வெளிநாட்டவரைத் திருமணம் செய்ய பாதுகாப்பு அமைச்சின் அனுமதி எதற்கு ? - எதிர்க்கட்சி சாடல்

Published By: Digital Desk 3

27 Dec, 2021 | 03:48 PM
image

(நா.தனுஜா)

வெளிநாட்டவர் ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சில் அனுமதி பெறப்படவேண்டும் என்று பதிவாளர் நாயகத்தினால் சுற்றுநிருபமொன்று வெளியிடப்பட்டுள்ளது. 

திருமணம் என்பது இனம், மதம், மொழி, நாடு உள்ளிட்ட தனிப்பட்ட அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு ஒருவருக்கு இருக்கக்கூடிய அடிப்படை மனித உரிமையாகும்.

ஆனால் அதற்கும் பாதுகாப்பு அமைச்சில் அனுமதி பெறுமாறு வலியுறுத்துவதன் ஊடாக ஒருவரின் தனிப்பட்ட விவகாரங்களிலும் அடிப்படை மனித உரிமைகளிலும் அரசாங்கம் தலையீடு செய்கின்றது. 

இத்தகைய மோசமான அரசாங்கத்தை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டில் பதவியிலிருந்து கவிழ்ப்பதற்கு நாட்டுமக்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி விவசாய அமைச்சின் செயலாளரைப் பதவியிலிருந்து விலக்குவதன் மூலமும் ஜனாதிபதியின் செயலாளர் அவராகவே பதவியிலிருந்து இராஜினாமா செய்வதன் மூலமும் பொருளாதாரம் உள்ளடங்கலாகப் பல்வேறு துறைகள் சார்ந்தும் நாடு முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளுக்குத் தீர்வு கிடைத்துவிடுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் திங்கட்கிழமை (27) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது ,

அண்மைக்காலத்தில் அத்தியாவசியப்பொருட்களின் சடுதியான விலையேற்றம் காரணமாக மக்களின் வாழ்க்கைச்செலவு உயர்வடைந்திருப்பதனால், அவர்கள் தமது அன்றாட வாழ்க்கையை முன்னெடுத்துச்செல்வதில் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இதற்கு உலகசந்தையில் ஏற்பட்ட பொருட்களின் விலையதிகரிப்போ அல்லது சர்வதேச மட்டத்தில் உயர்வடைந்த பணவீக்கமோ காரணமல்ல. 

மாறாக அரசாங்கத்தின் தூரநோக்கற்ற தீர்மானங்களும் செயற்திறனற்ற பொருளாதார நிர்வாகமுமே நாட்டின் தற்போதைய வங்குரோத்து நிலைக்கான பிரதான காரணங்களாகும். 

இரசாயன உர இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தினால் விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் முழுமையாகப் பாதிப்படைந்ததுடன் அதன் விளைவாக நாட்டின் தேசிய உற்பத்தி வீழ்ச்சிகண்டுள்ளது. 

அரசாங்கம் அரிசி உள்ளடங்கலாக அத்தியாவசியப்பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தமுடியாத நிலையிலிருக்கின்றது.

ஒவ்வொருவரும் தமது வீடுகளிலேயே அவசியமான மரக்கறி வகைகளைப் பயிர்செய்ய ஆரம்பிக்கவேண்டும் என்று ஆளுந்தரப்பு உறுப்பினரொருவர் ஆலோசனை கூறுகின்றார். இத்தகைய ஆலோசனைகளைக் கூறுவதற்காக மக்கள் தமக்கு வாக்களிக்கவில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

இம்முறை புதிய ஆண்டில் தொடக்கத்திலேயே நாடு பொருளாதார ரீதியில் மாத்திரமன்றி, மேலும் பல்வேறு வழிகளிலும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது.

குறிப்பாக கடந்த இருமாதங்களாக நாடளாவிய ரீதியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச்சம்பவங்கள் தொடர்ச்சியாகப் பதிவாகிவரும் நிலையில், அரசாங்கம் தற்போதுவரை இப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்கவில்லை. 

அதேபோன்று நாட்டில் நிலவும் உரப்பிரச்சினைக்கும் இன்னமும் தீர்வு காணப்படவில்லை. இவையனைத்தும் அரசாங்கத்தின் நிர்வாக ரீதியான தோல்வியையே வெளிப்படுத்துகின்றன.

மேலும் அண்மைய காலத்தில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவின்மீது பழிசுமத்தப்பட்டுவந்தது. இப்போது அவர் தனது இராஜினாமா கடிதத்தைக் கையளித்திருப்பதாக அறியமுடிகின்றது. 

