எண்ணெய்த்தாங்கிகளையோ? வடக்கில் தீவொன்றையோ இந்தியாவிற்கு வழங்கப்போகின்றதா அரசு? - லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி

Published By: Digital Desk 3

16 Dec, 2021 | 01:40 PM
image

(நா.தனுஜா)

நாடு மிகப்பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்ற தற்போதைய சூழ்நிலையில், நாட்டிற்குத் தேவையான பொருட்கள், எரிபொருள், மருந்துகள் ஆகியவற்றையும் பரஸ்பர பரிமாற்றல் வசதி அடிப்படையில் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியையும் இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கும் அதற்குப் பதிலாக எண்ணெய்த்தாங்கிகளை வழங்குவது குறித்தும் வடக்கிலுள்ள தீவொன்றைப் பற்றியும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டு வருவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

சர்வதேசத்தின் ஒத்துழைப்பின்றி எம்மால் ஒருபோதும் முன்நோக்கிச்செல்லமுடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும். நாட்டில் போர் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர், இனி மண்டேலாவின் பாதையிலோ அல்லது முகாபேயின் பாதையிலோ செல்லமுடியும் என்று நான் மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரடியாகக் கூறினேன். 

ஆனால் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தி மண்டேலாவின் பாதையில் செல்வதற்குப் பதிலாக அவர் முகாபேயின் பாதையையே தெரிவுசெய்தார். அதன் விளைவாக சர்வதேசத்தின் மத்தியில் எமது நாடு தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றக்கூட்டத்தொடரை ஒத்திவைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதி வசமுள்ள போதிலும், நாடு பாரிய நெருக்கடியிலிருக்கும்போது பாராளுமன்றக்கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுவதில்லை. குறிப்பாக நாடு தற்போது மிகமோசமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் பாராளுமன்றக்கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களை அதிகரிக்கவேண்டுமே தவிர, அவற்றைக் குறைக்கக்கூடாது. 

பாராளுமன்றக்கூட்டத்தொடரை ஒத்திவைத்தல் என்பது பிரித்தானியப் பாராளுமன்ற சம்பிரதாயமாகும். இரண்டாம் உலகமகாயுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் சுமார் 14 தடவைகள் பிரித்தானியப் பாராளுமன்றத்தின்மீது குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டபோதிலும், பாராளுமன்ற செயற்பாடுகள் இடைநிறுத்தப்படவில்லை. 

நெருக்கடி நிலையின்போது பாராளுமன்றம் இயங்குவது அவசியமாகும். ஆனால் அவ்வாறானதொரு சூழ்நிலையில் கூட்டத்தொடரை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் தீர்மானமானது, தற்போதைய பிரச்சினைகளுக்கு அவர்களிடம் தீர்வுகளோ அல்லது பதில்களோ இல்லையென்பதை வெளிப்படுத்தியிருக்கின்றது.

பாராளுமன்றக்கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டதன் விளைவாக மூன்று குழுக்களைத் தவிர கோப், கோபா உள்ளிட்ட முக்கிய பாராளுமன்றத்  தெரிவுக்குழுக்கள் அனைத்தும் கலைக்கப்பட்டிருக்கின்றன. எனவே மீண்டும் பாராளுமன்றம் கூடும்போது இக்குழுக்களை மீள நியமிப்பதற்கு முற்படும்போது, அரசாங்கத்தினால் அதனைத் தாமதப்படுத்தமுடியும். 

கோப் மற்றும் கோபா ஆகிய இரு குழுக்களும் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டன. குறிப்பாக சீனிமோசடி தொடர்பில் தகவல்கள் வெளியானபோது கோபா குழுவின் தலைவர் அதுகுறித்து அரசதிறைசேரியிடம் அறிக்கையொன்றைக் கோரினார். அதனை அடிப்படையாகக்கொண்டு கணக்காய்வு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு அவர் கோரியிருந்த போதிலும், இன்னமும் அரசதிறைசேரியினால் அவ்வறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. 

சீன உர இறக்குமதி விவகாரத்தைப் பொறுத்தமட்டில் தற்போது உரமும் இல்லை, பணமும் இல்லை என்ற நிலையே ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் இவைதொடர்பில் கேள்வி எழுப்புவதற்கு இப்போது பாராளுமன்றத்தெரிவுக்குழுக்கள் இல்லை.

அடுத்த வருடம் 6.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்களை மீளச்செலுத்தவேண்டியுள்ளது. அதனை எவ்வாறு செலுத்தப்போகின்றீர்கள் என்று நிதியமைச்சரிடம் நாம் கேள்வி எழுப்பியிருந்தோம். அதற்கு அவர் 'எவ்வாறேனும் மீளச்செலுத்துவோம்' என்று பதிலளித்தாரே தவிர, அதற்கு அவசியமான நிதியை எங்கிருந்து, எவ்வாறு திரட்டிக்கொள்ளப்போகின்றார் என்பது குறித்து விளக்கமளிக்கவில்லை. 

இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாட்டிற்கு அவசியமான பொருட்கள், எரிபொருள், மருந்துகள் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் உயர்ஸ்தானிகராலயம் ஊடாக இந்தியாவுடன் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பரஸ்பர பரிமாற்றல் வசதி அடிப்படையில் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பெறுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அறியமுடிகின்றது. 

இருப்பினும் இவற்றுக்குப் பதிலாக அரசாங்கம் வழங்குகின்ற வாக்குறுதிகள் என்ன? எண்ணெய்த்தாங்கிகளை வழங்குவது குறித்தும் வடக்கிலுள்ள தீவொன்றைப் பற்றியும் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டுவருவதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

மறுபுறம் அரசாங்கம் பாரிய அரசியல் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் ஒரு தரப்பினர் தனியாகப்பிரிந்து நாடு முழுவதும் கூட்டங்களை நடத்துகின்றனர். 

ஆகவே 'அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு' என்பது தற்போது நடைமுறையில் இல்லை. அதுமாத்திரமன்றி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிரான சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாகவே கருத்துக்களை வெளியிடுகின்றார்கள். 

நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் அனைத்து நெருக்கடிகளுக்கும் கொரோனா வைரஸ் பரவலே காரணம் என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் உரப்பிரச்சினைக்குக் காரணம் கொரோனா வைரஸ் பரவலா? எரிவாயு சிலிண்டர் வெடிப்புப் பிரச்சினைக்குக் காரணம் கொரோனா வைரஸ் பரவலா? மின்துண்டிப்பிற்கு யார் காரணம்? பொருட்களின் விலையேற்றத்திற்கு யார் காரணம்? அரசாங்கம் அத்தியாவசியப்பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலையிலிருக்கின்றது.

எனவே இப்போது மக்களின் அபிப்பிராயத்தைக் கோரவேண்டிய காலம் உருவாகியிருக்கின்றது. உலகின் எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் மக்களின் நிலைப்பாடு என்னவென்பதை அறிந்துகொள்வதற்காகக் குறைந்தபட்சம் இருவருடங்களுக்கு ஒருமுறை ஏதேனுமொரு தேர்தல் நடாத்தப்படும். எமது நாட்டில் மாகாணசபைத்தேர்தல்கள் நீண்டகாலமாக நடாத்தப்படாமல் இருக்கிறது. 

அதேபோன்று எதிர்வரும் பெப்ரவரி மாதத்துடன் உள்ளுராட்சிமன்றங்களின் பதவிக்காலம் முடிவிற்கு வருகின்றது. ஆகவே இவ்விரு தேர்தல்களில் ஏதேனுமொன்றை நடாத்துமாறு அரசாங்கத்திடம் கோருகின்றோம். தேர்தல்களை விரைந்து நடாத்துவதற்கு அவசியமான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

சர்வதேசத்தின் ஒத்துழைப்பின்றி எம்மால் ஒருபோதும் முன்நோக்கிச்செல்லமுடியாது. நாட்டில் போர் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர், இனி மண்டேலாவின் பாதையிலோ அல்லது முகாபேயின் பாதையிலோ செல்லமுடியும் என்று நான் மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரடியாகக் கூறினேன். 

ஆனால் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தி மண்டேலாவின் பாதையில் செல்வதற்குப் பதிலாக அவர் முகாபேயின் பாதையையே தெரிவுசெய்தார். அதன் விளைவாக இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அடுத்தடுத்து மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

அதுமாத்திரமன்றி அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கமுடியாததன் காரணமாகவே 2015 ஆம் ஆண்டில் ஜனாதிபதித்தேர்தலை நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது

ஆகவே சர்வதேசத்தின் அனுசரணை மிகவும் அவசியம் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும். இவ்வாறானதொரு சூழ்நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்படாது. மாறாக வேறு ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

அடுத்ததாக கெரவலப்பிட்டி யுகதனவி மின்னுற்பத்தி நிலையம் தொடர்பில் வெளிநாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நாம் பலமுறை கோரினோம். அதனைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக அமைச்சர் காமினி லொகுகே உறுதியளித்திருந்த போதிலும், அதற்கு முன்னதாக அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. 

அதனைத்தொடர்ந்து குறிப்ப ஒப்பந்தத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு உத்தரவிடுமாறு சபாநாயகரிடம் கோரினோம். ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை என்று குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22