‘பைரவா’ படத்தில் என்னுடைய காட்சிகளை கட் செய்தால் தற்கொலை செய்துகொள்வேன் என்று எடிட்டருக்கு காமெடி நடிகர் சதீஷ் மிரட்டல் விடுத்துள்ளார். 

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘றெக்க’ படத்தில் காமெடி நடிகர் சதீஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுமட்டுமில்லாமல் விஜய் நடிக்கும் ‘பைரவா’ படத்திலும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ‘றெக்க’ படத்தின் எடிட்டரான பிரவீன் கே.எல்., படத்தின் நீளத்தை குறைப்பதற்காக சதீஷ் நடித்த இரண்டு காமெடி காட்சிகளை கட் பண்ணிவிட்டாராம்.

இதனால் கோபமடைந்த சதீஷ், ‘றெக்க’ படத்தின் ஆடியோ வெளியீட்டின்போது எடிட்டரை பார்த்து நகைச்சுவையாக மிரட்டல் ஒன்றை விடுத்தார். அப்போது அவர் கூறும்போது, ‘றெக்க’ படத்தில் நான் நடித்த இரண்டு காட்சியை எடிட்டர் பிரவீன் கட் செய்துவிட்டார். அடுத்து நான் நடிக்கும் ‘பைரவா’ படத்திற்கும் அவர்தான் எடிட்டர்.

அந்த படத்தில் நான் நடித்த காட்சிகளை கட் செய்தால், அவர் வீட்டு வாசலில் சென்று தற்கொலை செய்துகொள்வேன் என்று நகைச்சுவையுடன் மிரட்டினார். இதனால், ஆடியோ வெளியீடு விழா கொஞ்சம் கலகலப்புடன் சென்றது. பரதன் இயக்கத்தில் உருவாகும் ‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.