ஜனாதிபதியின் செயலாளர் பதவியிலிருந்து அவர் இராஜினாமா செய்வதன் மூலம் பொருளாதார் உள்ளடங்கலாக நாட்டின் பல்வேறு துறைகளிலும் நிலவும் நெருக்கடிகள் அனைத்தும் முடிவிற்கு வந்துவிடுமா? அடுத்த ஆண்டில் உணவுப்பஞ்சம் ஏற்படக்கூடும் என்று கூறிய விவசாயத்துறை அமைச்சின் செயலாளரைப் பதவி விலக்குவதன் ஊடாக அப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துவிடுமா? உண்மையில் மக்களின் வாக்குகள் மூலம் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கமே இப்பிரச்சினைகள் அனைத்திற்கும் பொறுப்புக்கூறவேண்டும். 

ஜனாதிபதியின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளரை பதவி விலகுமாறு மக்கள் கோரவில்லை. மாறாக 2022 ஆம் ஆண்டில் ஏற்படக்கூடிய மிகப்பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதற்கு அவசியமான தயார்ப்படுத்தல்களைச் செய்யாமலிருக்கும் அரசாங்கத்தையே அவர்கள் பதவி விலகுமாறு வலியுறுத்துகின்றார்கள்.

அடுத்ததாக வெளிநாட்டவர் ஒருவரைத் திருமணம் செய்வதாயின் அதற்கு பாதுகாப்பு அமைச்சில் அனுமதி பெறவேண்டும் என்ற பதிவாளர் நாயகத்தினால் வலியுறுத்தப்பட்டுள்ளது. திருமணம் செய்துகொள்வதென்பது ஒவ்வொரு பிரஜையினதும் அடிப்படை உரிமையாகும். அதற்கு இனம், மதம், மொழி, நாடு உள்ளிட்ட ஒருவரின் தனிப்பட்ட அடையாளங்கள் ஓர் இடையூறாக அமையமுடியாது. 

அவ்வாறிருக்கையில் வெளிநாட்டவரொருவரைத் திருமணம் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறவேண்டும் என்ற மட்டுப்பாட்டை விதிப்பதன் ஊடாக பிரஜைகளின் அடிப்படை உரிமையில் அரசாங்கம் தலையீடு செய்கின்றது. 

அதுமாத்திரமன்றி இத்தகைய மட்டுப்பாட்டை விதிப்பதற்கான காரணங்களாகக் கூறப்பட்டிருக்கும் விடயங்கள் மிகவும் நகைப்பிற்குரியவையாகவே இருக்கின்றன. நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து, அரசாங்கம் இவ்வாறான அநாவசியமான விடயங்களில் அவதானம் செலுத்திக்கொண்டிருக்கின்றது. 

அரசியலமைப்பின் பிரகாரம் அரசாங்கத்தின் பதவிக்காலம் இன்னமும் முடிவடையவில்லை என்றாலும்கூட, கடந்த சிலமாதங்களாகவே மக்கள் அரசாங்கத்தையும் அதன் செயற்பாடுகளையும் முழுமையாகப் புறக்கணிக்க ஆரம்பித்திருக்கின்றார்கள். 

ஆகவே எதிர்வரும் 2022 ஆம் ஆண்டில் தற்போதைய அரசாங்கத்தைப் பதவியிலிருந்து கவிழ்க்கின்ற வருடமாக மாற்றிக்கொள்வதற்கு அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்புவிடுக்கின்றோம். மேலும் எதிர்வரும் மார்ச் மாதத்துடன் உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் முடிவிற்குவருவதுடன் மாகாணசபைகளின் பதவிக்காலம் ஏற்கனவே முடிவுற்றிருக்கின்றது. அவற்றுக்கான தேர்தல்களைத் தாமதமின்றி நடாத்தவேண்டும் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

கேள்வி ; எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 6 பேர் வேட்பாளர்களாகக் களமிறங்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து உங்களது நிலைப்பாடு என்ன?

பதில் ; எத்தகைய செய்திகள் வெளியானாலும், யார் எத்தகைய ஆசைகளைக் கொண்டிருந்தாலும் அடுத்த ஜனாதிபதித்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ மாத்திரமேயாவார். ஏனெனில் எதிர்வரும் தேர்தலில் கட்சியின் தலைவரையே நாட்டின் ஜனாதிபதியாக்குவதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம். 

2015 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தவறான தீர்மானத்தின் விளைவாக ஐக்கிய தேசியக்கட்சிக்கும் நாட்டிற்கும் நேர்ந்த கதியைப் பார்த்தோம். ஆகவே மீண்டும் அத்தகைய தவறானதொரு தீர்மானத்தை மேற்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாரில்லை என்று குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22