அரசாங்கம் வகுத்துள்ள புதிய திட்டம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

Published By: Digital Desk 2

20 Nov, 2021 | 07:43 PM
image

நா.தனுஜா

நாட்டின் தேசிய அடையாள அட்டை விநியோகம் தொடர்பான தரவுக்கட்டமைப்பு மற்றும் நீதிமன்றம்சார் தரவுக்கட்டமைப்பு ஆகியவற்றை வடிவமைக்கும் பொறுப்பை முறையே இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிடம் வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக அறியமுடிகின்றது. 

இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் எமது நாட்டுப்பிரஜைகளின் தகவல்கள் வெளிநாடுகளுக்குக் கசிவதுடன் மாத்திரமன்றி பாரியளவிலான நிதிமோசடியில் ஈடுபடுவதற்கான சாத்தியப்பாடுகளும் உருவாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண சுட்டிக்காட்டியுள்ளார்.

 

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

 

நாடளாவிய ரீதியில் உரத்திற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினால் அனைத்து வகையான பயிர்ச்செய்கை நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 

இருப்பினும் அரசாங்கம் சமர்ப்பித்துள்ள வரவு, செலவுத்திட்டத்தின் ஊடாக இப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படவில்லை. அதேபோன்று எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் விவகாரமும் தற்போது மறக்கடிக்கப்பட்டிருப்பதுடன் அதற்காகப் பெறப்பட்ட மற்றும் பெறப்படவேண்டிய நட்டஈடு தொடர்பான விபரங்களும் உரியவாறு பகிரங்கப்படுத்தப்படவில்லை. 

அடுத்ததாக பல்பொருள் அங்காடிகளில் மதுபானச்சாலைகளை ஸ்தாபிப்பதற்கான அனுமதிப்பத்திரம் பல்வேறு தரப்பினருக்கும் வழங்கப்பட்டுவருவதுடன் போயா தினங்களில்கூட மதுபானம் விநியோகிக்கப்படுகின்றது. இவற்றை நாமும் மறந்துவிட்டோம் என்றோ அல்லது அமைதியாக இருப்போம் என்றோ அரசாங்கம் நினைக்கக்கூடாது.

மேலும் தேசிய அடையாள அட்டை விநியோகம் தொடர்பான தரவுக்கட்டமைப்பைத் தயாரிக்கும் பணியை இந்திய நிறுவனமொன்றிடம் வழங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இது மிகவும் பாரதூரமான பிரச்சினையாகும். இதன் விளைவாக எமது நாட்டுப்பிரஜைகளின் தகவல்கள் வேறு நாடுகளுக்குக் கசியக்கூடும். அதுமாத்திரமன்றி எமது நாட்டு நீதிமன்றம்சார் தரவுக்கட்டமைப்பைத் தயாரிக்கும் பொறுப்பை மலேசிய நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கான தயார்ப்படுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அதனை முன்னிறுத்தி அடுத்த வருடத்திற்கான வரவு, செலவுத்திட்டத்தில் நிதியொதுக்கப்பட்டுள்ளது. தரவுக்கட்டமைப்புக்களை மிகவும் சிறந்த முறையில் வடிவமைக்கக்கூடியவர்கள் எமது நாட்டிலேயே இருக்கும்போது அந்தப் பொறுப்பை வெளிநாடுகளிடம் கையளிக்கவேண்டியதன் அவசியம் என்ன? அவ்வாறு வழங்குவதன் ஊடாகப் பெருந்தொகையிலான நிதிமோசடி இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உயர்வாகக் காணப்படுகின்றன.

அடுத்ததாக கொவிட் - 19 வைரஸ் பரவலால் குறுகியகால, நடுத்தரகால மற்றும் நீண்டகால அடிப்படையில் ஏற்பட்ட பாதிப்புக்கள், இழப்புக்கள் தொடர்பில் விரிவான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுவதுடன் அதன்படி பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணத்தை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். 

அதுமாத்திரமன்றி வைரஸ் பரவல் நெருக்கடியினால் தொழில்வாய்ப்புக்களை இழந்தவர்களுக்கு மீண்டும் புதிய தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும். ஆனால் அரசாங்கத்தின் வரவு, செலவுத்திட்டத்தில் அதற்கான செயற்திட்டங்கள் எவையும் உள்ளடக்கப்படவில்லை.

 அதேபோன்று எமது நாட்டிற்கு அந்நியச்செலாவணியை ஈட்டித்தருவதில் பெருமளவிற்குப் பங்களிப்புச்செய்கின்ற பெண்களுக்காக வரவு, செலவுத்திட்டத்தில் மிகச்சொற்பளவு நிதியே ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இவைதொடர்பில் அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தவேண்டியது அவசியமாகும்.

மறுபுறம் ஐக்கிய மக்கள் சக்தியினால் கடந்த செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் மக்கள் போராட்டத்தைக்கண்டு அரசாங்கம் அச்சமடைந்திருக்கின்றது.

 பொலிஸாரைப் பயன்படுத்தி அப்போராட்டத்தைத் தடுத்துநிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் கடந்த வாரத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. 

அதன்படி போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பலபாகங்களிலிருந்தும் கொழும்பிற்கு வருகைதந்த மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்திய அனைத்து பொலிஸ் அதிகாரிகளின் விபரங்களும் எம்மிடமுள்ளன. 

அவர்கள்மீது வெகுவிரைவில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குகள் தாக்கல்செய்யப்படும். அதுமாத்திரமன்றி ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு ஏற்பட்டிருப்பதாகக் கூறியவர்களும் அண்மைய போராட்டத்தினால் அச்சமடைந்திருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டார். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18