இலங்கையினுடைய உராய்வுநீக்கி எண்ணெய்த்துறையானது 2015 ஆம் ஆண்டில், 6.8 சதவீதத்தால் 23.4 பில்லியன் ரூபா அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அத்துடன் அவ்வாண்டில் ஓட்டோமேட்டிவ் உராய்வுநீக்கி எண்ணெய்த்துறை 10.1 சதவீத்த்தாலும் தொழிற்றுறை உராய்வுநீக்கி எண்ணெய்த்துறை 7.7 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளது. 

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் தொகுக்கப்பட்ட “உராய்வுநீக்கி எண்ணெய் சந்தை அறிக்கை - 2015” ஆனது இந்த தகவல்களை வெளியிட்டள்ளது.

எவ்வாறாயினும், கடல்சார் உராய்வுநீக்கி எண்ணெய்த்துறை ஆனது 2014 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2015ம் ஆண்டில் 37.7 சதவீத வீழ்ச்சி ஒன்றைக் காட்டுகின்றது. அதேவேளை கிறீஸ்களுக்கான சந்தையானது 4.7 சத வீத மித வளர்ச்சி ஒன்றைக் காண்பிக்கிறது.

ஓட்டோமேட்டிவ் உராய்வுநீக்கி எண்ணெய்த்துறைப் பிரிவினை எடுத்து நோக்கினால், ”ஃபோர் ஸ்ட்ரோக்” மோட்டார் சைக்கிள் எண்ணெயில் உயர்வான வளர்ச்சி காண்பிக்கப்படுகின்றது. இது 29 சதவீத வளர்ச்சி ஆகும். மேலும் பெற்றோல் வாகனங்களுக்கான உராய்வுநீக்கி எண்ணெய்த்துறைப் பிரிவு 14.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

”இது சந்தேகத்திற்கு இடமின்றி 2015 ஆம் ஆண்டில் பாரிய அளவில் இறக்குமதி செயப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் கஸொலின் கார்கள் ஆகியவற்றாலேயே நிகழ்ந்துள்ளது” என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

டீசல் வாகன உராய்வுநீக்கி எண்ணெய்த் துறையானது 2.3 சதவீத அதிகரிப்பைக் காட்டுகின்ற அதேவேளை, கியர் எண்ணெய் நுகர்வு 12.54 சதவீத்த்தால் அதிகரித்துள்ளது. ஓட்டோமேட்டிவ் ட்ரான்ஸ்மிஷன் திரவ நுகர்வானது வெறுமனே 2.8 சத வீத அளவிலேயே அதிகரிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இது, கஸலின் எஞ்சின் உராய்வுநீக்கி எண்ணெய்களுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது.

”பல் தர எண்ணெய்களின் கஸலின் எஞ்சின் எண்ணெயின் அனைத்து அதிகரிப்புகளும் உயர்வின் 90 சதவீத்த்தை எட்டியுள்ளன. ஆச்சரியப்படத்தக்க வகையில் டீசல் எஞ்சின் எண்ணெய்ப் பிரிவின் பல் தர எண்ணெய் நுகர்வு ஆனது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11 சதவீத சரிவொன்றை காண்பிக்கின்றது” என மேலும் ஆணைக்குழு குறிப்பிடுகின்றது.

இது டீசல் உராய்வுநீக்கி எண்ணெய் நுகர்வோர்கள் பல்தர வகையில் இருந்து ஒற்றைத்தர வகைக்கு மாறுகின்றார்கள் என்பதைக் காட்டுகின்றது. தற்போது, இலங்கையின் உராய்வுநீக்கி எண்ணெய்ச் சந்தையை 12 செயற்பாட்டாளர்கள் பங்கிட்டுக்கொண்டு உள்ளனர். அவர்களே உராய்வுநீக்கி எண்ணெய்களை இறக்குமதி, ஏற்றுமதி, விற்பனை, விநியோகம்  ஆகியவற்றைச் செய்வதற்கு அதிகாரமளிக்கப்பட்டவர்கள் ஆவர். 

