பிட்ச் நிறுவனத்தின் இலங்கை குறித்த குறிகாட்டி கூறுவது என்ன?  

26 Dec, 2021 | 06:42 AM
image

ரொபட் அன்டனி  

நீங்கள் வங்கி ஒன்றுக்கு கடன் பெற செல்லும்போது உங்களுடைய வருமானம், செலவு, சொத்து உள்ளிட்ட விபரங்கள் வங்கி கோரும்.  அதனை அடிப்படையாக வைத்தே உங்களுக்கு கடன் கொடுப்பதா இல்லையா என்பதனை வங்கி தீர்மானிக்கும். அவ்வாறுதான் ஒரு நாட்டின் நிதி நிலை குறித்து கடன் தரப்படுத்தல் நிறுவனங்களான பிட்ச் மற்றும் மூடி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள்  வழங்குகின்ற குறிகாட்டிகளைக்கொண்டே குறிப்பிட்ட நாடுகளுக்கு கடன் வழங்க முடியுமா  இல்லையா?  என்பதனை சர்வதேச நிதி நிறுவனங்கள் தீர்மானிக்கும்

இலங்கையானது தற்போதைய இந்த டொலர் நெருக்கடி மற்றும் கடன் நெருக்கடியில் திண்டாடிக் கொண்டிருக்கின்ற சூழலில் தொடர்ச்சியாக பல்வேறு சவால்கள் பொருளாதாரத்தை பாரியளவில் தாக்கிக் கொண்டிருக்கின்றன.  முக்கியமாக தற்போது இந்த டொலர் நெருக்கடி காரணமாக பாரியதொரு பொருளாதார நெருக்கடியில் இலங்கை காணப்படுகின்றது.   இறக்குமதி பொருட்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான நிலைமைகூட நேர்ந்திருக்கின்றது. அதுமட்டுமன்றி டொலர் நெருக்கடி காரணமாக இறக்குமதிகள் வரையறை செய்யப்பட்டுள்ளதால் இறக்குமதி பொருட்களின் விலைகள் அதிகரித்துச் செல்வதும் தவிர்க்க முடியாததாக இருக்கின்றது.  இதுவும்  பொருளாதார ரீதியாக ஒரு பாதகமான நிலைமையை எடுத்துக் காட்டுகின்றது.

அதுமட்டுமன்றி வெளிநாட்டு கடன்களை டொலர்களில்  செலுத்த வேண்டிய தேவை காணப்படுகின்ற நிலையில் அதற்கும் தற்போது நாட்டில் டொலர்  இல்லாத நிலைமை இருக்கின்றது.  முக்கியமாக 2026 ஆம் ஆண்டுவரை வருடம் ஒன்றுக்கு 4.4 பில்லியன் டொலர்களை ஒவ்வொரு வருடமும் கடன் மற்றும் வட்டி பணமாக செலுத்த வேண்டியிருக்கிறது. இதில் பிணைமுறி கொடுப்பனவுகளும் காணப்படுகின்றன.  எனினும் தற்போதைய சூழலில் வெளிநாட்டு கையிருப்பு ( டொலர் கையிருப்பு)   மிகவும் குறைவானதாகவே காணப்படுகிறது.  சுமார் 6 தொடக்கம் 8 பில்லியன் டொலர்கள் வரை இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு காணப்பட வேண்டும்.  ஆனால் தற்போதைய சூழலில் இரண்டு பில்லியன் டொலர்கள் அளவுக்கு குறைவானதாகவே வெளிநாட்டு கையிருப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.   

இந்த சூழலில் வெளிநாட்டு கடன்களை செலுத்துவதில் இலங்கை ஒரு சவாலை எதிர்கொண்டு இருக்கின்றது.  இதில் இலங்கைக்கு சில தெரிவுகள் காணப்படுகின்றன.  முக்கியமாக கடன்களை மீள் நிதியிடுதல்,  கடன்களின்  காலப்பகுதியை மீள்கட்டமைத்தல், சர்வதேச நாணய நிதியத்தை நாடுதல் போன்ற தெரிவுகள் காணப்படுகின்றன. இந்த பின்னணியில்  சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனங்கள்  இலங்கை தொடர்பாக விடுக்கின்ற அறிக்கைகள் மிகவும் பாதகமானதாக காணப்படுகின்றன.  அவை இலங்கையின் புதிய கடன்களை பெறுவதற்கான ஆற்றலை வெகுவாகப் பாதித்துள்ளன. அதுமட்டுமன்றி புதிய கடன்களை பெறும் பட்சத்தில் இலங்கை அந்த கடன்களை மீள் செலுத்துவதில் நெருக்கடியை எதிர்நோக்கும் என்று கடன்தரப்படுத்தல் நிறுவனங்கள்  குறிப்பிட்டுள்ளன. 

