டொலர் நெருக்கடி தீவிரம் எங்கே தவறிழைக்கப்பட்டது?

21 Dec, 2021 | 01:50 PM
image

நேர்கண்டவர் -  ரொபட் அன்டனி 

நாட்டில் தற்போது பாரியதொரு டொலர் நெருக்கடி நிலைமை காணப்படுகின்றது.  வெளிநாட்டு கையிருப்பு குறைவடைந்திருக்கின்றது. ஏற்றுமதி இறக்குமதிக்கு இடையிலான இடைவெளி அதிகரித்து செல்கின்றது. சுற்றுலாத்துறை ஊடாக வருகின்ற டொலர்  வருமானம் ஸ்தம்பிதமடைந்திருக்கின்றது. 

வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்கள் அனுப்புகின்ற நிதியும் குறைவடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டு வருகின்றது.  அதேபோன்று வெளிநாட்டு நேரடி முதலீடுகளும் ஸ்தம்பிதமடைந்திருக்கின்றன. வெளிநாடுகளிலிருந்து புதிய கடன்களை பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது.  ஏற்கனவே பெற்றுக்கொண்ட  கடன்களை மீள்செலுத்துவதிலும்  டொலர் பற்றாக்குறை  காரணமாக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில்  டொலர் நெருக்கடியினால் இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமையின்   காரணமாக இறக்குமதி பொருட்களின் விலைகளும் அதிகரித்து செல்கின்றன.   எனவே இது தொடர்பான விடயங்கள் அதாவது டொலர்  நெருக்கடி எப்படி ஏற்படுகின்றது? அதனால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைதல், டொலர் உள்வரும் மூலங்கள், வெளிச்செல்லும் மூலங்கள், டொலர் உள்வருகையை எவ்வாறு அதிகரிக்கலாம்?   தற்போது ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி நிலையில் என்ன செய்யவேண்டும்?  சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது எந்தளவு தூரம் பாதுகாப்பானது? சர்வதேச நாணய நிதியம் எவ்வாறான நிபந்தனைகளை விதிக்கும் என்பன   தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தியுடன் நாம் உரையாடினோம்.   அவரிடம் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளும்  அளித்த பதில்களும் வருமாறு 

கேள்வி ; டொலர் நெருக்கடி என்றால் என்ன? டொலர் நெருக்கடி எவ்வாறு ஏற்படுகின்றது? 

பதில் ;  ஒரு நாடு வெளிநாடுகளுடன் தொடர்புகளைப் பேணும்போது, வர்த்தகம் செய்யும்போது,  ஒரு நாட்டில் இருக்கின்ற பிரஜை மற்றுமொரு நாட்டுக்கு சென்று தொழில் செய்து பணம் அனுப்புகின்றபோது,   வெளிநாடுகளில் இருந்து எமது நாட்டுக்கு முதலீடுகளை பெறுகின்றபோது,  வெளிநாடுகளிலிருந்து கடன்களை பெறுகின்றபோது   வெளிநாட்டு பணம் அதாவது அன்னிய செலாவணி நாட்டுக்குள்வரும்.  அது டொலராக இருக்கலாம். அல்லது வேறு சர்வதேச நாடுகளின் நாணயமாக இருக்கலாம்.  எனினும் டொலர் நாணயமே சர்வதேச நாடுகளில் பெரும்பாலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்ற ஒரு வெளிநாட்டு நாணயமாக இருக்கின்றது.  அதனால்தான் அதுபற்றி பேசப்படுகிறது.   

நாட்டின் டொலரின் அளவு ஏற்றுமதி மற்றும் ஏனைய டொலர் வரும் மூலங்கள் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.  அதேபோன்று இறக்குமதி செய்தல்,  பெற்ற கடன்களை மீள் செலுத்துதல், இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்தல் போன்ற பல்வேறு காரணங்களினால் டொலர்கள் எமது நாட்டில் இருந்து வெளியே செல்கின்றன.  உள்வரும் டொலர் அளவு கூடுதலாகவும் வெளிச்செல்லும் அளவு குறைவாகவும் இருந்தால் அது சாதக நிலையை   காட்டும்.  

