சமூகத்திற்கு ஆற்றிய அர்ப்பணிப்புடனான சேவையின் 90 வருடப்பூர்த்தியை சைவ மங்கையர் கழகம் கொண்டாடுகின்றது - தொண்ணூறு வருடப்பயணத்தில் 'நியூ நோர்மல்' நிலையை நோக்கிய பரிணாமம்

Published By: Digital Desk 3

14 Dec, 2021 | 12:23 PM
image

அது 1930 ஆம் ஆண்டு! டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி. அப்போது இலங்கை காலனித்துவ ஆட்சியின் கீழிருந்ததுடன் இந்துக்கள் தமது இந்து தமிழ் அடையாளத்தை இழந்து இக்கட்டான சூழ்நிலையில் இருந்தார்கள்.

அப்போதுதான் இளம் சைவப்பெண்கள் குழுவினர் தமது மொழி, மதம் மற்றும் கலாசாரம் ஆகியவற்றை மேலோங்கச்செய்யும் நோக்கில் சைவ மங்கையர் கழகத்தை (கழகம்) ஸ்தாபிப்பதற்குத் தூண்டப்பட்டார்கள். அதன் முதற்கட்டமாக இராமகிருஷ்ண மிஷனின் சுவாமி விபுலானந்தா மற்றும் முதலியார் ராசநாயகம் ஆகியோரின் வழிகாட்டலின்கீழ் தமக்கென ஓர் பெண்கள் அமைப்பை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தார்கள். இந்தப் பெண்களுக்கு கட்டடக்கலை வல்லுனர்களான திருமதி ராசமுத்து சதாசிவம், திருமதி சொர்ணகாந்தி நல்லைநாதன் மற்றும் திருமதி பாலாம்பிகை நமசிவாயம் ஆகியோர் தலைமைதாங்கினர்.

டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி, பத்து வருடங்களின் பின்னர் எமது 90 ஆவது வருடப்பூர்த்தியை முன்னிட்டு கடந்த 90 வருடங்களில் 'கழகத்தினதும் அதன் ஏனைய கட்டமைப்புக்களினதும் வெற்றிகள்' ('Achievements - The Kalagam and Its Institutions') என்ற எமது கதையை முன்வைக்கின்றோம். அதனை எழுத்து வடிவில் ஆவணப்படுத்துவதன் ஊடாகவே கழகத்தின் ஆரம்பம், குறிக்கோள்கள், அந்தக் குறிக்கோள்கள் எவ்வாறு ஈடேற்றப்பட்டன?, அவற்றின் தற்போதைய நிலையை நாம் எவ்வாறு நோக்குகின்றோம்? என்பது குறித்து எதிர்கால சந்ததியினர் அறிந்துகொள்ளமுடியும். எம்மைச்சூழ நிகழ்ந்துகொண்டிருக்கும் பல்வேறு மாற்றங்களுக்கு மத்தியில் அதனைச் செய்வதற்கு மிகப்பொருத்தமான சந்தர்ப்பம் இதுவாகும்.

மூன்று பிரதான குறிக்கோள்களை அடிப்படையாகக்கொண்டு கழகம் ஸ்தாபிக்கப்பட்டதாக அதன் ஸ்தாபகச்செயலாளர் கழகத்தின் வெள்ளிவிழா சஞ்சிகையில் குறிப்பிட்டுள்ளார். 'கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஒருவருடகாலத்திற்குள்ளாகவே நாம் பெண்களுக்கான பாடசாலையொன்றை  ஸ்தாபிப்பதற்கான முக்கிய தீர்மானத்தை மேற்கொண்டோம்'. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கல்வி நிலையம் 'ஒரு பெண்ணுக்குக் கல்வி கற்பிப்பதால் நீங்கள் ஒரு குடும்பத்திற்குக் கற்பிக்கின்றீர்கள்' என்ற மகாத்மா காந்தியின் கூற்றை நினைவுபடுத்துகின்றது.

