சிரியாவில் பிறந்து 30 நாட்களேயான குழந்தையை இடிபாடுகளுக்கிடையே சிக்கியநிலையில் அக்குழந்தையினை மீட்ட மீட்பு படை வீரர் ஒருவர் காப்பாற்றிய போது கண்கலங்கிய சம்பவம் உலக மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சிரியாவில் கடந்த வியாழன் அன்று ரஷ்ய கூட்டுபடையினர் நடத்திய வான்வழி தாக்குதலால் பொதுமக்கள் பலரும் பாதிப்புக்குள்ளாயினர்.இத்தாக்குதலில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதி  ஜார்ஜனஸ் நகருக்கு அருகே உள்ள இத்லிப் கிராமம். இப்பகுதியில் இடிபாடுகளுக்கு இடையே உள்ளவர்களை மீட்பு படையினர் மீட்டு வந்த நிலையில், கட்டிட இடிபாடுகளுக்கு மத்தியில் குழந்தை ஒன்று சிக்குண்டு இருப்பதைக் கண்ட மீட்பு படை வீரர்கள் உடனடியாக கட்டிடத்தை உபகரணங்கள் கொண்டு உடைத்தனர். 

அதன் பின் உள்ளே சென்று குழந்தையை பார்த்த போது குழந்தையின் முகத்தில் இரத்தம் மற்றும் உடலில் தூசி படிந்திருந்த நிலையில், குழந்தையின் மெதுவான அழுதுக் கொண்டும் இருந்தது. இதைக் கண்ட மீட்பு படை வீரர் அபு கிபாஹ் குழந்தையை தூக்கிக் கொண்டு சிகிச்சையளிப்பதற்கு ஆம்புலன்ஸிற்கு கொண்டு சென்றார். 

அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக தயார் செய்து கொண்டிருந்த போது, அபு கிபாஹ் குழந்தையை பார்த்து தனது உணர்ச்சியை அடக்க முடியாமல் அழுத சம்பவம் அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

வைத்தியசிகிச்சை அளித்த போது குறித்த குழந்தை பிறந்து 30 நாட்களே தான் ஆகியுள்ளது என்ற தகவலும் தெரியவந்துள்ளது.

அது மட்டுமில்லாமல் இக்காட்சியை நேரடி தொகுப்பு செய்த தனியார் ஊடகத்தைச் சேர்ந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட் சில்வர்டோன் கண்கலங்கியது தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அனைவரது மனதையும் உருக்கியுள்ளது.

இது குறித்து கேட் சில்வர்டோன் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், இக்காட்சியை காணும் போது கூறுவதற்கு வார்த்தைகள் இல்லையெனவும், தானும் ஒரு சராசரி மனிதன் தானே தன்னால் உணர்ச்சியை கட்டுபடுத்த முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

குறித்த குழந்தை தற்போது உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், மேலும் கட்டிட இடிபாடுகளிக்கு மத்தியில் சிக்கியிருந்ததால் அதற்கான சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.