புதிய அரசியலமைப்பும் அரசியல் தீர்வும் 

Published By: MD.Lucias

22 Sep, 2016 | 04:29 PM
image

புதிய அரசியலமைப்பின் பூர்வாங்க வரைவு (Draft Constitution)  எதிர்வரும் நவம்பர் மாதம் வரவு–செலவுத்திட்டம் மீதான  விவாதம்   ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக  பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அரசாங்கத்தலைவர்கள்  கூறிக்கொண்டிருக்கிறார்கள். அடுத்த வருடத்துக்கான அரசாங்கத்தின் வரவு–செலவுத் திட்டம் நவம்பர் 10 ஆம் திகதி  சமர்ப்பிக்கப்படும் என்றும்  தொடர்ந்து ஒருமாத காலத்துக்கு  அதன் மீதான  விவாதம்  நடைபெறும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறானால்,  அரசியலமைப்பு வரைவு இன்னமும் 6 வார  காலத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டாக வேண்டும். 

இவ்வருட  ஆரம்பத்தில் பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில்  விக்கிரமசிங்க சமர்ப்பித்த புதிய அரசியலமைப்பு   தொடர்பான பிரேரணையின்  முகப்பு வாசகத்தில் (Preface)  மூன்று முக்கிய  நோக்கங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி  ஆட்சி முறையை   ஒழித்தல், புதிய தேர்தல் முறையை  அறிமுகப்படுத்தல் மற்றும் தேசியப் பிரச்சினைக்கு அரசியலமைப்பு  வழிமுறையின்  மூலமான  தீர்வைக் காண்பது  என்பனவே அந்த நோக்கங்களாகும். ஆனால்,  கூட்டு எதிரணியினர்  என்று தங்களைக் கூறிக்கொள்ளும் முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த  ராஜபக்ஷவுக்கு  விசுவாசமான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்  பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதன்  பிரகாரம்  அந்த மூன்று  நோக்கங்களையும் குறிப்பிட்டுக்காட்டிய பந்தி முகப்பு வாசகத்தில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னரே பிரேரணை  சபையில்  நிறைவேற்றப்பட்டது.  ராஜபக்ஷவுக்கு விசுவாசமானவர்கள் மாத்திரமல்ல, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு  விசுவாசமாக இருக்கும்  ஸ்ரீலங்கா  சுதந்திரக் கட்சியின் மூத்த பாராளுமன்ற உறுப்பினர்களில் பலரும் (அமைச்சர்கள் உட்பட)  அந்த பந்தியை அகற்ற வேண்டுமென்ற  கோரிக்கைக்கு ஆதரவாகவே செயற்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மூன்று  நோக்கங்களிலும் நிறைவேற்று  அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை  ஒழிப்பதும் புதிய  தேர்தல்  முறையை  அறிமுகப்படுத்துவதும் கூட்டு  எதிரணியினரின்  ஆட்சேபனைக்குரியவையாக  இருக்க  முடியாது.  தேசியப்பிரச்சினைக்கு அரசியலமைப்பு  வழிமுறையின் மூலமான தீர்வைக்  காண்பதை புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான நோக்கங்களில்  ஒன்றாக பிரேரணையில் கூறப்படுவதையே  அவர்கள் விரும்பவில்லை என்பது தெளிவானது.  அதன் காரணத்தினாலேயே  அந்தப் பந்தியை அகற்றவேண்டுமென்பதில்  அவர்கள்  பிடிவாதமாக  இருந்தார்கள். அவர்களின் ஆதரவையும்  பெறவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தால் அரசாங்கமும் அதற்கு  இணங்கிக் கொண்டது. 

புதிய அரசியலமைப்பின்  பல்வேறு  அம்சங்கள் குறித்தும் ஆராய்ந்து அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கென்று அரசியலமைப்புச் சபையினால் (Constitutional assembly)  நியமிக்கப்பட்ட 6 பாராளுமன்ற  உபகுழுக்களில் ஐந்து குழுக்கள் அவற்றின் பணிகளைப் பூர்த்தி  செய்துவிட்டதாக பொதுமக்கள் பிரதிநிதித்துவக் குழுவின் (Public Representations Committee )  தலைவரான  மூத்த சட்டவாதி லால் விஜேநாயக்க சில தினங்களுக்கு  முன்னர் தெரிவித்திருந்தார்.  அரசியலமைப்பு  உருவாக்கத்துடன் தொடர்புடைய  விவகாரங்கள் குறித்து பொதுமக்களுடன் கலந்துரையாடுவதற்கும் அவர்கள் மத்தியில் இருந்து யோசனைகளைப் பெறுவதற்குமென்று  19 உறுப்பினர்களைக் கொண்ட பொதுமக்கள் பிரதிநிதித்துவக் குழுவை பிரதமர் விக்கிரமசிங்க நியமித்திருந்தார். சுமார் 6 மாதங்களாக பொதுமக்களுடனான  கலந்துரையாடல்களுக்குப் பிறகு  இக்குழு 200க்கும்  அதிகமான பக்கங்களைக் கொண்ட அறிக்கையை பிரதமரிடம் கையளித்தது.  அரசியலமைப்பு வரையப்படும் போது மக்கள் தரப்பில்  இருந்து  முன்வைக்கப்பட்ட யோசனைகளும்  அபிப்பிராயங்களும்  கருத்திலெடுக்கப்படுமென்று லால் விஜேநாயக்க கூறியிருக்கிறார். 

