இராணுவத்தின் ஜகத் ஜெயசூரிய, கபில எந்தவிதாரண ஆகியோர் உண்மையில் குற்றவாளிகளே - சரத் பொன்சேகா

Published By: Digital Desk 4

04 Dec, 2021 | 06:49 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஜகத் ஜெயசூரிய, கபில எந்தவிதாரண, கரன்னாகொட ஆகியோர் உண்மையில் குற்றவாளிகளே.

இவர்கள் தவறிழைத்தனர், கண்டிப்பாக  இவர்களை தண்டிக்க வேண்டும் என்பதை சபையில் வலியுறுத்திய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, நாம் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த வழக்குகளை மீண்டும் கையில் எடுப்பதுடன்,  கரன்னாகொடவிற்கு எதிராக நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (3) இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு ,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ,அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு,சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுக்கான  குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை இராணுவத்திற்கு எதிராக யுத்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து நாம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. எமது இராணுவத்தில் ஒருவர் இருவர் தவறிழைத்துள்ளனர் என்பதை நாமும் கூறியுள்ளோம்.

அதற்காக நானும் விளைவுகளை அனுபவித்துக்கொண்டுள்ளேன். மேற்கத்தேய நாடுகளுக்கு செல்ல எனக்கும் வீசா வழங்குவதில்லை. இராணுவ ஜெனரல்கள் 58 பேருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய இராணுவ தளபதி, பாதுகாப்பு செயலாளருக்கும் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தில் இருந்த ஒருவர் இருவர் செய்த தவறுக்காக நாமும் சேர்ந்து தண்டனை அனுபவித்துக்கொண்டுள்ளோம். ஜகத் ஜெயசூரிய, கபில எந்தவிதாரண ஆகியோர் உண்மையில் குற்றவாளிகளே.

இவர்கள் தவறிழைத்தனர், கண்டிப்பாக இவர்கள் குற்றவாளிகளே, இவர்களை தண்டிக்க வேண்டும். இவர்களை தண்டித்து ஏனைய இரண்டு இலட்சம் இராணு வீரர்களையும் தூய்மையாக்குங்கள்.

இதனை செய்வதன் மூலமாக வெளிவிவகார அமைச்சரும் நெருக்கடியில் இருந்து தப்பிக்கலாம். ஆகவே அதற்காகவேனும் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இராணுவம் குற்றமிழைத்தால் அவர்களை தண்டிப்பது தவறில்லை.

அதேபோல் முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொட மிகப்பெரிய குற்றமொன்றை செய்துள்ளார். பாடசாலை மாணவர்கள் 11 பேரை கடத்தி  அவர்களின் பெற்றோரிடம் கப்பம் பெற்று இறுதியாக கொலையும் செய்தார்.

இந்த 11 பேரில் சிங்கள மாணவர் ஒருவரும், முஸ்லிம் மாணவர் ஒருவரும் இருந்தார்கள். இவர்கள் அனைவரும் பாடசாலை மாணவர்கள். குறிப்பாக பெரேரா என்ற சிங்கள மாணவன் இங்கிலாந்து பல்கலைக்கழகத்திற்கு செல்ல இரண்டு நாட்களுக்கு முன்னர் கொலைசெய்யப்பட்டார்.

இவர்களை கொலைசெய்து கடலில் வீசியதற்கான சாட்சியங்களும் நிருபிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நபர்களை பாதுகாக்க வேண்டாம். நாம் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த வழக்குகளை மீண்டும் கையில் எடுப்போம். கரன்னாகொடவிற்கு எதிராக நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

அதுமட்டுமல்ல நான் பார்த்த மிகத் தகுதியான கடற்படை தளபதியாக சின்னையாவை கூறுவேன். விடுதலைப்புலிகளின் ஒன்பது படகுகளுக்கும் வெடிவைத்து தகர்த்தது அவர்தான்.

அதுமட்டுமல்ல கடற்படையின் பல தவறான செயற்பாடுகளுக்கு அவர் எதிராக செயற்பட்டார்.அதற்காகவே அவர் விரைவாக வெளியேற்றப்பட்டார்.

கப்பம் பெற்ற பல்வேறு செயற்பாடுகளுக்கு அவர் தடையாக இருந்த காரணத்தினால் தான் அவர் வீட்டுக்கு துரத்தியடிக்கப்பட்டார். ஆனால் கரன்னாகொட அவ்வாறு அல்ல.

மேலும், கைது செய்யப்பட்டு சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களை விடுவிக்க நாமும் இணக்கம் தெரிவிக்கின்றோம்.

அவ்வாறு விடுவிக்கும் வேளையில் என்னை கொலை செய்த மொரிஸ் என்ற நபரை முதலில் விடுதலை செய்யுங்கள் என்றே நானும் கேட்டுக்கொள்கின்றேன்.அரசாங்கத்திற்கு இதனை கோரிக்கையாக முன்வைக்கின்றேன் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04