காஷ்மீர் மாநிலம் யுரியில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் கலைஞர்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ராஜ்தாக்கரே தலைமையிலான மராட்டிய நவ நிர்மான் சேனா கட்சி மிரட்டல் விடுத்தது.

இந்தி படங்களில் நடித்து வரும் பாகிஸ்தான் நடிகர்கள் பவாத்கான் மற்றும் மஹீராகான் ஆகியோரும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று கெடு விதித்தனர். இது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அமெரிக்காவில் இசைப்பயணம் மேற்கொண்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவை வாஷிங்டன் நகரில் செய்தியாளர்கள் சந்தித்து பாகிஸ்தான் கலைஞர்கள் வெளியேற வேண்டும் என்று கெடு விதித்து இருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். 

இதனை தொடர்ந்து இதற்கு பதில் அளித்த அவர், "இசைக்கு நாடு, நேரம் கிடையாது. எதுவுமே கிடையாது. இசை என்பது இசைதான். இசை எல்லைகளை கடந்தது. அதற்கு எல்லைகள் என்பதே கிடையாது" என்று கூறினார். ஆரம்ப காலத்தில் உங்களுடன் பணியாற்றிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்ட போது, "இந்த கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என்று கடிந்துக்கொண்ட இளையராஜா பதில் அளிக்க மறுத்துவிட்டார்.