மறுபுறம் டொலர் உள்வருகை குறைவாகவும் வெளியே செல்வது கூடுதலாகவும் இருக்கும்போது அங்கே ஒரு பற்றாக்குறை ஏற்படுகின்றது. அந்த பற்றாக்குறை தொடர்ந்து நீடித்துக் கொண்டு செல்லுமாக இருந்தால் அந்த சந்தர்ப்பத்தை நாங்கள் நாட்டின் டொலர் நெருக்கடி என்று விபரிக்க முடியும்.  அதுதான் தற்போது எமது நாட்டில் நடக்கின்றது. அதாவது டொலர் உள்வருகை குறைந்துள்ளது. வெளிச்செல்தல் கூடியுள்ளது. 

எனவே டொலர் நெருக்கடி என்று கூறும்போது ஒரு நாட்டில் இருக்கக்கூடிய, ஒரு நாடு கையிருப்பில் வைத்திருக்கக்கூடிய டொலர்களின் அளவில் குறைவை காட்டுகிறது.   அதனடிப்படையிலேயே  தற்போது  டொலர்  நெருக்கடி நாட்டில் ஏற்பட்டுள்ளது.  

கேள்வி : அப்படியென்றால் டொலர்  பற்றாக்குறை ஏற்படும்போது அது ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைகிறது  என்று கூட பொருள் படுமா?

பதில் : அதனை அப்படியே கூற முடியாது. அரசாங்கத்தின் சில தீர்மானங்களும் ரூபாவின் பெறுமதியை தீர்மானிக்கின்றன. டொலர்  நெருக்கடி தற்காலிகமாக கூட ஏற்படலாம்.  ஒரு குறிப்பிட்ட காலத்தில் எதிர்பாராவிதமாக  டொலரின் கேள்வி  அதிகரிக்கலாம். அல்லது திடீரென்று வீழ்ச்சி ஏற்படலாம்.  ஆனால் நீண்ட காலத்திற்கு இவ்வாறு டொலர் குறைவடைந்து கொண்டு செல்லும் போதுதான் அது நெருக்கடியாக உருவாகின்றது.  அப்போது ரூபாவின் பெறுமதி நிச்சயமாக வீழ்ச்சியடையும். 

கேள்வி ; டொலர்   நெருக்கடி ஏற்படும்போது நாட்டுக்கு ஏற்படுகின்ற பொருளாதார பாதிப்புகளை விபரிக்க முடியுமா?

பதில் ; டொலர்   நெருக்கடி ஏற்படும்போது அந்த நாட்டின் வெளிநாட்டு வர்த்தக நம்பகத்தன்மை பாதிக்கப்படும்.  மருந்து எரிபொருள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய டொலர் தேவையாகும்.  நாட்டின் டொலர்   கையிருப்புக்களை கொண்டு எத்தனை மாதத்திற்கு தேவையான இறக்குமதிகளை செய்யமுடியும் என்பதை அடிப்படையாக வைத்தே அந்த நாடு சர்வதேச வர்த்தகத்தில் நல்ல நிலைமையில் இருக்கின்றதா என்பதை பார்க்கலாம்.  

குறைந்தபட்சம்  ஆறு மாதங்களுக்கு தேவையான இறக்குமதி செய்யக்கூடிய அளவுக்கு டொலர்   கையிருப்பு  நாட்டில் இருந்தால் அது நல்ல நிலைமையாகும்.   மாறாக இரண்டு மாதங்கள் அல்லது இரண்டு வாரங்களுக்கு தேவையான இறக்குமதி செய்யக்கூடிய அளவுக்குத்தான் டொலர்கள்  இருக்கின்றன என்றால் அது நெருக்கடியான நிலைமையை காட்டும்.  இதன்காரணமாக  பொருள் இறக்குமதி செய்வதற்கு டொலர்  இருக்காது.   