பிட்ச் ரேட்டிங்கின் அறிவிப்பு 

அந்தவகையில் மிக அண்மையில் பிட்ச் ரேட்டிங் என்ற சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனம் இலங்கையை கடன்பெறும் ஆற்றலை சி.சி.சி. என்ற தரத்தில் இருந்து சி.சி. என்ற தரத்திற்கு தரமிறக்கியுள்ளது.   அதாவது புதிய வெளிநாட்டு  கடன்களை பெற்றுகொள்வதில் சிக்கலை எதிர்கொள்ளும்வகையில்  இந்த தரப்படுத்தல் காணப்படுகிறது.   2022 ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் கடன்கள் மற்றும் கடனுக்கான வட்டியென வெளிநாட்டு மொத்த  கடனாக 26 பில்லியன் டொலர்களை இலங்கை  செலுத்த வேண்டும் என்று சர்வதேச கடன் தர மதிப்பீட்டு நிறுவனமான  'ப்ட்ச் ரேட்டிங்' (Fitch Ratings) நிறுவனம் அறிவித்துள்ளது. 

மேலும் இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 ஆகஸ்ட் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களினால் குறைவடைந்துள்ளதுடன்,  நவம்பர் மாதத்தின் இறுதியில் இது 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளது. இது ஒரு மாதத்திற்கும் குறைவான தற்போதைய வெளிப்புறக் கொடுப்பனவுகளுக்கு  சமமானதாக காணப்படுகின்றது எனவும், ஒப்பீட்டளவில் இது  2020 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களினால்  அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சியைக் வெளிப்படுத்தியுள்ளது என்பதையும் 'பிட்ச் ரேட்டிங்'  நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்திய நிவாரணப்பொதி, கட்டார் மத்திய வங்கியுடனான பரஸ்பர பரிமாற்றல் வசதி அடிப்படையிலான கடன், பிராந்திய ஒத்துழைப்புகள் மூலமாக நாணய பரிமாற்றல், சீன வங்கியின் கடன் வசதிகளை இலங்கை பெற்றுக்கொண்டாலும் கூட 2022 ஆம் ஆண்டில் முழுமையான கடன்களை அடைக்க போதுமான வேலைத்திட்டம் இல்லாதமை அரசாங்கத்திற்கு சவாலாக இருக்கும் என தாம் கருதுவதாகவும் பிட்ச் ரேட்டிங் அறிவித்துள்ளது.   அத்துடன் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 500 மில்லியன் டொலரையும், 2022ஆம் ஆண்டு ஜுலை மாதம் 1 பில்லியன் டொலரையும் மீள செலுத்த வேண்டியுள்ள காரணத்தினால் இலங்கைக்கு இது பாரிய சவாலை ஏற்படுத்தும் என்றும் பிட்ச் ரேட்டிங்'  நிறுவனம்  குறிப்பிட்டுள்ளது. 

சர்வதேச கடன் தரப்படுத்தல் என்றால்? 

