்ந்து இருக்கிறார்.

தசாபுத்திகள் நிலை சனி பகவான் தற்போது ஜெயலலிதாவின் ஜாதகத்தில் 4 ஆம் இடத்தில் இருக்கிறார். இப்போது குரு திசையில் சனிபுத்தி நடப்பதால்அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. செவ்வாய் தற்போது 5 ஆம் இடத்திலும் அமர்ந்துள்ளார். ஜெயலலிதாவின் தைரியஸ்தானங்கள் வலுவாக உள்ளது. அவர் உடல்நலக்கோளாறுகளை ஜெயித்து விரைவில் மீண்டு வந்து நல்லாட்சி தருவார் என்றும் ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

சனிபகவான் நிலை ஜெயலலிதாவின் ராசியில் தற்போது சனிபகவான் ராசிக்கு 4 ஆம் இடமான விருச்சிகத்தில் உள்ளதால் தற்போது தேக ஆரோக்கிய குறைபாடு உள்ளது. சனிபகவான் உடல் பாதிப்பையும் ஏற்படுத்தினாலும் நல்லதையே செய்வார் என்கின்றனர் ஜோதிடர்கள். டிசம்பர் 5 ஆம் திகதி 2016 க்குப் பின்னர் அவர் உடல் உபாதைகள் நீங்கப்பெற்று நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் நாடாழ்வார் என்றும் ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

வெளிநாட்டு ஜோதிடர்

வெளிநாட்டு ஜோதிடர் என்ன சொல்கிறார் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தாதிச்சி என்ற ஜோதிடர் சென்னை வந்துள்ளார். 

அவரது இயற்பெயர் மைக்கேல் டோத். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஜாதகம் பற்றி இந்திய ஆங்கில நாளிதல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு கடந்த 2014 அக்டோபர் மாதத்தில் இருந்து உடல்நலப் பிரச்சினைகள் இருக்கின்றன. அவருக்கு இப்போது சனி புத்தி நடக்கிறது. அவரது ஜாதகப்படி 6 ஆம் இடத்துக்குரிய சனி தற்போது விருச்சிகத்தில் சஞ்சீவிக்கிறார். குரு தற்போது பாதகாதிபதியாக உள்ளார். இதனால் தான் அவருக்கு ஜாதகப்பிரகாரம் தற்போதைய உடல் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன.

மீண்டு எழுவார் 2017 இல் ராகு இடம் பெயருகிறார்.அதன் பிறகு பெப்ரவரி மாதத்தில் இருந்து லக்னாபதி நன்மைகளை அள்ளித் தருவார். தற்போது சிகிச்சை அளித்தும்வரும் இளம் டாக்டர் ஒருவரின் முயற்சியால் ஜெயலலிதாவின் உடல்நிலை நன்கு தேறி வருகிறது. 

இந்த இக்கட்டான சூழலில்இருந்து ஜெயலலிதா நிச்சயம் விடுபட்டு மீண்டு எழுவார். இதன்பிறகு 2 ஆண்டுகளுக்கு அவர் எந்த பிரச்சினையும் இன்றி சிறப்பாக நிர்வாகம் நடத்துவார். ஜெயலலிதா ஜாதகம் உண்மையிலேயே ஒரு அருமையான யோக ஜாதகம். அவர் தன்னலமற்ற தலைவர். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். அது நிச்சயம் நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ஜெயலலிதா பூரண நலத்துடன் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்பதே அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் அவருக்கு வாக்களித்த தமிழக மக்களின் பிரார்த்தனையாக உள்ளது.

முகப்புத்தகத்தில் தமிழச்சியின் கருத்தால் சர்ச்சை

அப்பலோ நாடகம் முடியும் நேரம். காட்சிகள் இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது.

ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 11-ஆவது நாளான இன்று ஒரே நேரத்தில் அ.தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு அவசர ஆலோசனை நடத்துகின்றனர். இதை செய்வது காவல்துறையினர்.

ஒன்று இறுதியான முடிவு அறிவிக்கப்படும். அல்லது 'சிங்கப்பூருக்கு ஜெயலலிதா அவசரமாக அழைத்துச் செல்லப்படுகிறார்' என்று சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு தமிழக மக்களிடம் அறிவிப்பு செய்யப்படும்.

ஆனால் சிங்கப்பூருக்கு கொண்டு சென்ற சில மணி நேரங்களில் ஒரு அறிவிப்பு வரும் பாருங்கள்... 

இவ்வாறு தமிழச்சி தனது முகப்புத்தகத்தில் கருத்தொன்றை பதிவுசெய்துள்ளார்.

எது எவ்வாறு இருப்பினும் முழுப் புசணிக்காயை சோற்றில் மறைப்பதென்பது இயலாத காரியமே! தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் நலம் பெற்று ஆட்சியில் நீடிக்க வேண்டுமென்பதே பலரதும் அவா !