இறக்குமதி வரையறை செய்யப்படும்.  இறக்குமதி பொருட்களின் விலை அதிகரிக்கும்.  அதுமேலும் நெருக்கடியைத் தோற்றுவிக்கும். ஏற்றுமதி உற்பத்திசெலவு அதிகரிப்பதால் ஏற்றுமதி வருமானமும் பாதிக்கப்படும்.    நாட்டின் உள்நாட்டு உற்பத்தியும் பாதிக்கும்.  

அதேவேளை  ஏற்கனவே இலங்கைக்கு கடன் கொடுத்தவர்களும்  கடன் கொடுக்க இருப்பவர்களும் இதை மோசமான ஒரு நிலையாக பார்ப்பதுடன் ஏற்கனவே கடன் கொடுத்தவர்கள் விரைவாக தமது கடன்களை மீளப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பார்கள். புதிய கடன்களை கொடுக்க சர்வதேசம் தயங்கும்.  

மேலும் நாட்டுக்குள் இருக்கின்ற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உடனடியாக தமது முதலீடுகளை வெளிநாடுகளை   நோக்கி கொண்டுசெல்ல முயற்சிப்பார்கள்.  இது மிகப்பெரிய ஒரு பிரச்சினையை கொண்டுவரும்.  அதேபோன்று நாட்டுக்குள்ளே டொலர்களை கொண்டுவர விரும்புகின்றவர்கள்கூட அதனை செய்ய விரும்பமாட்டார்கள்.   சர்வதேச முதலீட்டாளர்களும் முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டுவர தயங்குவார்கள்.  

இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் இறக்குமதி உள்ளீடுகளில் தங்கியிருக்கின்ற ஏற்றுமதி  பாதிக்கப்படும்.  உதாரணத்திற்கு ஆடைத்துறையை குறிப்பிடலாம்.  அதற்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கின்றது.      இறக்குமதி உள்ளீடுகள் தங்கியிருக்கின்ற பல ஏற்றுமதிகள் காணப்படுகின்றன.    

உதாரணமாக எரிபொருள் இறக்குமதி செய்ய டொலர் அவசியமாகும். எனவே டொலர் நெருக்கடி ஏற்பட்டு எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்பட்டால் அது நாட்டில் எவ்வாறான பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது  அனைவருக்கும் தெரியும்.  அதாவது எரிபொருள் விலை அதிகரித்தாலே நாட்டின் போக்குவரத்து, உற்பத்தி  உள்ளிட்ட சகல துறைகளும் பாதிக்கப்படும்.  

இந்நிலையில் டொலர் நெருக்கடியினால்  எரிபொருள் இறக்குமதி செய்வது தடைப்பட்டால் என்ன நடக்கும்?  உதாரணமாக சில காலங்களுக்கு முன்னர் லிபியாவில் இதேபோன்று ஒரு நெருக்கடி ஏற்பட்டபோது வாகனங்கள் நூற்றுக்கணக்கில் எரிபொருள் நிலையங்களுக்கு முன்னால் நாட்கணக்கில் நிறுத்தி வைக்க்பபட்டிருந்தன. அந்நாட்டின் தொழில் துறைகளும் மோசமாக பாதிக்கப்பட்டன. 

கேள்வி ; வெளிநாட்டு கையிருப்பு என்பதை  விளக்க முடியுமா?

பதில் ; ஒரு அரசாங்கத்திடம் காணப்படுகின்ற வெளிநாட்டு நாணயம் உள்ளிட்ட வெளிநாட்டு சொத்துக்களின் இருப்பையே வெளிநாட்டு கையிருப்பு என்று கூறுகின்றோம்.  அதாவது அரசாங்கத்துக்கு சொந்தமான வெளிநாட்டு சொத்துக்கள்  வெளிநாட்டு உத்தியோகபூர்வ சொத்து ஒதுக்கு என்று  குறிப்பிடப்படும்.  அந்த உத்தியோகபூர்வ சொத்து ஒதுக்கலில் வெளிநாட்டு நாணயங்களும் இருக்கும். அதாவது  டொலரும் இருக்கும்.  

