(ரி.விரூஷன்)

யாழ்ப்பாணம், பிறவுண் வீதி நான்காம் குறுக்குத் தெரு பகுதியில் உள்ள களஞ்சிய நிலையமொன்றின் காணியில் இருந்து கைக்குண்டுகள் மூன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இது விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இன்றையதினம் காலை குறித்த களஞ்சியசாலை பகுதியின் காணியில் அங்கிருந்த நாயொன்று குட்டி ஈனுவதற்காக நிலத்தில் குழி தோண்டியுள்ளது.

இதன்போது மண்ணினுள் புதையுண்ட நிலையில் கைக்குண்டுகள் தென்பட்டதை அவதானித்த களஞ்சிய பொறுப்பாளர், இது தொடர்பாக உடனடியாக யாழ்.பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து  பொலிஸார்  விசாரணைகளை மேற்கண்ட போது குறித்த பகுதியில் நாய் குழி  தோண்டிய இடங்களில் மேலும் இரு கைக்குண்டுகள் இருப்பதை அவதானித்திருந்தனர்.

இதனையடுத்து இப் பகுதியில் மேலும் கைக்குண்டுகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தினடிப்படையில் மேலதிக  தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்வதற்காக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரது குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினருக்கு தெரியப்படுத்தியிருந்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணை நடவடிக்கைகளையும் ஆரம்பித்திருந்தனர்.

இதேவேளை,  யாழ்ப்பாணத்தில் கடந்த யுத்த காலத்தின் போது குறித்த பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் இராணுவ முகாம் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.