ஒரு நாட்டின் வெளிநாட்டு வர்த்தக த்துறையின்   ஆரோக்கியத்தை அளந்துகூறுகின்ற சர்வதேச தர நிர்ணயங்களை வெளிக்கொண்டுவருகின்ற நிறுவனங்‍களே கடன் தரப்படுத்தல் நிறுவனங்கள்  எனப்படுகின்றன. உலகில் அவ்வாறு பிரபலமான மூடி மற்றும் பிட்ச் உள்ளிட்ட சில நிறுவனங்கள்  உள்ளன. இந்த நிறுவனங்கள்  ஒருநாடு கடன் பெற்றால் அதனை எவ்வாறு மீள் செலுத்தும் என்பது தொடர்பான குறிகாட்டிகளை வெளியிடும்,.  இந்த நிறுவனங்கள் உலகளாவிய ரீதியில் நாடுகள் கடன்பெற முடியுமா  அவற்றை மீள் செலுத்தும் ஆற்றல்கள் உள்ளனவா எனபது குறித்த குறிகாட்டிகளை வெளியிடுகின்றன. குறித்த நாட்டின் நிறுவனங்கள் ‍வெளியிடுகின்ற புள்ளிவிபரங்களைக்கொண்டே இந்த குறிகாட்டிகள் வெளியாகும்.   இவ்வாறு பிட்ச் மற்றும் மூடி போன்ற நிறுவனங்கள் வெளியிடுகின்ற  நாடுகள் குறித்த குறிகாட்டிகளைக்கொண்டே சர்வதேச நிதி நிறுவனங்கள் நாடுகளுக்கு கடன் வழங்குவது குறித்த தீர்மானத்தை எடுக்கும். உதாரணமாக நீங்கள் வங்கி ஒன்றுக்கு கடன் பெற செல்லும்போது உங்களுடைய வருமானம், செலவு, சொத்து உள்ளிட்ட விபரங்கள் வங்கி கோரும்.  அதனை அடிப்படையாக வைத்தே உங்களுக்கு கடன் கொடுப்பதா இல்லையா என்பதனை வங்கி தீர்மானிக்கும். அவ்வாறுதான் ஒரு நாட்டின் நிதி நிலை குறித்து கடன் தரப்படுத்தல் நிறுவனங்களான பிட்ச் மற்றும் மூடி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள்  வழங்குகின்ற குறிகாட்டிகளைக்கொண்டே குறிப்பிட்ட நாடுகளுக்கு கடன் வழங்க முடியுமா  இல்லையா?  என்பதனை சர்வதேச நிதி நிறுவனங்கள் தீர்மானிக்கும். 

தற்போது இலங்கை டொலர் நெருக்கடியில் இருக்கின்றது. இலங்கையின் டொலர் உள்வரும் மூலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே இலங்கை வெளிநாட்டு கடன்களை  செலுத்துவதற்கான ஆற்றலை கொண்டு இருக்கிறதா இல்லையா? புதிய கடன்களை பெற்றால் அவற்றை இலங்கையினால் செலுத்த முடியுமா ?  என்ற அடிப்படையில் இந்த மூடி மற்றும் பிட்ச் ஆகிய நிறுவனங்கள் குறிகாட்டிகளை அடிக்கடி வெளியிட்டுவருகின்றன.    அதன்படிப்படையிலேயே     பிட்ச் நிறுவனம் இலங்கையினுடைய பொருளாதாரத்தை ஆய்வுசெய்து இலங்கையின் கடன் தர குறிகாட்டியை  ஒருபடி கீழே நகர்த்தியுள்ளது.   இது இலங்கையானது வெளிநாட்டு கடன்களை  பெறுவது குறித்த ஆற்றலையும் குறைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மத்திய வங்கியின் காரசார பதில் 

இதேவேளை சர்வதேச கடன்  தரப்படுத்தல் நிறுவனமான பிட்ச்  ரேட்டிங் நிறுவனத்தின் இந்த புதிய குறிகாட்டியை  இலங்கை மத்திய வங்கி கடுமையாக விமர்சித்திருக்கின்றது. அதாவது கடன் மீளச்செலுத்துகை ஆற்றலை அடிப்படையாகக்கொண்டு பிட்ச் ரேட்டிங் கடன் தரப்படுத்தல் நிறுவனத்தினால் இலங்கை 'சிசி' நிலைக்குத் தரமிறக்கம் செய்யப்பட்டிருப்பதானது, கொவிட் - 19 வைரஸ் பரவல் காரணமாக ஒட்டுமொத்த உலகமும் மிகமோசமான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்ற சூழ்நிலையில் நாட்டில் இடம்பெற்றுவரும் நேர்மறையான முன்னேற்றங்களை அங்கீகரிப்பதற்கு அந்நிறுவனம் தவறியிருப்பதை  காண்பிக்கின்றது என்று  இலங்கை மத்திய வங்கி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றது. 