அதேவேளை அவர்களில் மூன்று செயற்பாட்டாளர்களே உராய்வுநீக்கிகளை கலப்பதற்கு அதிகாரம் பெற்றவர்களாக உள்ளனர்.  2015 ஆம் ஆண்டில் செவ்ரோன் சிலோன் உராய்வுநீக்கி எண்ணெய்ச் சந்தைப் பங்கு 47.58 சதவீதம் எனக் குறுகியது. (அது 2014 ஆம் ஆண்டில் 49.3 வீதமாக இருந்தது) அண்மைய போட்டியாளரான இந்தியன் ஒயில் கோப்பரேஷன் லிமிட்டட் ஆனது அதே ஆண்டு சந்தைப்பங்கின் 14.86 சதவீதத்தினைக் கைப்பற்றியது.  இது 2014 ஆம் ஆண்டில் 12.59 சதவீதம் ஆக இருந்தது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப் பங்கு ஆனது 2014 ஆம் ஆண்டில் 10.54 ஆக இருந்தது. அது 2015 ஆம் ஆண்டில்இ 9.19 சத வீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 2015 ஆம் ஆண்டின் போது, 3,167 கிலோ லீற்றர்கள் உராய்வுநீக்கி எண்ணெய் ஆனது பிராந்தியச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இது 2014 ஆம் ஆண்டின் செயற்பாட்டுடன் ஒப்பிடுகையில் 8 சத வீத வளர்ச்சி ஆகும்.

2015 ஆம் ஆண்டு 37,797 கிலோ லீற்றர்கள் உராய்வுநீக்கி எண்ணெய் ஆனது உள் நாட்டில் (கலவையாக) உற்பத்தி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஏறத்தாழ 75 சதவீத கலவைச் செயற்பாடானது செவ்ரோன் நிறுவனத்தின் உராய்வுநீக்கி எண்ணெய் கலக்கும் நிலையத்திலும் 20 சதவீத கலவைச் செயற்பாடானது இந்தியன் ஒயில் கோப்பரேஷன் நிறுவனத்திற்குச் சொந்தமான உராய்வுநீக்கி எண்ணெய் கலக்கும் நிலையத்திலும் மிகுதி 5 சதவீதச் செயற்பாடானது லாஃப்ஸ் ஹோல்டிங் லிமிட்டட்டினாலும் செய்யப்பட்டன.

இலங்கை அரசாங்கமானது அதிகாரமளிக்கப்பட்ட தரப்பினர்களிடமிருந்து, நியமிக்கப்பட்ட வகையில் ஆண்டுக்கு இரு தடவை என்னும் வழியிலும், சில வேளைகளில் பல்வகைப்பட்ட பதிவுக் கட்டணங்கள் மூலமும் வருமானத்தை பெறுகின்றது. இவை ஒரு மில்லியன் ரூபாவுக்கு சமமாகவும் அல்லது குறித்த காலப்பகுதிக்கான பதியப்பட்ட விற்பனைகளின் 0.5 சத வீதம் ஆகவும் இருக்கும். 

இவற்றில் எது உயர்வோ அதுவே ஏற்கப்படும். இதன் அதிகபட்ச அளவு ஐந்து மில்லியன் ரூபாய்கள் ஆகும். 2015ம் ஆண்டின்போது, அரசாங்கத்திற்கான மொத்த அங்கீகரிக்கப்பட்ட பதிவுக்கட்டணம் ஆனது 74 மில்லியன் ரூபாவாக இருந்தது. இது அதற்கு முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7 சத வீத உயர்வு உடையதாகும் என அறிக்கை குறிப்பிடுகின்றது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது தற்போது உராய்வுநீக்கி எண்ணெய் தொழிற்றுறையின் மறைமுக ஒழுங்குறுத்துநராக செயற்படுகின்றது. கடந்த ஆண்டு அரசாங்கம் அறிவித்தபடி இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இலங்கையின் பெற்றோலியத்துறை ஒழுங்குறுத்துநர் அந்தஸ்து கிடைக்கவுள்ளது. 

இது ஆணைக்குழுவிற்கு சட்ட ரீதியான வலிமை அளிப்பதோடு அதன் செயற்படு பரப்பை விரிவாக்கவும் செய்கின்றது. இதன் மூலம் செலவைப் பிரதிபலிக்கும் ஒரு வெளிப்படையான விலையிடற் பொறிமுறையைச் செயற்படுத்துவதற்கு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இயலும்.

2016 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும் பாதீட்டு முன்மொழிவினூடாக நோக்கும் போது, நிதியமைச்சரான  ரவி கருணாநாயக்கவினால் உராய்வுநீக்கி எண்ணெய்த் தொழிற்றுறையின் போட்டித்தன்மைக்கு உதவுவதர்காக இத்துறையின் ஒழுங்குறுத்துநராக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அதிகாரமளிப்பதற்காகச் செய்யப்பட்ட முன்மொழிவு ஆனது அமைச்சரவையின் அனுமதியை, 23 ஆகஸ்ட்  மாதம் 2016 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பெற்றுக்கொண்டது.