ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் போசித்து பாதுகாக்கும் நாடென்ற வகையில் தகவல் அறியும் உரிமையானது நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் திறந்துவிடப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

'சர்வதேச தகவல் அறியும் நாள்' தொடர்பில் இன்று கொழும்பு ஜெய்க் ஹில்ரன் ஹோட்டலில் ஆரம்பமான சர்வதேச மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு கூறினார். 

தகவல் அறிந்துகொள்ளும் உரிமையை சமூகத்தின் அடிப்படை உரிமை உறுதிப்படுத்துதல் தொடர்பாக நீண்ட காலமாக அரசியல் மேடைகளிலும், சிவில் அமைப்புக்களாலும், பொதுமக்களிடையேயும் விவாதிக்கப்பட்டிருந்த போதிலும் கடந்தகால அரசுகள் நிறைவேற்றத் தவறிய அச்செயற்பாட்டை தற்போதய அரசினால் நிறைவேற்ற முடிந்திருப்பதாக தெரிவித்தார்.

அரச செலவினங்களுக்காக பொதுமக்களின் நிதியைப் பயன்படுத்தும்போதும் அதனை முகாமைத்துவம் செய்யும்போதும் ஏற்படும் முறைகேடான பயன்பாடுகள் மற்றும் தவறான நிதி முகாமைத்துவம் காரணமாக நாட்டு மக்களுக்கு ஏற்படும் அநீதி மற்றும் நாட்டின் முன்நோக்கிய பயணத்துக்கு ஏற்படும் தடைகளும் தகவல் அறிந்துகொள்ளும் உரிமையை சமூகத்தின் அடிப்படை உரிமையாக உறுதிப்படுத்தப்படுத்துவதால் நீங்கிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஊடக சுதந்திர சட்டம், அரசியலமைப்பு, உரிமைகள் ஆகியன எவ்வளவுதான் உறுதிப்படுத்தப்பட்டிருந்த போதிலும் இன்று பெரும்பாலன ஊடகங்கள் அவற்றின் உரிமையாளர்களினதும் முகாமைத்துவத்தினதும் விருப்புவெறுப்புகளுக்கமையவே செயற்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஊடக சுதந்திர உரிமைகளுக்கான வாய்ப்புகளை வழங்குவது அரசியல்வாதிகளின் பொறுப்பாகுமெனவும், அரச அலுவலர்கள் அதனை முறைமைப்படுத்துவதுடன் நாட்டு மக்களின் நலனுக்காக ஊடக சுதந்தித்தைப் பயன்படுத்துவது அனைத்து இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களினதும் பொறுப்பாகுமெனவும் தெரிவித்தார்.

அரசு சாரா நிறுவனங்கள் பற்றிய தகவல் அறியும் உரிமையை உறுதிப்படுத்தவேண்டியதன் அவசியத்தையும் இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பெரும்பாலான அரசு சார்பற்ற நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்ட விடயங்களுக்கு புறம்பாக செயற்படுவது உலகின் பல அரசாங்கங்களின் இருப்புக்கு சவாலாக அமைந்திருப்பதாக குறிப்பிட்டார்.

சர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

ஆரம்ப நிகழ்வின் முதன்மை விரிவுரை இந்திய சட்ட ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் டில்லி மற்றும் மதுரை மேல் நீதிமன்றங்களின் முன்னாள் நீதியரசருமான அஜித் பிரகாஷ் ஷா அவர்களால் நிகழ்த்தப்பட்டது. சபாநாயகர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, பிரதியமைச்சர் கரு பரணவிதாண ஆகியோர் உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகளும் பங்குபற்றினார்கள்.