பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி மஸ்கெலிய நகரத்தில் இன்று நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தினால் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தாம் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தடையின் பின்னணியில் அரசியல் கட்சி உள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படுமானால் பொதுமக்களுக்கு பாரிய இடையூறு மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

இதற்கு அமைவாக நீதிமன்றத்தினால் தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக மஸ்கெலிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்ததாக கூறப்படும் வெள்ளையன் தினேஷ், அம்மாசி ரவிச்சந்திரன் ஆகியோருக்கு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஹட்டன் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.இராஜேந்திரன் இந்தத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மலையத்தில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.