யாழ்ப்பாணம், நீர்வேலி பகுதியில் தாயொருவர் சிறுமி ஒருவரை மூர்க்கத்தனமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த தாயாரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நீர்வேலி பகுதியில் வீடொன்றில் தாய் ஒருவர் சிறுமியை மூர்க்கத் தனமாக தாக்கும் காணொளி பேஸ்புக் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. 

 இதையடுத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை பிரிவினருக்கும் , கோப்பாய் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது. 

 

அதனை தொடர்ந்து சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் பிரகாரம் தாக்குதல் மேற்கொண்ட தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

தற்போது தாக்குதலுக்கு இலக்கான சிறுமி மற்றும் சிறுமியின் சகோதரர்கள் உட்பட மூவர்  பொலிஸ் பாதுகாப்பிலுள்ளனர்.

 

இதேவேளை, யாழ்ப்பாணம், நீர்வேலி பகுதியில் தாயொருவர் ஆறுவயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை மிக மூர்க்கத்தனமாக தாக்கும் காணொளி நேற்று சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதவாது , 

நீர்வேலி பகுதியில் உள்ள தோட்டக் காணி ஒன்றில் வாழும் ஒரு குடும்பத்தை சேர்த்த தாயொருவர் ஆறு வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை கத்தியினா லும் கைகளினாலும் மிக மோசமாக தாக்கும் காட்சி பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது.

இதனை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகிலுள்ள நபரொருவர் தரவேற்றியிருந்தார்.

குறித்த நபர் தனது பேஸ்புக்கில் குறித்த காணொளியை தரவேற்றியதுடன் அது தொடர்பான விளக்கத்தையும் குறிப்பிட்டிருந்தார்.

அவர் பேஸ்புக் வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்ததாவது,

“ இன்று காலை நேரம் 6.30 அண்மித்தது நான் குளியலறையில் குளித்துக்கொண்டிருந்தேன். அயலில் உள்ள தோட்டக்கிணற்றடியில் பெண் ஒருவர் மிக ஆக்ரோசமாக யாரையோ திட்டித்தீர்க்கும் சத்தமும், சிறுமியின் அழுகுரலும் கேட்டது. அயல் வீட்டில் குடியிருக்கும் பெண் தனது பிள்ளையை அடிக்கடி இவ்வாறு திட்டுவதை அவதானித்திருக்கிறேன். 

ஆகையால் இது வழமையான ஒன்று என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டு குளித்துக்கொண்டிருந்தேன். ஆனாலும் பெண்ணின் அதட்டும் சத்தமும் அதனைத்தொடர்ந்து பலமாக தாக்கும் சத்தமும் சிறுமியின் அலறல் சத்தமும் குளியலறையிலிருந்த என்னை வெளியே இழுத்து வந்தது. வெளியில் வந்த நான் சத்தம் கேட்கும் திசையை அவதானித்தேன்.

தடி ஒன்றினால் ஆறு வயது மதிக்கத்தக்க அந்த சிறுமியை அவளது தாய் பலமாக தாக்குவதைப்பார்த்து என்ன செய்வது என ஒரு கணம் திகைத்து விட்டேன். ஓடிச் சென்று அந்தப் பெண்ணிடம் இருந்த தடியை பறித்தெடுக்க எண்ணினாலும் அந்தப் பெண் பற்றியும் அவரது கணவர் பற்றியும் ஏற்கனவே நான் அறிந்த சம்பவங்கள் என்னை தடுத்து நின்றன. 

இருந்தும் சிறுமி தொடர்ந்தும் தாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் ஒரு முடிவெடுத்தேன். இந்த சிறுமி தாக்கப்படும் கடைசி நாள் இன்றாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதிக்கொண்டு எனது ஒளிப்படக்கருவியின் ஊடாக நடப்பவை அனைத்தையும் ஒளிப்பதிவு செய்தேன்.

அவ்வாறு ஒளிப்பதிவு செய்யப்பட்ட இந்தக் காணொளியை தயவு செய்து எல்லோரும் பார்க்கவேண்டும் என்பதற்காகவும் அந்த ராட்சசியிடமிருந்து அந்த சிறுமியை காப்பாற்றுமாறும் எல்லோரையும் வேண்டுகிறேன்.

இந்த ஒளிப்பதிவைமேற்கொண்டதன் பின்னர் இந்தப் பெண்பற்றி அயலில் விசாரணை செய்த போது சிறுமியை தாக்கிய குறித்த பெண் சிறுமியின் தந்தையை இரண்டாம் தாரமாக திருமணம் செய்திருப்பதாகவும் சிறுமியின் தாய் இறந்து விட்டார் என்றும் சிறுமிக்கு இந்தப்பெண் சிறியதாய் என்றும் அறிய முடிந்தது.

இந்தக் காணொளியில் தயவு செய்து அவதானியுங்கள் மிகக்கூர்மையான கத்தியால் சிறுமி பலமாகத் தாக்கப்படுகிறாள். எனவே குழந்தை நலக்காப்பகங்கள், சிறுவர் நன்நடத்தை அதிகாரிகள், சிறுவர்கள் மீது அன்பு செலுத்துவோர் தயவு செய்து இந்தப் பெண்ணிடமிருந்து சிறுமியை காப்பாற்றும் அதேநேரம், குறித்த பெண்ணை சட்டத்தின் முன்னிறுத்தி தண்டணை வழங்க ஏற்பாடுகளை செய்யுமாறும் வேண்டுகிறேன். மேலதிக தகவல்களை எதிர் பார்ப்பவர்கள் உள் பெட்டியில் தொடர்பு கொள்ளவும்” என  குறித்த காணொளியை தரவேற்றியிருந்த நபர் தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்தே குறித்த தாய் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.