மொழியால் ஒன்றுபட்ட தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் அரசியல் தளத்தில் ஒன்றுபடவேண்டும் : கனேடியவாழ் இலங்கை முஸ்லிம் மக்கள் மத்தியில் சுமந்திரன் உரை

Published By: Digital Desk 3

26 Nov, 2021 | 12:13 PM
image

(நா.தனுஜா)

இலங்கையில் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கின்ற, மொழியால் ஒன்றுபட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் ஒன்றிணைந்து செயலாற்றுவதன் ஊடாக மாத்திரமே பேரினவாதத்தின் அடக்குமுறைகளை வெற்றிகொள்ளமுடியும்.

தமிழ்பேசுபவர்கள் வாழ்கின்ற, 'தமிழ்' என்ற மொழி அடையாளத்தைக்கொண்ட பிரதேசத்தில்தான் நாங்கள் அதிகாரப்பகிர்வைக் கேட்கின்றோம். எனவே இவ்விடயத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைவதன் ஊடாக அதிகாரங்கள் பகிரப்படுவதற்கான வாய்ப்பு பன்மடங்காக உயரும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் இலங்கை முஸ்லிம் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்த்தேசியக்ககூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோருக்கும் கனடாவில் வசிக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் புதன்கிழமை கனடாவிலுள்ள அமானா நிகழ்வு மண்டபத்தில் நடைபெற்றது. 

அதில் கலந்துகொண்டு புலம்பெயர் இலங்கை முஸ்லிம்கள் முன்னிலையில் உரையாற்றுகையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

எம்மால் முன்னெடுக்கப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி, காத்தான்குடியை வந்தடைந்தபோது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் திரண்டுவந்து எம்மைச் சந்தித்தது. 

ஆனால் ஒரு அரசியல் தலைவர்கூட வரவில்லை. அதனைத்தொடர்ந்து ஓட்டமாவடி உள்ளடங்கலாக முஸ்லிம்கள் செறிந்துவாழும் அனைத்துப் பகுதிகளிலும் அதேபோன்ற வரவேற்பைப் பெற்றோம். கிண்ணியாவில் மாத்திரமே ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் துணிந்துவந்து எம்முடன் கலந்துரையாடினார்.

நாங்கள் இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுப்பதாகப் பாராட்டுகின்றார்கள். அந்தப் பாராட்டு எமக்கு மனநிறைவைத் தருகின்றது. அதேவேளை தமிழ்மக்களின் உரிமைகளுக்காக முஸ்லிம் குரல்கள் எப்போது எழும் என்று நாங்கள் ஏக்கத்தோடு காத்திருக்கின்றோம். 

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் ஒவ்வொரு கிராமங்களிலிருந்தும் எம்மை வந்து சந்தித்த முஸ்லிம் மக்கள் அவர்களது கிராமத்தின் எல்லையுடன் நின்றுவிட்டார்கள். 

அப்போது பேரணியில் மாத்திரமல்ல, அரசியல் பயணத்திலும் எம்மோடு இணைந்து கைகோர்த்து முழுத்தூரத்திற்கும் வரவேண்டும் என்று அவர்களிடம் கூறினேன். அப்போதுதான் எமது இரு சமூகங்களும் இலங்கையில் தலைநிமிர்ந்து வாழமுடியும்.

தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்திற்கென வௌ;வேறு அடையாளங்கள் இருக்கின்றன. முஸ்லிம் சமூகத்திற்கென தனித்த அடையாளங்கள் காணப்படுகின்றன என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். 

ஆனால் இலங்கையில் எண்ணிக்கை அடிப்படையில் சிறுபான்மையினராக இருக்கின்ற, மொழியினால் ஒன்றுபட்ட எமது இரு சமூகங்களும் ஒன்றிணைந்து செயற்படாவிட்டால் எமக்கு விடிவு கிடையாது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

அதேவேளை குறித்த பேரணியில் உரையாற்றியபோது தமிழர்களை 'சிறுபான்மையினர்' என்று கூறவேண்டாம் என்றும் 'மக்கள்' என்று கூறுமாறும் நான் வலியுறுத்தியிருந்தேன். அது தற்போது பூதாகரமான பிரச்சினையாக மாறியிருக்கின்றது. 

கடந்த வாரம் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்திருந்தோம். அதுபற்றி அவர்கள் தமது டுவிட்டர் பக்கத்தில் செய்த பதிவில் 'இலங்கையின் சிறுபான்மையின தமிழர்களின் உரிமைகளை உறுதிசெய்வதற்காக அமெரிக்கா துணைநிற்கும்' என்று குறிப்பிட்டிருந்தார்கள். 

எனவே தமிழர்களை அமெரிக்கா 'சிறுபான்மையினர்' என்றே கூறுகின்றது என்றும் அதனை நாம் எதிர்க்கவில்லை என்றும் சிலர் விமர்சித்தார்கள்.

