கடனை மீளச்செலுத்த முடியாத நிலையை அடைவதற்கான அனைத்து சாத்தியங்களும் இலங்கைக்கு காணப்படுகின்றன - பேராசிரியர் சாந்த தேவராஜன்

Published By: Digital Desk 3

30 Dec, 2021 | 04:23 PM
image

(நா.தனுஜா)

அண்மையில் கடன் மீள்செலுத்துகை ஆற்றலின் அடிப்படையில் ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனத்தினால் இலங்கை தரமிறக்கம் செய்யப்பட்டமை, தற்போது இலங்கையின் வசமுள்ள வெளிநாட்டுக்கையிருப்பு மற்றும் எதிர்வரும் ஆண்டில் செலுத்தவேண்டியுள்ள கடன்கள் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், நாடு 'கடனை மீளச்செலுத்தமுடியாத' நிலைக்குத் தள்ளப்படுவதற்கான அனைத்து சாத்தியப்பாடுகளும் காணப்படுவதாக தெற்காசியா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கப் பிராந்தியங்களுக்கான உலக வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பொருளியலாளர் சாந்த தேவராஜன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி 'கடனை மீளச்செலுத்தமுடியாத' நிலைக்குத் தள்ளப்பட்ட லெபனான் அதன் பின்னர் எதிர்கொண்ட விளைவுகள் தொடர்பில் விபரித்துள்ள தேவராஜன், இலங்கையும் லெபனானும் ஒன்றல்ல என்றாலும் இருநாடுகளுக்கும் இடையில் பல்வேறு ஒற்றுமைகள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். ஆகவே எத்தகைய விலையைச் செலுத்தியேனும் கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலைக்குத் தள்ளப்படுவதை இலங்கை தவிர்த்துக்கொள்ளவேண்டியது அவசியமாகும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலக வங்கியின் முன்னாள் பதில் சிரேஷ்ட பொருளியலாளராகவும் அபிவிருத்திப் பொருளாதாரத்தின் சிரேஷ்ட பணிப்பாளராகவும் பல்வேறு பிராந்தியங்களிலும் உலக வங்கியின் சிரேஷ்ட பொருளியலாளராகவும் பணியாற்றிய பேராசிரியர் சாந்த தேவராஜன் 'பார்த்ஃபைன்டர்' அமைப்பின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கையின் பொருளாதார நிலை குறித்து எழுதியிருக்கும் கட்டுரையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியிருக்கின்றார். 

அக்கட்டுரையில் அவரால் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் முக்கிய விடயங்கள் வருமாறு,

கடன் மீளச்செலுத்துகை ஆற்றலை அடிப்படையாகக் கொண்டு கடந்த 17 ஆம் திகதி ஃபிட்ச் தரப்படுத்தல் முகவர் நிலையத்தினால் இலங்கை 'சிசி' நிலைக்குத் தரமிறக்கப்பட்டுள்ளது. இது 'கடனை மீளச்செலுத்த முடியாது' (தாப்பிழை) என்பதைக் குறிக்கின்ற 'சி' தரத்திற்கு முன்னரான நிலையாகும். தற்போது காணப்படும் (மத்திய வங்கியின் அறிவிப்பிற்கு முன்னர்) 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக்கையிருப்பு மற்றும் எதிர்வரும் ஜனவரி மாதம் மீளச்செலுத்தவேண்டியுள்ள ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், நாடு 'கடனை மீளச்செலுத்த முடியாத' நிலைக்குத் தள்ளப்படுவதற்கான அனைத்து சாத்தியப்பாடுகளும் காணப்படுகின்றன. இது நடந்தால் நாட்டினதும் மக்களினதும் நிலை என்னவாகும்?

அண்மையகாலத்தில் கடனை மீளச்செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட நாடுகளின் அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு ஓரளவிற்கு இதுகுறித்த தெளிவைப் பெற்றுக்கொள்ளமுடியும். கடந்த 2020 ஆம் ஆண்டு வழமைக்கு மாறாக பல்வேறு நாடுகள் அவற்றின் கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டமையை அவதானிக்கமுடிந்தது. 

