போரில் ஈடுபடும் இராணுவத்தினரால் விவசாயத்துறை நெருக்கடியை எவ்வாறு சீர்செய்யமுடியும்? - ஐக்கிய மக்கள் சக்தி

Published By: Digital Desk 3

22 Dec, 2021 | 09:02 AM
image

(நா.தனுஜா)

விவசாயத்துறையைக் கையாளும் பொறுப்பு அண்மையில் இராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவராக இராணுவ அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அரசியல் தொடர்பில் போதிய தெளிவற்ற கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை ஆள்வதற்குப் பொருத்தமானவர் அல்ல. அவரால் நியமிக்கப்படக்கூடிய இராணுவ அதிகாரிகளுக்கு சிவில் நிர்வாகம் பற்றிய போதிய தெளிவில்லை. இவர்களால் எவ்வாறு நாட்டை நிர்வகிக்கமுடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஓரங்கமான ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் ஏற்பாட்டாளர் ஹேமகுமார நாணயக்கார கேள்வியெழுப்பியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் நேற்று செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

இரசாயன உர இறக்குமதிக்குத் தடைவிதிக்கப்பட்டபோதே நாட்டின் விவசாயத்துறை முழுமையாக அழிந்துவிடும் என்று நாங்கள் கூறினோம். தற்போது பல்வேறு விவசாயப்பயிர்களினதும் விளைச்சலில் பாரிய வீழ்ச்சியேற்பட்டிருக்கின்றது. 

குறிப்பாக சோளச்செய்கை முழுமையாக அழிவடைந்துள்ளது. தற்போதைய ஜனாதிபதியை ஆட்சிபீடத்தில் அமர்த்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட பிரபல சிங்களப்பத்திரிகை சோளப்பற்றாக்குறை தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது. சோளப்பயிர் விளைச்சல் வீழ்ச்சியின் காரணமாக திரிபோஷா உற்பத்தி குறைவடையும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. 

குறிப்பாக 570 மெட்ரிக் தொன் சோளத்தை மாத்திரமே விநியோகிக்கமுடியும் என்று அம்பாறை, மொனராகலை, அம்பாந்தோட்டை மாவட்ட அரசாங்க அதிபர்கள் கூறுகின்றனர்.

நாட்டிலுள்ள வறிய, ஆதரவற்ற குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதிசெய்வதற்காகவே கடந்த காலங்களிலிருந்து அரசாங்கங்களினால் இலவசமாக திரிபோஷா வழங்கப்பட்டுவருகின்றது. அதனை இல்லாமல் செய்வதற்குத் தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கக்கூடாது. அதேபோன்று இயற்கை முறையில் வலுவான மரபணுவைக்கொண்ட விதைகள் உருவாக்கப்படவேண்டும்.

'நாங்கள்தான் சிறப்பாக செயற்பட்டோம்' என்று கூறிய ஜனாதிபதி இப்போது மிகப்பெரிய கோமாளியாக மாறியிருக்கின்றார். அவரது அமைச்சரவையின் முட்டாள்தனமான தீர்மானங்களினால் விவசாயத்துறை முழுமையாகப் பாதிப்படைந்திருக்கும் நிலையில், இன்னும் சில காலங்களில் விவசாயிகள் அவர்களது காணிகளைக் கைவிட்டுவிடுவார்கள். அவ்வாறு கைவிடப்பட்ட தரிசு நிலங்கள் காணிகள் சட்டத்தின்கீழ் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டு, பெருந்தோட்டக்கம்பனிகளுக்கும் பல்தேசிய நிறுவனங்களுக்கும் வழங்கப்படும். 

இவ்வாறு உள்நாட்டு விவசாயிகளின் காணிகளை முதலீடு என்ற பெயரில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கி, இங்குள்ள விவசாயிகளை அவர்களின் கூலியாட்களாக மாற்றுவதற்கு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவும் அரசாங்கத்தில் மேலும் சில பிரதிநிதிகளும் முயற்சிக்கின்றனர். 

தற்போது நாட்டின் அனைத்துத்துறைகளும் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், எமது நாடு கிரீஸை விடவும் மிகமோசமான வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்படக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

விவசாயத்துறையைக் கையாளும் பொறுப்பு அண்மையில் இராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவராக இராணுவ அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். போரை முடிவிற்குக்கொண்டுவருவதில் இராணுவத்தினர் வழங்கிய பங்களிப்பை நாம் பெரிதும் மதிக்கின்றோம். 

ஆனால் ஒருவர் அவருக்குத் தெரியாத வேலையைச் செய்வதற்குப் பொறுப்பாக நியமிக்கப்படும்போது என்ன நேரும்? உண்மையைக் கூறுவதானால் அரசியல் தொடர்பில் போதிய தெளிவற்ற கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை ஆள்வதற்குப் பொருத்தமானவர் அல்ல. 

அவரால் நியமிக்கப்படக்கூடிய இராணுவ அதிகாரிகளுக்கு சிவில் நிர்வாகம் பற்றிய போதிய தெளிவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் மக்களின் வளங்களைச் சூறையாடிவரும் தற்போதைய அரசாங்கம் பதவியிழக்கும் காலம் நெருங்கியுள்ளது என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32