தூரநோக்கு சிந்தனையுடைய இந்த அறிவார்ந்த பெண்களால் மேற்கொள்ளப்பட்ட இரு முக்கிய தீர்மானங்களைக் கூறவேண்டும். அவை முறையே,

1.மாணவர்களுக்கான கல்வித்திட்டத்தில் மொழியும் மதமும் மிகமுக்கியமானதாகும்

2.குறிப்பாக பெண்களுக்கான கல்வி செயற்திட்டத்தில் அழகியல் கல்வியின் முக்கியத்துவம்

இந்தத் தீர்மானங்களும் 1932 இல் வித்தியாலயம் ஸ்தாபிக்கப்பட்டமையும் பெண்களுக்கு மிகவும் பழமையான இந்து பாரம்பரியத்தில் சங்கீதம் மற்றும் நடனம் ஆகிய பாடவிதானங்களை உள்ளடக்கியதாகத் தற்போது வழங்கப்பட்டுவரும் கல்வியின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

ஏழு மாணவர்களுடன் உதயமான சைவ மங்கையர் வித்தியாலயம், 1933 ஆம் ஆண்டில் கொழும்பு 6, 34 ஆவது வீதியில் அமைந்திருந்த அதன் சொந்தக் கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. மெட்ராஸ் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியின் இளம் பட்டதாரியின் திறமைக்கும் நிர்வாக ஆற்றலுக்கும் அங்கீகாரத்தை வழங்கும் வகையில் பாடசாலையின் அதிபராக நாகம்மாள் காசிப்பிள்ளை நியமிக்கப்பட்டார்.

கழகம் ஸ்தாபிக்கப்பட்ட 1930 களில் அது மிகுந்த செயற்திறனுடன் இயங்கியது. பிறநாட்டு கலாசாரமும் மதமும் தலைத்தூக்கியிருந்த அக்காலப்பகுதியிலே தம்மையும் தம்மைச்சூழ இருப்பவர்களையும் மேம்படுத்திக்கொள்வதற்காகப் பெண்கள் ஒன்றாகக் கைகோர்த்தார்கள். 

அக்காலப்பகுதியில் இலங்கைக்கு வருகைதந்த மகாத்மா காந்தி, கமலா சட்டோபாத்யாய், சரோஜினி நாயுடு ஆகியோர் அப்பெண்கள்மீது நேர்மறையானதும் வலுவானதுமான தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். அவர்கள் திருக்குறளைக் கற்றுக்கொண்டார்கள். இராமகிருஷ்ணமிஷனின் சுவாமிஜிகள் ஊடாக மதரீதியான போதனைகளை ஏற்பாடுசெய்தார்கள். முதல் பெண் கவுன்ஸிலர்களான திருமதி நேசம் சரவணமுத்து மற்றும் திருமதி அடெலின் மொலமுரே ஆகியோரைக் கௌரவிப்பதற்காக அவர்கள் தமிழ் பெண்கள் அமைப்புடன் இணைந்துகொண்டார்கள்.

1930 களில் பண்டித் ஜவகர்லால் நேரு, கமலா நேரு, பரோடா மற்றும் மைசூர் ஆகிய நகரங்களின் மகாராணிகள், திருமதி விஜயலக்ஷ்மி பண்டித் போன்ற தலைசிறந்த ஆளுமைகளை வரவேற்கும் மாபெரும் வாய்ப்பு அவர்களுக்குக் கிட்டியது. அதுமாத்திரமன்றி சுத்தானந்த பாரதி, ஸ்வாமி ஷிவானந்தா, ஸ்வாமி ராமதாஸ் மற்றும் அன்னை கிருஷ்ணாபாய் போன்ற மதரீதியான ஆளுமைகளைச் சந்திக்கும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைத்தது.

அதனைத்தொடர்ந்து சிலகாலத்தில் கல்வித்திணைக்களத்தின் நிதியுதவியைப் பெறுவதெனின் பாடசாலைக்கல்விப் பாடவிதானத்திலிருந்து சங்கீதமும் நடனமும் நீக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டமைக்கு அமைவாக கன்னங்கரா இலவசக்கல்விச் செயற்திட்டத்தின்கீழான நிதியுதவி மூலம் முகாமைத்துவத்தின் வழிகாட்டலுடன் செல்வி காசிப்பிள்ளை பாடசாலையைக் கட்டியெழுப்பினார்.