அதேபோன்று சர்வதேச நாணய நிதியத்தில் நாம் வைத்திருக்கின்ற வைப்புக்களும் அதில் உள்ளடக்கப்படும்.  அதேபோன்று சர்வதேச நாணய நிதியத்தில் காணப்படும் எமது நாட்டுக்கான கோட்டாவும் அதில் ஒரு மீதியாக இருக்கும்.  அத்துடன் இலங்கைக்குரிய தங்கமும் இந்த வெளிநாட்டு உத்தியோகபூர்வ சொத்து ஒதுக்கில் அடங்கும்.  இது தவிர வேறு சில சொத்துக்களும் காணப்படுகின்றன.   அந்தவகையில் இந்த வெளிநாட்டு உத்தியோகபூர்வ சொத்து ஒதுக்கில் ஐந்து பிரிவுகள் காணப்படுகின்றன.   

இந்த ஐந்து வகைகளில் மிகப் பிரதானமாக வெளிநாட்டு நாணய கையிருப்பை குறிப்பிடலாம்.  அதாவது  டொலர் கையிருப்பை குறிப்பிடலாம். இதனை  பொதுவாக வெளிநாட்டு சொத்து ஒதுக்கு என்று குறிப்பிடலாம்.  பொதுவாக எமது நாட்டில் இந்த வெளிநாட்டு கையிருப்பானது அல்லது  டொலர் கையிருப்பானது  8 டொலர் பில்லியன்களாக இருக்கவேண்டும்.  

எனினும் இது ஒக்டோபர் மாதத்தில் 2.3 பில்லியன் டொலர்களாக குறைவடைந்தது.   எதிர்கால இறக்குமதிகள் தீர்மானிக்கப்படுகின்றன. 

கேள்வி ; தனியார் நிறுவனங்கள் இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலர்களை மத்திய வங்கி வர்த்தக வங்கிகளுக்கு வழங்குமா?  அது எவ்வாறு நடைபெறுகிறது? 

பதில் ;   அதாவது  வெளிநாட்டு நாணய கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான பொறுப்பு  மத்திய வங்கியிடம்  காணப்படுகிறது.  அதற்கான சட்டபூர்வமான அதிகாரம் மத்திய   வங்கியிடமே  இருக்கின்றது.  தற்போது தனியார் இறக்குமதியாளர்கள்  பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டுமானால் வர்த்தக வங்கிகளில் கடன் கடிதத்தை பெற்று இலங்கை ரூபாவை கொடுத்து டொலர்கள் ஊடாக சர்வதேச கொடுப்பனவை செய்ய வேண்டும். 

வழமையாக இறக்குமதியாளர் வர்த்தக வங்கி ஒன்றை  அணுகி  இறக்குமதிககாக   கடன் கடிதங்களை  பெற்றுத்தருமாறு  கோருவர்.    மத்திய வங்கி அதில் பெரும்பாலும் தலையிடாது.  காரணம் பொதுவாக வணிக வங்கிகளுக்கு  டொலர்களை மத்திய வங்கி தாராளமாக விநியோகிக்கும். அதனால் வர்த்தக வங்கிகள் இறக்குமதியாளர்களுக்கான கடன் கடிதங்களை வழங்கும்.   ஆனால் தற்போது இந்த டொலர்  நெருக்கடி காரணமாக வங்கிகள் கடன் கடிதங்களை கவனமாக பரிசீலித்துத்தான் வழங்குகின்றன.    

