(சசி)

ஏறாவூர் -இரட்டைக்கொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள  சந்தேக நபர்கள் 6 பேரும்  எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில்  வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றில் இன்று ஆஜர் செய்யப்பட்டதையடுத்து நீதிபதி எம்.ஐ.எம். றிஸ்வி அவர்களட 6 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

கொலைக்கான ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து விஞ்ஞான ரீதியிலான உறுதிப்பாட்டிற்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அவற்றை அனுப்புமாறு நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

24 வயதுடைய முஹம்மது பாஹிர், வசம்பு என்றழைக்கப்படும் 28 வயதுடைய உசனார் முஹம்மது தில்ஷான், 23 வயதுடைய கலீலுர் ரகுமான் முஹம்மது றாசிம், 23 வயதுடைய புஹாரி முஹம்மது அஸ்ஹர், 30 வயதுடைய இஸ்மாயில் சப்ரின் மற்றும் 50 வயதுடைய அபூபக்கர் முகம்மது பிலால் ஆகியோருக்கே இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது,

ஏறாவூர்- முகாந்திரம் வீதி முதலாம் ஒழுங்கையிலுள்ள தனது வீட்டில் படுத்துறங்கிய 56 வயதான என்.எம். சித்தி உசைரா மற்றும் அவரது திருமணமான மகளான 32 வயதுடைய ஜெனீரா பாணு மாஹிர் ஆகிய இருவரும், இம் மாதம் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அடித்துக் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தமை தொடர்பிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.