2015 - 2019 இல் பெறப்பட்ட கடன்களில் 89.9 சதவீதமானவை 2014 இற்கு முன்னர் பெறப்பட்ட கடன்களுக்கான வட்டியைச் செலுத்துவதற்கே பயன்படுத்தப்பட்டன - எரான் விக்ரமரத்ன

Published By: Digital Desk 3

17 Dec, 2021 | 10:26 AM
image

(நா.தனுஜா)

எமது அரசாங்கத்தினால் அதிகளவான கடன்கள் பெறப்பட்டமையே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குப் பிரதான காரணம் என்று அரசாங்கம் கூறுகின்றது. 2014 - 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பெறப்பட்ட கடன்களின் மொத்தப் பெறுமதி 9.9 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாகும். 2015 - 2019 வரையான காலப்பகுதியில் கடன்தொகையில் ஏற்பட்டிருக்கக்கூடிய அதிகரிப்பு 4.25 ட்ரில்லியன் ரூபாவாகும். அதில் 89.9 சதவீதமான கடன் 2014 ஆம் ஆண்டிற்கு முன்னரான காலப்பகுதியில் பெறப்பட்ட கடன்களுக்கான வட்டியை செலுத்துவதற்காகப் பெறப்பட்டதாகும். 

அதுமாத்திரமன்றி 2017, 2018 ஆம் ஆண்டுகளில் வரவு, செலவுத்திட்ட மிகையைக் கொண்டிருந்த எமக்கு பெருமளவு கடன்களைப் பெறவேண்டிய தேவையிருந்திருக்காது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் அண்மையில் மரக்கறிகள் உட்பட அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் பெருமளவால் அதிகரித்திருக்கின்றன. இருப்பினும் சந்தையில் அவற்றின் விலைகளைக் கட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை.

எமது அரசாங்கத்தினால் அதிகளவான கடன்கள் பெறப்பட்டமையே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குப் பிரதான காரணம் என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் 'வெரிட்டே ரிசேர்ச்' அமைப்பின் மதிப்பீட்டு அறிக்கையின் பிரகாரம், 2014 - 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பெறப்பட்ட கடன்களின் மொத்தப் பெறுமதி 9.9 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இவற்றில் ரூபா வடிவில் பெற்ற கடன்களுக்கு சுமார் 10 சதவீத வட்டியையும் டொலர் வடிவில் பெற்ற கடன்களுக்கு சுமார் 3.9 சதவீத வட்டியையும் செலுத்தவேண்டியுள்ளது. அதன்படி இக்கடன்களுக்காக வட்டியாகச் செலுத்தவேண்டிய தொகையின் பெறுமதி சுமார் 3.8 ட்ரில்லியன் ரூபாவாகும். 

2015 - 2019 ஆம் ஆண்டில் பெருந்தொகையான கடன் பெறப்பட்டதாகத் அரசாங்கம் கூறுகின்றது. இருப்பினும் அக்காலப்பகுதியில் கடன்தொகையில் ஏற்பட்டிருக்கக்கூடிய அதிகரிப்பு 4.25 ட்ரில்லியன் ரூபாவாகும். அதில் 89.9 சதவீதமான கடன் 2014 ஆம் ஆண்டிற்கு முன்னரான காலப்பகுதியில் பெறப்பட்ட கடன்களுக்கான வட்டியை செலுத்துவதற்காகப் பெறப்பட்டதாகும். 

எனவே 2015 - 2019 வரையான காலப்பகுதியில் புதிதாகப் பெறப்பட்ட கடன்கள் வெறுமனே 10 சதவீதமானவை மாத்திரமேயாகும். நாட்டின் வரலாற்றில் நீண்டகாலத்திற்குப் பின்னர் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் மாத்திரமே வரவு, செலவுத்திட்ட மிகை காணப்பட்டது. அதாவது அவ்வாண்டுக்கான செலவினங்களை விடவும் வருமானங்கள் உயர்வாகக் காணப்பட்டது. 