1945 ஆம் ஆண்டில் பாடசாலைக்கல்விப் பாடவிதானத்திலிருந்து நீக்கவேண்டியேற்பட்ட  இந்து கலாசாரம், சங்கீதம் மற்றும் நடனம் ஆகியவற்றுக்குப் புத்துயிரூட்டும் விதமாக கழக உறுப்பினர்கள் இணைந்து கர்நாடக சங்கீதம் மற்றும் பரதநாட்டியப் பாடசாலையை நிறுவினார்கள். பல்வேறு இசைக்கருவிகள், சங்கீதம் மற்றும் நடனம் ஆகியவற்றைப் போதிக்கும் வகையில் அப்போது நாட்டிலிருந்த ஒரேயொரு பாடசாலை அதுவாகும்.

இந்த கர்நாடக சங்கீதம் மற்றும் பரதநாட்டியப் பாடசாலை மிகுந்த சிறப்புடன் புத்தொளிபெற்று விளங்கியது. 1950 களின் நடுப்பகுதியில் பாடசாலையின் இசைவாத்தியக்குழுவும் நடனக்குழுவும் சென்னையில் நடைபெறும் சங்கீத நிகழ்வில் பங்கேற்பதற்காக அழைக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து திருமதி இந்திரா காந்தியின் அழைப்பின்பேரில் புதுடில்லியிலுள்ள விக்னன் பவனில் கர்நாடக சங்கீதத்தையும் பரதநாட்டியத்தையும் அரங்கேற்றுவதற்காகவும் அக்குழுவினர் சென்றனர்.

மேலும் 1940 களின் இறுதியில் - 1950 களின் ஆரம்பத்தில் அடையாரிலிருந்து மரியா மொன்ரிசோரி இலங்கைக்கு வருகைதந்திருந்த நிலையில், 1951 ஆம் ஆண்டில் பாலர் பாடசாலையைத் திறந்துவைப்பதற்காக அவரை அழைப்பதற்கு கழகத்தினால் இயலுமாக இருந்தது. அவர் விரும்பியதைப்போன்று அந்தப் பாலர் பாடசாலை இன்றளவிலே சிறுவர்களுக்கு நேயமான ஓர் இல்லமாக வளர்ச்சிகண்டிருக்கின்றது.

1958 ஆம் ஆண்டு மேமாதம் தொடக்கம் ஜுன்மாதம் வரையிலான காலப்பகுதியில் தமிழர்களை மிகமோசமாகப் பாதித்த இனங்கலவரங்களின் விளைவாக கழகம் அதன் முதலாவது சவாலை எதிர்கொண்டது. கொழும்பில் வசித்த பெரும்பாலான தமிழர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள அவர்களது சொந்த வாழ்விடங்களுக்கே திரும்பிச்சென்றார்கள். அதன் காரணமாக பாடசாலையில் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சிகண்டது. மேலும் சில இனக்கலவரங்கள் தமிழர்களை வெகுவாகப் பாதித்ததுடன் அதன் விளைவுகளை எதிர்கொள்கின்ற முடிவிடமாகக் கழகம் காணப்பட்டது. இருப்பினும் 'காலமும் கரையை வந்தடையும் அலையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை' என்ற பழமொழிக்கு அமைவாக, மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து பாடசாலையின் செயற்பாடுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டபோதிலும், காலப்போக்கில் அவையனைத்தும் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பின.

1960 ஆம் ஆண்டில் கழகத்திற்கென திருமதி தம்பையாவினால் 'சிவானந்தா நிலையம்' என்ற பெயரில் வழிபாடு மற்றும் மன அமைதிக்கான பயிற்சி மண்டபமொன்று நிர்மாணிக்கப்பட்டது. பாடசாலையினால் இந்த மண்டபம் காலை கூட்டுப்பிரார்த்தனைக்காகப் பயன்படுத்தப்பட்டது.

1960 இல் நாட்டிலுள்ள மதரீதியான பாடசாலைகள் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டபோது, வித்தியாலயத்தை அரசாங்கத்திடம் கையளிக்காமல் இருப்பதற்கும் அதனைக் கட்டணம் அறவிடாத தனியார் பாடசாலையாக நடாத்திச்செல்வதற்கும் கழகம் தீர்மானித்தது. ஆனால் இந்து அமைப்புக்கள் அனைத்தும் ஏனைய இந்து பாடசாலைகளை அரசாங்கத்திடம் கையளித்தன.

