புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளின் பிரச்சினைகள் தற்போது மேற்குலக நாடுகளில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளன. எமது நாட்டுக்கும் தாக்கம் செலுத்தும் அந்த மோசமான நிலையை தவிர்ப்பதற்காக புதிய திட்டங்களுடாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இதேவேளை, குடிவரவு குடியகல்வு செயற்பாடுகள் மற்றும் ஆட்களை பதிவுசெய்தல் தொடர்பில் தற்போதுள்ள சட்டதிட்டங்களை பலப்படுத்துதல் மற்றும் தேவையென்றால் புதிய சட்டவிதிகளை வகுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களம் ஆகியவற்றை பத்தரமுல்லையில் அமைந்துள்ள “சுகுறுபாய” புதிய கட்டிடத்தில் நிறுவும் நிகழ்வில் பங்குபற்றி உரையாற்றிய போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

குடிவரவு குடியகல்வு செயற்பாடுகள் மற்றும் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்கள செயற்பாடுகள் தொடர்பில் எழுந்துள்ள சவால்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அடுத்த பாதுகாப்புச்சபைக் கூட்டத்திற்கு அந்த திணைக்களங்களின் அதிகாரிகளையும் அழைப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மக்களுக்கு மிகவும் வினைத்திறனான, விளைதிறனான சேவையை வழங்கும் நோக்குடன் அனைத்து வசதிகளையும், நவீன தொழிநுட்ப உபகரணங்களையும் தன்னகத்தே கொண்ட சுகுறுபாய புதிய கட்டிட வளாகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்காக சேவையாறும் நிறுவனங்களிலுள்ள குறைந்த வசதிகள் காரணமாக பாதிக்கப்படுவது சாதாரண மக்களே எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதற்கு முன்னர் நிறைவேற்றப்படவேண்டிய பணிகளை தாமதித்தாவது தற்போதைய அரசின் கீழ் மக்களுக்காக நிறைவேற்றக் கிடைத்தமையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் மேலும் தெரிவித்தார்.

புதிய தொழிநுட்ப உபகரணங்களுடனான சேவைகள் மூலம் ஏற்படும் வினைத்திறனான தன்மை மற்றும் முறைமைப்படுத்தல் ஊடாக வருகை தரும் அனைத்து மக்களுக்கும் நட்பான சேவையை வழங்கி, மனநிறைவுடன் அவர்கள் வெளியே செல்லக்கூடியவாறு அவர்களுடைய தேவைப்பாடுகளை நிறைவேற்றுதல் பணிக்குழாத்தினரின் பொறுப்பாகுமெனவும் தெரிவித்தார்.

அமைச்சர்களான எஸ்.பீ. நாவின்ன, நிமல் சிறிபால டி சில்வா, பாட்டலி சம்பிக ரணவக்க, தயா கமகே, பிரதியமைச்சர்களான பாலித தேவரப்பெரும, லசந்த அழகியவன்ன ஆகிய அமைச்சர்களும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உட்பட்ட பலர் இந்நிகழ்வில் பங்குபற்றினார்கள்.