இந்நிலையில் மீண்டும் திங்கட்கிழமை அமெரிக்க இராஜாங்கத்திணைக்கள அதிகாரிகளைச் சந்தித்தோம். அதுகுறித்து அவர்கள் செய்திருக்கும் டுவி;ட்டர் பதிவில் 'சிறுபான்மையினர்' என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. அந்த சுருக்கமான டுவிட்டர் பதிவில் எமக்கு நம்பிக்கையளிக்கக்கூடிய பல்வேறு விடயங்கள் உள்ளடங்கியிருந்தாலும், அவையனைத்தையும் விட்டுவிட்டு வெளியக அழுத்தங்களின் விளைவாகவே தற்போது 'மக்கள்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது.

அவற்றைக் கருத்திலெடுக்காவிடினும், இவ்வாறானவர்கள் மத்தியிலேயே நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். மக்களுக்கு நன்மையளிக்கின்ற நியாயமானதும் நீதியானதுமான விடயங்களைச் செய்வதில் நாம் ஒருபோதும் பின்நிற்கமாட்டோம். 

அதேவேளை இலங்கைவாழ் சிங்களவர்கள் உள்ளடங்கலாக எந்தவொரு இனக்குழுமத்திற்கும் தீமையை ஏற்படுத்துகின்ற விடயங்களை நாங்கள் செய்யமாட்டோம். நாம் பெரிதாக எதனையும் கேட்கவில்லை. இலங்கையில் சமபிரஜைகளாக வாழ்வதற்கான உரிமையையே கோருகின்றோம்.

சமத்துவமான பிரஜைகளாக வாழ்வதென்பது 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கைக்கு அமைவானதல்ல. மாறாக 'இலங்கையர்கள்' என்ற பொதுவான அடையாளம் அனைவருக்கும் இருக்கலாம். ஆனால் அதற்குள்ளே இருக்கக்கூடிய தனித்துவமான, பிரத்யேகமான அடையாளங்கள் உறுதிசெய்யப்படவேண்டும். அதனூடாகவே இலங்கையர் என்ற அடையாளம் வலுவடையும்.

இவ்வாறானதொரு பின்னணியில் அடுத்த தேர்தலிலே இஸ்லாமிய சகோதரர்கள் எமக்கு வாக்களிப்பார்கள் என்று நான் நம்புகின்றேன். மக்கள் மத்தியிலே அவ்வாறானதொரு நிலை உருவாகிக்கொண்டிருக்கின்றது. 

ஆயுதப்போராட்டத்திற்கு முன்னரான காலப்பகுதியில் தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான உறவு மிகநெருக்கமானதாகக் காணப்பட்டது. இருப்பினும் ஆயுதப்போராட்டத்தினால் இரு சமூகங்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்பட்டன. 

அப்போராட்டம் முடிவடைந்து தற்போது 12 வருடங்கள் கடந்துள்ளன. தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான நல்லுறவை முன்னரைப்போன்று மாற்றியமைப்பதற்கு எமக்கு பன்னிரு வருடங்கள் தேவையா? மொழியால் ஒன்றுபடுவதென்பது மிகமுக்கியமானதாகும். மதம் சார்ந்த அடையாளங்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டவையாகும். 

ஆனால் மொழிதான் எம்மை ஒன்றுபடுத்தியிருக்கின்றது. தமிழ்பேசுபவர்கள் வாழ்கின்ற, 'தமிழ்' என்ற அடையாளத்தைக்கொண்ட பிரதேசத்தில்தான் நாங்கள் அதிகாரப்பகிர்வைக் கேட்கின்றோம். எனவே தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து இதனை முன்னெடுக்கும் பட்சத்தில், அதிகாரங்கள் பகிரப்படுவதற்கான வாய்ப்பு பன்மடங்காக உயரும்.

இலங்கையிலே நாங்கள் ஒன்றாக வாழ்வதற்கான சவாலாக இருக்கின்ற ஒரேயொரு விடயம் பேரினவாதமாகும். ஆகவே அதனை எதிர்கொள்வதற்கு நாங்கள் நாளாந்தம் வசிக்கின்ற பகுதியிலே எமக்கென தீர்மானங்களை மேற்கொள்கின்ற, நிர்வகிக்கின்ற அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும். 

அவ்வாறு வழங்கப்படும் அதிகாரங்கள் உச்சபட்சமானவையாக இருக்கவேணடும் என்ற இலக்கை முன்னிறுத்தி தமிழ், முஸ்லிம் சமூகங்கள் செயற்படுமானால், அது வெகுவிரைவில் எம்மை வந்தடையும். 

இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்படும் மிகமோசமான அடக்குமுறையின் விளைவாக தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலேயே உருவாகியிருக்கக்கூடிய ஒற்றுமை அரசியல் தளத்தை நோக்கி விரிவடையவேண்டும் என்று வலியுறுத்தினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13