அவ்வாறிருக்கையில் புதிதாகக் கடன்பெறவேண்டிய அவசியம் ஏற்படாது அல்லவா? ஆகவே 2015 - 2019 வரையான காலப்பகுதியில் பெறப்பட்ட கடன்கள்களே தற்போதைய நெருக்கடிகளுக்குக் காரணம் என்று கூறப்படும் கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை.

நாம் தற்போதைய அரசாங்கத்திடம் நாட்டைக் கையளித்தபோது காணப்பட்ட வெளிநாட்டு இருப்பின் பெறுமதி 7.2 பில்லியன் டொலர்களாகும். இருப்பினும் தற்போது அதன் பெறுமதி 1.6 பில்லியன் டொலர்கள் என்று அண்மையில் நிதியமைச்சர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். அவற்றில் 392 மில்லியன் டொலர்கள் தங்கம் என்பதால் அவற்றை நீக்கவேண்டும். அதன் பின்னர் எஞ்சியிருக்கக்கூடிய வெளிநாட்டு இருப்பின் பெறுமதி வெறுமனே ஒரு பில்லின் அமெரிக்க டொலர்கள் மாத்திரமேயாகும். 

ஆகவே 2019 இல் 7.2 பில்லியன் டொலராகக் காணப்பட்ட வெளிநாட்டு இருப்பு மிகக்குறுகிய காலத்திற்குள் ஒரு பில்லியன் டொலராக வீழ்ச்சியடைந்திருக்கின்றது. ஏனெனில் அதனைப் பயன்படுத்தி வெளிநாடுகளிடமிருந்து பெறப்பட்ட சர்வதேச பிணைமுறிகளுக்குரிய கொடுப்பனவு மீளச்செலுத்தப்பட்டுள்ளது.

ஆனால் அதற்குப் பதிலாக அரசாங்கம் எமது நாட்டின் விவசாயிகளை நெருக்கடிக்குள் தள்ளியிருக்கின்றது. உலகநாடுகள் அனைத்தும் இரசாயன உரத்தைப் பயன்படுத்திவருகின்ற சூழ்நிலையில், அதனைப் பயன்படுத்துவதால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படும் என்றும் ஆகவே இரசாயன உர இறக்குமதியைத் தடைசெய்யப்போவதாகவும் அரசாங்கம் அறிவித்தது. உரத்தை இறக்குமதி செய்வதற்கு அவசியமான டொலர்களை அரசாங்கம் கொண்டிராமையே அந்த அறிவிப்பிற்கான உண்மைக் காரணமாகும். 

இதனால் விவசாயிகள் மாத்திரமன்றி நாட்டுமக்கள் அனைவரும் தற்போது வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் பயிர்ச்செய்கைக்கு அவசியமான உரம் இல்லாததன் காரணமாக விளைச்சலில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. அதனால் உணவுப்பொருட்கள், மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்திருக்கின்றன. இவற்றின் விளைவாக அடுத்த வருட ஆரம்பத்தில் பாரிய உணவுப்பஞ்சம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதுடன், தற்போது பல்வேறு மருந்துப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் ஊடாக வெளிநாட்டுப்பிரஜாவுரிமையைக் கொண்ட ஒருவர் நாட்டின் நிதிநிர்வாகம் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அனுமதியளித்தமையும் இந்நெருக்கடிகளுக்கு ஓர் காரணமாகும். நாம் சர்வதேச நாணய நிதியத்தை மாத்திரமே நாடவேண்டும் என்று ஒருபோதும் கூறவில்லை. எங்கிருந்து நிதியுதவி பெறப்பட்டாலும் அது நிதியாகவே இருக்கும். ஆனால் அதற்குரிய முறையான கொள்கைகளும் செயற்திட்டங்களும் வகுக்கப்படவேண்டியது மிகவும் அவசியமாகும். அதனைத் தற்போதைய அரசாங்கம் செய்யவில்லை. 