அதற்கடுத்த சில வருடங்கள் மிகவும் கடினமான காலப்பகுதியாகக் அமைந்திருந்தது. கட்டணம் அறவிடாத பாடசாலையாக இயங்கும் அதேவேளை, அதன் மாதாந்த செலவுகளை ஈடுசெய்வதற்கான நிதியைத் திரட்டிக்கொள்வது என்பது மிகவும் சிக்கலானதாகக் காணப்பட்டது. இருப்பினும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அவற்றைக் கடந்து கழகம் முன்நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. 1977 இல் நோர்வேயைச் சேர்ந்த அரச சார்பற்ற அமைப்பொன்று எமக்கான மீட்பராக வந்தது. அதனைத்தொடர்ந்து 1980 ஆம் ஆண்டில் இவ்வாறான பாடசாலைகளுக்கு உதவுவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் மூலம் வித்தியாலயம் அரசாங்கத்தினால் உதவியளிக்கப்படும் தனியார் பாடசாலையாக மாறியது.

முதற்தரக்கட்டமைப்பாகத் திகழ்ந்த இப்பாடசாலைக்கு அதனோடு இணைந்ததாக விடுதி வசதி அவசியம் என்று அதிபர் கருதியமையால் 1972 ஆம் ஆண்டில் 'மங்கையர் இல்லம்' ஸ்தாபிக்கப்பட்டது. நாட்டில் போர் இடம்பெற்ற அக்காலப்பகுதியில் இந்த விடுதி வித்தியாலயத்தின் மிகமுக்கிய அங்கமாகத் திகழ்ந்ததுடன் நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் பாடசாலையில் இணைந்துகொண்ட மாணவர்கள் அவ்விடுதியில் தங்கினார்கள். அதிலிருந்து சில வருடங்களில் கணவரை இழந்ததன் பின்னர் தனியாக வாழ்ந்துவந்த எமது கழக ஸ்தாபகர் திருமதி நமசியவாயத்தின் இல்லத்தில் முதியோர்களுக்கென 'பாலாம்பிகை நமசிவாயம் இல்லம்' நிறுவப்பட்டது.

1980 களின் நடுப்பகுதியில் எமது ஸ்தாபகர்களுக்கான 3 நினைவுப்பலகைகளுடன் வகுப்பறைகள், ஆய்வுகூடங்கள் மற்றும் அலுவலக அறைகள் உள்ளடங்கலாக வித்தியாலயக் கட்டடத்தை நிர்மாணிக்கும் செயற்திட்டத்திற்கு சில தூதரகங்கள் நிதியுதவி வழங்குவதற்கு முன்வந்ததைத் தொடர்ந்து கழகம் சடுதியாக வளர்ச்சிகண்டது. 1990 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் எமது பாடசாலை 1 ஏ.பி தரத்திலான தேசிய பாடசாலையாக அங்கீகாரம் பெற்றது.

மேலும் மாணவர்களுக்குக் கல்வியைப் போதிக்கின்ற மொழியில் ஆங்கிலத்தையும் இணைத்துகொள்வதன் அவசியத்தை முகாமைத்துவம் உணர்ந்துகொண்டதைத் தொடர்ந்து கல்விசார் அடிப்படையிலும் பாடசாலை வளர்ச்சிகண்டது. அதன்படி ஆரம்பக்கல்வி தாய்மொழியான தமிழிலேயே இருக்கவேண்டும் என்பதை மனதிலிருத்திக்கொண்டு மூன்றாம் தரத்திலிருந்து உயர்தரம் வரையிலான மாணவர்களுக்கு ஆங்கிலமொழி மூலமான வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. எமது ஆரம்ப ஸ்தாபகர்களால் இடப்பட்ட மிகவும் வலுவான அடித்தளத்தைப் பின்பற்றி காலப்போக்கில் வித்தியாலயம் நன்கு விரிவடைந்தது.