மேலும் இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடனான உயர்மட்டக் கலந்துரையாடல்களின் பின்னர் அந்நாடுகளிடமிருந்தும் ஏனைய பிராந்திய நாடுகளிடமிருந்தும் கடன்கள் மற்றும் ஏனைய வடிவிலான உதவிகள் கிடைக்கப்பெறும் சாத்தியங்கள் காணப்பட்ட நிலையில், பிட்ச் ரேட்டிங் நிறுவனத்தின் அறிவிப்பினால் மேற்படி நாடுகள் அவற்றின் தீர்மானத்தை மாற்றிக்கொள்ளக்கூடும் என்றும் மத்திய வங்கி கவலை வெளியிட்டிருக்கின்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இருவருடகாலமாக நாடு மிகமோசமான நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்ற போதிலும், இதுவரையில் கடன்களை மீளச்செலுத்துவதில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை என்பதை  கவனத்திற்கொள்ளவேண்டியது அவசியமாகும். ஆகவே பிட்ச் ரேட்டிங் நிறுவனத்தின் இந்தத் 'திருப்தியளிக்காத' தரப்படுத்ததைக் கருத்திற்கொள்ளவேண்டாம் என்றும் தொடர்ந்தும் இலங்கையுடன் ஒன்றிணைந்து செயலாற்ற முன்வருமாறும் சர்வதேச முதலீட்டாளர்கள் உள்ளடங்கலாக பொருளாதாரத்தின் அனைத்துப் பங்காளிகளிடமும் கேட்டுக்கொள்கின்றோம் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அடுத்தது என்ன? 

இந்நிலையில் அரசாங்கம் அடுத்து எவ்வாறான நடவடிக்கைகளை இந்த விடயத்தில் எடுக்கப்போகின்றது என்பதிலேயே  அனைத்து விடயங்களும் தங்கியிருக்கின்றன.  குறிப்பாக கடன் தரப்படுத்தல் நிறுவனங்கள் பாதகமான குறிகாட்டிகளை வெளியிட்டிருக்கின்றன.  இந்நிலையில் இலங்கைக்கு வெளிநாட்டு கடன் நெருக்கடியும் காணப்படுகின்றது.  இந்த சூழலில் நிதியமைச்சர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று டொலர் கடன்களை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றார்.  அதுமட்டுமன்றி சீனா, ஜப்பான், ரஷ்யா போன்ற   நாடுகளிடமும் கடன்களைபெற நிதியமைச்சர்  நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. முக்கியமாக நாணய மாற்று திட்டங்களுக்கும் இலங்கை செல்ல முயற்சிப்பதாக தெரிகின்றது.  இந்தநிலையில்  நிதி அமைச்சு விரைவாக இந்த டொலர் நெருக்கடியை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.  

அதேபோன்று கடன் நெருக்கடியை சமாளிப்பதற்கு தேவையான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கவேண்டியிருக்கின்றது.  இலங்கை தற்போது சர்வதேச நாணய நிதியத்தை நாடினாலும் கூட இலங்கையினால் உடனடியாக மீளெழுந்து வருவது மிக கடினமாக இருக்கும் என்று எதிர்க்கட்சியின் பொருளாதார நிபுணர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா  தெரிவித்து வருகின்றார்.  இந்த சூழலில் அரசாங்கம் விரைவாக இது தொடர்பாக பொருளாத நிபுணர்களுடன் கலந்துரையாடி சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி  ஒரு தீர்வை காண்பதற்கு முன்வர வேண்டும்.  எவ்வாறு இந்த பிரச்சினையை தீர்க்கலாம் என்பது தொடர்பாக ஆராய்ந்து அடுத்துவரும் மாதங்களில் மக்களுக்கும் நாட்டுக்கும் நெருக்கடி ஏற்படாத வகையிலும்  வெளிநாட்டு வர்த்தகத் துறை பாதிக்கப்படாத ரீதியிலும் டொலர் உள்வருகையை அதிகரிக்கும் ரீதியிலும் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.    அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது என்பதே இங்கு முக்கியமனாதாக இருக்கின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04