அந்த நாடுகளின் பட்டியலில் மதம் சார்ந்து தெளிவான வரையறைகளைக்கொண்ட, சிவில் யுத்த வரலாற்றைக்கொண்டு, சுற்றுலாத்துறையிலும் வெளிநாட்டில் பணிபுரிவோரால் அனுப்பப்படும் பணத்திலும் பொருளாதாரம் பெருமளவில் தங்கியிருக்கின்ற லெபனானும் ஒன்றாகும். இலங்கை கடனை மீளச்செலுத்தமுடியாத நிலைக்குத் தள்ளப்படும் பட்சத்தில் என்ன நேரும் என்பதை அந்நாட்டின் அனுபவங்கள் மூலம் விளங்கிக்கொள்ளமுடியும்.

நாடொன்று தான் பெற்றுக்கொண்ட கடன்களுக்கான வட்டி மீள்செலுத்துகை உள்ளிட்ட நிபந்தனைகளைப் பூர்த்திசெய்வதற்குத் தவறும்போது, அந்நாடு கடனை மீளச்செலுத்த முடியாத முறிவடைந்த நிலையை அடைந்திருப்பதாகக் கொள்ளப்படும். 

அந்தவகையில் லெபனான் உள்ளடங்கலாக கடனை மீளச்செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட பெரும்பாலான நாடுகள், முதலில் எதிர்கொண்ட விளைவு வெளிநாடுகளிடமிருந்து கொள்வனவில் ஈடுபடமுடியாதமையேயாகும். குறிப்பாக இதன்போது அந்நாட்டினால் (லெபனான்) அதன் நடைமுறைக்கணக்கிலிருந்து கொடுக்கல், வாங்கல்களில் ஈடுபடமுடியாத நிலையேற்பட்டது. 

இது இறக்குமதியில் எத்தகைய வீழ்ச்சியை (சுமார் 40 சதவீதம்) ஏற்படுத்தியது என்பதையும் அதனால் பொருளாதாரத்தின் இயங்குகையில் ஏற்பட்ட பாதிப்பையும் அண்மையில் உலக வங்கியினால் வெளியிடப்பட்ட ஆவணங்களின் ஊடாகப் புரிந்துகொள்ளமுடியும். 

கடனை மீளச்செலுத்தமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட லெபனானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒருவருடத்திற்குள் 20 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. அதேபோன்று நாணயமாற்றுப்பெறுமதி 129 சதவீத வீழ்ச்சியைப் பதிவுசெய்தது. கடந்த 2020 ஜனவரியில் 10 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கம் 2021 மார்ச் மாதம் 158 சதவீதத்தை எட்டியது.

பொருளாதார மந்தநிலையும் பணவீக்க அதிகரிப்பும் வறிய மற்றும் சாதாரண மக்கள் மத்தியில் மிகமோசமான தாக்கங்களை ஏற்படுத்தும். 2020 இல் உணவுப்பணவீக்கம் 254 சதவீதமாகப் பதிவான நிலையில், உணவுப்பொருள் நுகர்விற்காக மக்கள் அவர்களது வருமானத்தில் பெருந்தொகையைச் செலவிடவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர். உணவுப்பொருட்கள், எரிபொருள் மற்றும் மருந்துப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக அவர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர். 

2020 ஆம் ஆண்டின் முடிவில் நடாத்தப்பட்ட ஆய்வொன்றில் அந்நாட்டில் சுமார் 40 சதவீதமான குடும்பங்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசியத்தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ளமுடியாத நிலையிலிருப்பது வெளிப்பட்டுள்ளது. உற்பத்தி நிலையங்களைப் பொறுத்தமட்டில் ஐந்தில் ஒன்று முழுமையாக மூடப்பட்டிருப்பதுடன் ஏனையவை சராசரியாக 35 சதவீத இயலுமையுடன் மாத்திரமே இயங்குகின்றன. 

லெபனானில் ஏற்கனவே உயர்வாகக் காணப்பட்ட வேலையின்மை, தற்போது 40 சதவீதமாக உயர்வடைந்திருக்கின்றது. இவற்றை விடவும் கவலைக்குரிய விடயம் எதுவென்றால், மிகமோசமான பொருளாதார நெருக்கடியானது வீதிகளில் வன்முறைகள் அரங்கேறுவதற்கு வழிவகுத்துள்ளது.

ஆனால் இலங்கை லெபனான் அல்ல என்பது நிச்சயமாகும். இருப்பினும் இருநாடுகளுக்கும் இடையில் பல்வேறு ஒற்றுமைகள் காணப்படும் நிலையில், இலங்கை கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலைக்குத் தள்ளப்படுவதை எவ்வாறேனும் தவிர்த்துக்கொள்ளவேண்டியது மிகவும் அவசியமாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02