ஜனநாயகப்போராட்டத்தை முறியடிக்க முயன்ற பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு விரைவில் நடவடிக்கை - ஐக்கிய மக்கள் சக்தி

Published By: Digital Desk 3

16 Nov, 2021 | 04:02 PM
image

(நா.தனுஜா)

இலங்கையின் வரலாற்றில் முதற்தடவையாக அரசியல் கட்சியொன்றினால் நடாத்தப்படும் போராட்டத்திற்கு எதிராகத் தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு சுமார் 70 பொலிஸ்நிலையங்கள் நீதிமன்றத்தில் கோரியிருக்கின்றன. 

மக்களின் ஜனநாயகப்போராட்டங்களை அடக்குவதற்கும் அவர்களது கருத்துச்சுதந்திரத்தை முடக்குவதற்குமான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டமை கண்டனத்திற்குரியதாகும்.

அதுமாத்திரமன்றி அம்முயற்சிகளுக்கு உறுதுணையாக செயற்பட்ட பொலிஸ்மா அதிபருக்கும் சட்டங்களைத் தமக்கேற்றவாறு பயன்படுத்திக்கொள்வதற்கு முற்பட்டோருக்கும் எதிராக விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதுடன் இதனை சர்வதேச மட்டத்திற்கும் கொண்டுசெல்வோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.

அதேவேளை அரசாங்கத்திற்கு எதிரான இந்தப் போராட்டம் முடிவல்ல. வெறும் ஆரம்பம் மாத்திரமே. எதிர்வருங்காலங்களில் நாம் முன்னெடுக்கவுள்ள போராட்டங்கள் அனைத்தையும் அரசாங்கத்தினால் தடுக்கமுடியாது. 

அதுமாத்திரமன்றி இப்போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு நாடளாவிய ரீதியிலிருந்து மக்கள் திரண்டு வருகின்றார்கள் என்பதைப் புரிந்துகொண்ட அரசாங்கம், நாட்டின் அனைத்துப்பாகங்களிலும் தடைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுவே எமக்குக்கிடைத்த வெற்றியாகும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான மாபெரும் மக்கள் போராட்டம் செவ்வாய்கிழமை (16) கொழும்பில் நடைபெற்ற நிலையில், அந்தப் போராட்டத்தை நிறுத்துவதற்கும் நாட்டின் ஏனைய பாகங்களிலிருந்து மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்வதைத் தடுப்பதற்குமென பொலிஸார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் மக்களின் கருத்துச்சுதந்திரத்தையும் ஜனநாயக ரீதியான போராட்டத்தையும் முடக்குவதற்கு முயற்சிப்பதை அரசாங்கம் உடனடியாக நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, எஸ்.எம்.மரிக்கார், முஜிபுர் ரகுமான் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஆகியோர் இணைந்து கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பொன்றை செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் எதிர்க்கட்சிக்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடத்தியிருந்தனர். அச்சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு கூட்டாகத் தெரிவித்தனர். 

அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சி முக்கியஸ்தர்களால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் வருமாறு,

ரஞ்சித் மத்தும பண்டார

இலங்கையின் வரலாற்றில் முதற்தடவையாக அரசியல் கட்சியொன்றினால் நடாத்தப்படும் போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தின் தடையுத்தரவைப் பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கை சுமார் 70 பொலிஸ் நிலையங்கள் ஊடாக முன்வைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் நீதிமன்றங்கள் சுயாதீனமாக செயற்பட்டதன் காரணமாக பொலிஸாரின் அந்த முயற்சி தோல்வியடைந்திருக்கின்றது. 

இவ்வாறானதொரு பின்னணியில் நேற்று (நேற்று முன்தினம்) இரவு பொலிஸ்மா அதிபரினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பிரகாரம், கொழும்பில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வருகைதருகின்ற மக்களைத் தடுத்துநிறுத்துவதற்கும் அவர்களை அசௌகரியங்களுக்கு உட்படுத்துவதற்குமான நடவடிக்கைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக அறியமுடிகின்றது. 

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை எந்தவொரு அரசியல் கட்சிக்கும் இருக்கின்றது. 

அவ்வாறிருக்கையில் பொலிஸாரைப் பயன்படுத்தி அத்தகைய போராட்டத்தைத் தடுத்துநிறுவதற்கு முற்படும் அதேவேளை, அதில் கலந்துகொள்வதற்கு வருகைதரும் கட்சியின் ஆதரவாளர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதென்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும். எனவே அரசாங்கமும் பொலிஸாரும் இத்தகைய முறையற்ற செயற்பாடுகளை உடனடியாக நிறுத்திக்கொள்ளவேண்டும். அவ்வாறில்லாவிடின் அதற்கு எதிராக நீதிமன்றத்தைநாடி அங்கு பதில்கூறவேண்டிய நிலையேற்படும்.