தற்போது எமது பாடசாலையில் 2,400 இற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயில்வதுடன் 120 ஆசிரியர்கள் பணிபுரிகின்றார்கள். கல்வியைப் போதிப்பதில் தேசிய ரீதியிலான பாடவிதானம் பின்பற்றப்படும் அதேவேளை, தற்போதைய போட்டித்தன்மை வாய்ந்த உலகில் முகங்கொடுக்கநேரும் சவால்களை எதிர்கொள்வதற்கான மேலதிக செயற்திறனை மாணவர்கள் மத்தியில் வளர்த்தெடுப்பதிலும் விசேட கவனம் செலுத்தப்படுகின்றது. இவை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப்பரீட்சை ஆகியவற்றில் எமது மாணவர்கள் பெற்றுக்கொள்ளும் பெறுபேறுகளில் பிரதிபலிக்கின்றன.

நாம் கடந்த வருடம் எமது 90 ஆவது வருடத்தில் காலடியெடுத்துவைத்தபோது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கழகத்தினால் நிறுவப்பட்ட வித்தியாலயம், பாலர் பாடசாலை, விடுதி, கர்நாடக சங்கீதம் மற்றும் பரதநாட்டியப் பாடசாலை, வழிபாடு மற்றும் மன அமைதிக்கான பயிற்சி நிலையம், முதியோர் இல்லம் உள்ளிட்ட அனைத்துக் கட்டமைப்புகளினதும் வழமையான செயற்பாடுகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன.

இருப்பினும் முடக்கத்திற்கு மத்தியிலும் வித்தியாலயமும் முதியோர்களையும் தொழில்புரியும் பெண்களையும் உள்ளடக்கிய முதியோர் இல்லமும் செயற்திறனுடன் இயங்கிவருகின்றன.

கொரோனா வைரஸ் பரவலானது கைகளை அடிக்கடி கழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல், தடுப்பூசி பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட புதிய சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்களுடன் இணைந்ததாக நாட்டின் கல்வி முறைமையை முழுமையாக மாற்றியமைத்திருக்கின்றது. எதுஎவ்வாறெனினும் ஆரம்ப நாட்களில் சின்மயா மிஷனின் நிகழ்நிலை வகுப்புக்களுடனான எனது அனுபவம், கல்வித்துறையில் அதிபர் கொண்டிருக்கும் அனுபவம் மற்றும் ஆசிரியர்களின் முழுமையான ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் பாலர் பாடசாலை தொடக்கம் உயர்தர வகுப்புக்கள் வரையிலான வித்தியாலயத்தின் கல்விச்செயற்பாடுகளை நிகழ்நிலை மூலமான 'நியூ நோர்மல்' டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப வழிநடத்துவதற்கு எம்மால் இயலுமாக இருந்தது. கற்பித்தல் மற்றும் கற்றல் நடவடிக்கைகளில் சலிப்பேற்படுவதைத் தவிர்ப்பதற்காக வித்தியாலயத்தின் மாணவர் மன்றங்கள் சார்ந்த செயற்பாடுகளும் நிகழ்நிலை ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன.

முன்னைய நிலையிலிருந்து தற்போதைய 'நியூ நோர்மல்' நிலைக்கு மாற்றமடைவதற்கான எமது இயலுமைக்காக முகாமைத்துவத்தரப்பினரும் அதிபரும் ஆசிரியர்களும் பெற்றோர்களிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் பாராட்டைப் பெற்றிருக்கின்றார்கள் என்று என்னால் பெருமையுடன் கூறமுடியும்.

கழகம் அதன் 90 வருடங்களைப் பூர்த்திசெய்து மற்றுமொரு மைல்கல்லை அடைந்திருக்கும் இத்தருணத்தில் அதன் கடந்தகால நிகழ்வுகளை மீட்டிப்பார்ப்பது எனக்கு மிகுந்த மகிழ்வைத் தருகின்றது. இந்த ஸ்தாபக தினத்தில் இறையாசியுடன் எதிர்காலத்தை முன்னிறுத்தி எமது சேவைகளைத் தொடர்வதற்கு நாம் உறுதிபூணுவோம்.

சிவானந்தினி துரைசுவாமி,
கழகத்தலைவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13