தற்போது மத்திய வங்கியிடமும் டொலர்   கையிருப்பு குறைவாக இருப்பதால் வணிக வங்கிகளுக்கான டொலர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.   இதனால் இறக்குமதிக்கு தேவையான கடன் கடிதங்களை வழங்குவதில் வணிக வங்கிகள் சிக்கலை எதிர்கெள்கின்றன.  அதனால்தான் இறக்குமதியில் வரையறைகள் காணப்படுகின்றன. வாகன இறக்குமதி கட்டுப்பாடும் அதன் காரணமாகவே விதிக்கப்பட்டுள்ளது. 

கேள்வி ;  நாட்டுக்கு டொலர்கள் வருவதற்கான மூலங்கள் என்ன?

பதில் ; பல வழிகளில் எமது நாட்டுக்கு டொலர்கள் உள்வருகின்றன.  மிகப் பிரதானமானதும் முதலாவதுமாக  ஏற்றுமதி வருமானம் காணப்படுகின்றது.  ஏற்றுமதிகள் என்று சொல்லும்போது அதில் முதலாவதாக நாம் பொருள் ஏற்றுமதியை எடுக்கலாம்.  இதில் தேயிலை, ரப்பர்,ஆடை தயாரிப்புகள், இலத்திரனியல் உபகரணங்கள் போன்ற பல பொருட்களை நாம் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம்.  

இலங்கையில் இருந்து ஏற்றுமதி பொருட்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது எமக்கு டொலர் வருகிறது.    பொதுவாக வருடம் ஒன்றுக்கு எமக்கு 10 பில்லியன் டொலர்கள் ஏற்றுமதி வருமானமாக கிடைக்கின்றன. 

இரண்டாவது  சேவைகள் ஏற்றுமதி மூலமாகவும் எமக்கு டொலர்கள் வருகின்றன. அதற்கு பல உதாரணங்களை குறிப்பிடலாம்.   முக்கியமாக  வெளிநாட்டு விமானங்கள் எமது கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும்போது அதற்கு நாம் சேவைகளை வழங்குவதற்காக டொலர்களை  கட்டணமாக பெற்றுக்கொள்கிறோம். அது  சேவை ஏற்றுமதியாகிறது.   அத்துடன் இலங்கையில் இருக்கின்ற சில வங்கிகள் வெளிநாடுகளில் வங்கித்தொழில்களை மேற்கொள்கின்றன. அதிலிருந்து எமக்கு டொலர்கள் கிடைக்கின்றன.    

சில வங்கிகள் வெளிநாடுகளில் இருக்கின்ற நிறுவனங்களுக்கு தேவையான வேலைகளை இங்கிருந்து செய்து கொடுக்கின்றன.  கால் சென்டர்ஸ் என்று கூறப்படும் அழைப்பு நிலையங்களும் இதில் உள்ளடங்கும்.  இதுபோன்ற சேவைகள் ஏற்றுமதி ஊடாக எமக்கு டொலர்கள் வருகின்றன.   சுற்றுலாத்துறையும் இந்த சேவை ஏற்றுமதிக்குள்யே வருகின்றது. சுற்றுலாத்துறை  ஊடாக எமக்கு  டொலர்கள் வருகின்றன.   சுற்றுலாத்துறையில் நாம் வழங்கும் சேவைகள்  அனைத்துமே சேவை ஏற்றுமதியாகவே கருதப்படும். 

மூன்றாவதாக  இலங்கைக்கு சொந்தமான சில நிறுவனங்கள் வெளிநாடுகளில் தொழிலில் ஈடுபடுகின்றன. தளபாட, நிறப்பூச்சி  நிறுவனங்கள்   வெளிநாடுகளில் தமது தொழில் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.   இவை இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு முதலீடுகளாக  கருதப்படும்.   அந்தவகையில் குறித்த நிறுவனங்கள் வெளிநாடுகளில் உழைக்கின்ற லாபங்கள்  டொலர்களாக நாட்டுக்குள் வரும்.     