எமது போராட்டத்தைத் தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றது. அதன் ஓரங்கமாக பொலிஸாரைத் தமது கைப்பாவைகளாக மாற்றிக்கொண்டிருக்கின்றது. இருப்பினும் போராட்டத்திற்கு எதிரான தடையுத்தரவைப் பிறப்பிப்பதற்கு நீதிமன்றங்கள் மறுத்திருக்கின்றன. 

நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் மக்களை ஏற்றிவரும் பஸ்வண்டிகளை நிறுத்துவதற்கும் வீதிமறியல்கள் மூலம் தடையேற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்நாட்டுமக்களின் கருத்துச்சுதந்திரம், எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் உள்ளிட்டவை பொலிஸ்மா அதிபரினால் மீறப்பட்டிருக்கின்றன. 

எவ்வித அடிப்படைகளுமின்றி எமது போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு வருகைதருகின்ற பஸ்வண்டிகளைத் திருப்பியனுப்புமாறு பொலிஸ்மா அதிபரினால் ஏனைய பொலிஸாருக்குப் பணிப்புரை வழங்கப்பட்டிருக்கின்றது. 

எனவே பொலிஸ்மா அதிபருக்கும் சட்டங்களைத் தமக்கேற்றவாறு அமுல்படுத்திக்கொள்வோருக்கும் எதிராக உரிய சட்டநடவடிக்கை எடுக்கும் அதேவேளை, நாம் இதனை சர்வதேச மட்டம் வரையில் கொண்டுசெல்வோம் என்பதையும் கூறிக்கொள்ளவிரும்புகின்றோம்.

ஹரீன் பெர்னாண்டோ

அரசாங்கத்திற்கு எதிரான இந்த மாபெரும் போராட்டத்தைத் தடுத்துநிறுத்துவதற்கு எத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவையனைத்தையும் தகர்த்தெறிந்து, ஏதேனும் வழிகளில் கொழும்பைநோக்கிப் படையெடுத்துவருமாறு நாட்டுமக்களுக்கு அழைப்புவிடுக்கின்றோம். 

அதுமாத்திரமன்றி கொழும்புவாழ் மக்கள் இன்றையதினம் மாத்திரம் ஒருவேளையை ஒதுக்கி, இப்போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்வரவேண்டும். ஏனெனில் நாட்டுமக்களுக்கு எதிர்கொண்டிருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு எதிராக, அவர்களது உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கிலேயே நாம் இந்தப் போராட்டத்தை நடத்துகின்றோம் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

எஸ்.எம்.மரிக்கார்

மக்களின் போராட்டத்தில் இடையூறுகளை ஏற்படுத்தி, அதனைத் தடுத்துநிறுத்துவதற்கு முற்படும் அரசாங்கத்திடம் ஒன்றைக்கூறிக்கொள்ள விரும்புகின்றோம். இந்தப் போராட்டம் முடிவல்ல. மாறாக இது அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எழுச்சியின் ஆரம்பமாகும். நாம் எதிர்வருங்காலங்களில் மேலும் பல போராட்டங்களை முன்னெடுப்போம். அவையனைத்தையும் அரசாங்கத்தால் தடுத்துநிறுத்த முடியாது. 

நாட்டின் பொருளாதாரம் முழுமையாகச் சீர்குலைவதற்கு வழிவகுத்திருக்கும் தற்போதைய அரசாங்கத்தை விரட்டும் வரையில் எமது போராட்டங்கள் முடிவிற்குக்கொண்டுவரப்படமாட்டாது.

முஜிபுர் ரகுமான்

தற்போது சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகம் வெட்கமின்றி அரசாங்கத்திற்குச் சார்பாக செயற்பட்டுவருகின்றமையினை அவதானிக்கமுடிகின்றது. கடந்த காலங்களில் பொதுஜன பெரமுனவின் சம்மேளனம் உள்ளடங்கலாக பல்வேறு ஒன்றுகூடல்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கியபோது சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கண்களுக்குப் புலப்படாத கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல், இப்போது நாட்டுமக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மாபெரும் மக்கள் போராட்டத்தை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முற்படுகின்றபோது மாத்திரம் பூதாகரமாகத் தெரிகின்றது.

ராஜித சேனாரத்ன

அண்மைக்காலத்தில் அத்தியாவசியப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக தினமும் நீண்டவரிசைகளில் காத்திருக்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. அதற்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற போராட்டத்திற்கு மக்கள் வருகைதருவதை தடுப்பதற்கு நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் தடையேற்படுத்தப்பட்டுள்ளன. 

அவ்வாறெனின் இப்போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாட்டின் அனைத்துப்பாகங்களிலிருந்தும் மக்கள் வருகைதருகின்றார்கள் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருக்கின்றது என்பது தெளிவாகின்றது. இதுவே எமது முதல் வெற்றியாகும். 

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17