தன்னினச்சேர்க்கையாளர்களான இரு ஆண்கள் தமது மரபணு கூறுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டட புரட்சிகர செயற்கைக் கருத்தரித்தல் மூலம் ஒரே சமயத்தில் 3 குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளனர்.

இதன் மூலம் மேற்படி 3 குழந்தைகளும் இரு தந்தையருக்குப் பிறந்த அதிசய குழந்தைகள் என்ற பெயரைப் பெறுகின்றன.

கடந்த 3 மாத காலமாக மருத்துவமனையில் விசேட கவனிப்பில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த அந்தக் குழந்தைகள் தற்போது அவற்றின் தந்தையரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. அமெரிக்க இலினொயிஸ் மாநிலத்தில் சிக்காகோ நகரைச் சேர்ந்த தன்னினச் சேர்க்கை ஜோடியான ஜஸ்டின் ருயஹ்ஸ் என்ற நபரும் அடம் சுமீட் என்ற நபருமே இவ்வாறு ஒரே சமயத்தில் 3 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளனர்.

தானமாக பெறப்பட்ட கரு முட்டைகளில் மேற்படி இருவரது மூலவுயிர்க்கலங்களும் பதிக்கப்பட்டு இந்தப் புரட்சிகர கருத்தரித்தல் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து ஆய்வுகூடத்தில் விருத்தியான முளையக்கலங்கள் வாடகைத் தாயொருவரால் கருப்பையில் சுமக்கப்பட்டு குழந்தைகள் பிரசவிக்கச் செய்யப்பட்டுள்ளன.

இரட்டைப் பெண் குழந்தைகளையும் ஒரு ஆண் குழந்தையையும் உள்ளடக்கிய மேற்படி குழந்தைகளுக்கு முறையே ஹார்பர்,கொலின்ஸ் மற்றும் எம்மெட் எனப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.