வெளிநாடுகளுக்கு சென்று சேவை வழங்குகின்ற இலங்கை பணியாளர்கள் மற்றும் தொழில் வல்லுனர்கள் இலங்கைக்கு அனுப்புகின்ற டொலர்களும் இலங்கைக்கு டொலர் வருகின்ற முக்கிய மூலமாக உள்ளது.   வெளிநாட்டு விமான சேவைகளில் பணியாற்றுகின்ற, கப்பல்களில் பணியாற்றுகின்ற இலங்கையர்கள்,    குறுகியகால மற்றும் நீண்டகால அடிப்படையில் வெளிநாடுகளில் பணியாற்றுகின்ற இலங்கையர்கள் அனுப்புகின்ற அந்நிய செலாவணி இலங்கைக்கு உள்வரும் டொலர் மூலமாக காணப்படுகிறது.  அத்துடன் இலங்கையில் இயங்குகின்ற வெளிநாட்டு தூதரகங்களின் செலவுக்காகவும் டொலர்கள் உள்வரும். 

மேலும் இலங்கை பெறுகின்ற கடன்கள், மானியங்கள் நன்கொடைகள் போன்றவை இலங்கைக்கு டொலர் உள்வரும் முக்கிய மூலமாகும்.  கடன்கள்,  மானிய உதவிகள் பல வகைகள் காணப்படுகின்றன. பிணைமுறி, வர்த்தக கடன்கள், நிபந்தனை கடன்கள், சலுகை கடன்கள் திறைசேரி உண்டியல்கள் என வகைகள்  இதில் காணப்படுகின்றன.   மேலும் மற்றுமொரு முக்கிய மூலமாக இலங்கைக்கு வருகின்ற  வெளிநாட்டு நேரடி முதலீடுகளும் இலங்கைக்குள் டொலர்களை உள்ளீர்க்கின்ற முக்கிய துறையாக காணப்படுகின்றது.     இவைதான் இலங்கைக்குள் வருகின்ற வழிமுறைகளாக காணப்படுகின்றன. 

கேள்வி ; டொலர்கள் வெளிச்செல்கின்ற மூலங்கள் என்ன? 

பதில் ; நாம் இறக்குமதி செய்கின்றபோது டொலர்கள் வெளியே செல்கின்றன.  பொதுவாக வருடம் ஒன்றுக்கு 20 பில்லியன் டொலர்களுக்கு நாம் இறக்குமதி செய்கிறோம்.  அதேபோன்று இலங்கை சேவை ஏற்றுமதி செய்வதைபோன்று சேவைகளை இறக்குமதி செய்யும் செயல்பாட்டினையும் மேற்கொள்கிறது.   உதாரணமாக   இலங்கைக்கு சொந்தமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்  விமானம் சர்வதேச நாடுகளுக்கு பறக்கும்போது அந்த விமான நிலையங்களில் அந்த விமானம் பெறுகின்ற சேவைகளுக்கு நாம் டொலர்களை கட்டணமாக செலுத்தவேண்டும்.  

இலங்கையிலிருந்து சுற்றுலா பயணிகள் வெளிநாடு செல்லும்போது டொலர்கள் வெளிச்செல்கின்றன.   இலங்கையர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும்போது அவற்றுக்கான கட்டணங்களை    டொலர்களில் செலுத்தவேண்டும்.   வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்கின்றபோது அந்த வெளிநாட்டு நிறுவனங்கள் உழைக்கின்ற லாபங்கள் டொலர்களாக வெளிச்செல்கின்றன.   

அதேபோன்று இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளில் தனது தூதரகங்களை நடத்துகின்றமைக்கு     இலங்கையிலிருந்து டொலர்களாக செலவுசெய்யப்படவேண்டும்.  மேலும் இலங்கை செலுத்தவேண்டிய கடன்கள்,  வட்டிகள் பிணைமுறி கொடுப்பனவுகள் போன்றவற்றினூடாக டொலர்கள் வெளிச்செல்கின்றன.    இலங்கையர்கள்  வெளிநாடுகளுக்கு சென்று முதலீடு செய்யும் போது இலங்கையிலிருந்து டொலர் வெளியே செல்லும்.     

(தொடரும்) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49