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தற்போது இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. அதேபோன்று சர்வதேச நாணய நிதியத்தை நாடவேண்டிய நிலையேற்படுமாயின், அதற்கான நிபந்தனைகள் எத்தகையதாக இருக்கும் என்று எம்மால் கூறமுடியாது. மேலும் அவற்றுக்குப் பதிலாக நாட்டிலுள்ள பெறுமதிவாய்ந்த முக்கிய இடங்களை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவருவதாக அறியமுடிகின்றது. அதன் ஓரங்கமாக அரச - தனியார் அபிவிருத்திக் கூட்டிணைவின்கீழ் அதிவேக நெடுஞ்சாலையொன்று தனியார் நிறுவனமொன்றிடம் வழங்கப்பட்டிருக்கின்றது. அது பெரும்பாலும் சீன நிறுவனமாக இருக்கக்கூடும். 

அபிவிருத்தி செயற்திட்டங்களுக்காக தனியார் நிறுவனங்களுடன் இத்தகைய தொடர்புகளைப் பேணுவதில் எமக்கு எவ்வித ஆட்சேபனைகளும் இல்லை. ஆனால் அவற்றில் போதிய வெளிப்படைத்தன்மை பேணப்படுவது அவசியமாகும். இருப்பினும் இத்தகைய கொடுக்கல், வாங்கல்கள் மற்றும் ஒப்பந்தக்கைச்சாத்திடல்களின்போது அரசாங்கத்தினால் போதியளவு வெளிப்படைத்தன்மை பேணப்படவில்லை என்பதுடன் விலைமனுக்கோரல்களும் வெளியிடப்படுவதில்லை.

அவ்வாறானதொரு அடிப்படையிலேயே கெரவலப்பிட்டி யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 சதவீதமான பங்குகளை அமெரிக்காவின் நியூபோட்ரஸ் நிறுவனத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் இரவோடிரவாகக் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றது. இதுகுறித்து அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் எவரும் அறியவில்லையா? இதற்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்கள் யார்? என்ற பல்வேறு கேள்விகள் தற்போது தொக்கிநிற்கின்றன. அதுமாத்திரமன்றி குறித்த ஒப்பந்தத்தை இருவருடகாலத்திற்கு நாட்டுமக்களுக்குப் பகிரங்கப்படுத்தக்கூடாது என்று அவ்வொப்பந்தத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கின்றது. மேலும் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் யார் என்ற விபரங்கள்கூட வெளியிடப்படவில்லை.

அடுத்ததாக பாராளுமன்றக்கூட்டத்தொடரை ஒத்திவைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டிருக்கின்றது. இதன் விளைவாக கோப், கோபா உள்ளிட்ட பாராளுமன்ற செயற்குழுக்கள் கலையும் நிலையேற்பட்டிருக்கின்றது. ஏற்கனவே முதலீட்டுச்சபையின் அதிகாரிகள் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். 

அப்போது முதலீட்டுச்சபைக்கு உயர்வான சம்பளத்திற்குப் பெருமளவானோர் உள்வாங்கப்பட்டிருப்பது குறித்து கோப் குழுவினால் கேள்வியெழுப்பப்பட்டது. அதனைத்தொடர்ந்து முதலீட்டுச்சபையின் உயரதிகாரிகள் தமது பதவிகளிலிருந்து இராஜினாமா செய்திருக்கின்றார்கள். 

அதேபோன்று கல்லோயா செயற்திட்டத்தில் தொடர்புபட்டிருக்கக்கூடிய தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் அரச நிறுவனத்திற்கு 10 - 28 சதவீதத்திற்கு இடைப்பட்ட வட்டிக்கு கடன் வழங்கியிருப்பது குறித்தும் இதனால் அரச கட்டமைப்பிற்கு ஏற்படக்கூடிய நட்டம் தொடர்பிலும் கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டியிருந்தார். இவற்றால் சிலருக்குப் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கக்கூடும். அதனால் குறித்த குழுக்களுக்குப் புதியவர்களை நியமிக்கவேண்டிய அவசியம் சிலருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08