(க.கிஷாந்தன்)

நாவலப்பிட்டியிலிருந்து கொட்டகலை வரை எரிபொருள் தாங்கி ஏற்றிச் சென்ற புகையிரதம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக இன்று காலை முதல் மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

கொட்டகலை புகையிரத நிலைய பகுதியில் உள்ள கொட்டகலை எரிபொருள் மத்திய நிலையத்திற்கு எரிபொருள் இறக்கும் பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புகையிரதத்தில் 3 எரிபொருள் தாங்கிகள் இருந்த வேளையில் ஒரு என்ஜீன் உட்பட ஒரு எரிபொருள் தாங்கியும் இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக புகையிரத அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன், புகையிரத பாதையும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதையை சீர் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.