இலங்கையின் மூன்றாவது  குடியரசு  அரசியலமைப்பை வரைவதற்கான செயன்முறைகளே  தற்போது முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இலங்கையை ஒரு குடியரசாகப் பிரகடனப்படுத்திய 1972 அரசியலமைப்பும் பிறகு 6 வருடங்கள் கழித்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி  ஆட்சிமுறையை அறிமுகப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட 1978 அரசியலமைப்பும் வரையப்படுவதற்கு முன்னதாக பொதுமக்களின் கருத்துக்களை அறிவதற்கான எந்தவொரு  செயன்முறையும்  முன்னெடுக்கப்பட்டதில்லை. சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி  அரசாங்கமும் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான  ஐக்கிய தேசியக்கட்சி   அரசாங்கமும் அவற்றின் அரசியல் நிலைப்பாடுகளுக்கு இசைவான  முறையில்  அந்தந்த அரசியலமைப்புக்களை உருவாக்கிக் கொண்டன.  அந்த  வகையில் நோக்கும் போது தற்போதைய தேசிய ஐக்கிய அரசாங்கம் அரசியலமைப்பு  உருவாக்கத்துடன் சம்பந்தப்பட்ட விவகாரங்கள்  தொடர்பில் மக்களுடன்  கலந்தாலோசனை நடத்துவதற்கு முன்னெடுத்த  செயற்பாடுகள் ஒப்பீட்டளவில் ஆரோக்கியமானவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால்,  மக்கள் தரப்பில் இருந்து  முன்வைக்கப்பட்டிருக்கக்கூடிய யோசனைகள் எந்த அளவிற்கு புதிய அரசியலமைப்பை வரைபவர்களினால் அக்கறையுடன்  பரிசீலனைக்கெடுக்கப்பட்டு வரைவில்  உள்வாங்கப்படும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

இலங்கையின்  பிரதான நெருக்கடி தேசிய இனப்பிரச்சினையாகும். அந்தப்பிரச்சினைக்கு பயனுறுதியுடைய  அரசியல் தீர்வொன்றுக்கான ஏற்பாடுகளை உள்ளடக்கியிராத எந்தவொரு அரசியலமைப்பும் அர்த்தமற்றதாகவே போகும். அந்த வகையில் நோக்குகையில் இன்னமும் 6 வாரங்களுக்குள்  அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படவிருப்பதாகக் கூறப்படும் அரசியலமைப்பு  வரைவில்  அரசியல் தீர்வு தொடர்பில் எத்தகைய  ஏற்பாடுகள் உள்ளடக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நாட்டு மக்கள் மத்தியில் குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் மத்தியில் காணப்படுகிறது. அரசாங்கத்தலைவர்கள் ஒரு புறத்தில் அரசியல்  தீர்வுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் பொதுப்படையாகக் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்களே தவிர,  பிரத்தியேகமான எந்த யோசனையும் அவர்களிடம் இருந்து வெளிப்படவில்லை. மறுபுறத்திலே, அரசியல் தீர்வு தொடர்பில் உத்தேச அரசியலமைப்பு வரைவில் அரசாங்கம் எத்தகைய ஏற்பாடுகளை  உள்ளடக்கும்  என்பதைப் பொறுத்திருந்து பார்த்து அதன் அடிப்படையில்  அரசாங்கத்துக்கு  எதிராக  பெரும்பான்மையின மக்கள் மத்தியில் பிரசாரங்களை  முடுக்கிவிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவின் முகாமும்  கடும்போக்கு சிங்கள பெளத்த  தேசியவாத  சக்திகளும்  காத்துக்கொண்டிருக்கின்றன. அது மாத்திரமல்ல, நாட்டுப்  பிரிவினையைத் தூண்டிவிடக் கூடியதான ஏற்பாடுகளை அரசாங்கம் புதிய அரசியலமைப்பு வரைவில் உள்ளடக்கப்போவதாக ஏற்கனவே  பெரும்பான்மையின மக்களுக்கு பூச்சாண்டி காட்டும் காரியங்களிலும் அச்சக்திகள் இறங்கியிருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. 

தமிழ் மக்களைப் பொறுத்தவரை,  அவர்கள்  தரப்பில் அரசியல் கட்சிகளினாலும் சிவில் சமூக அமைப்புக்களினாலும் முன்வைக்கப்பட்டிருக்கும் யோசனைகள் பொதுவில்  அரசியல் தீர்வு சமஷ்டி அடிப்படையிலானதாக அமையவேண்டும் என்றே வலியுறுத்துகின்றன. ஆனால், தென்னிலங்கையில் பிரதான அரசியல்   கட்சிகளும் பொதுவில் சிங்கள அரசியல் சமுதாயமும் சமஷ்டி  என்ற பேச்சுக்கே  இடமில்லை என்பதை திட்டவட்டமாகக் கூறிக்கொண்டிருக்கின்றன. இத்தகையதொரு பின்புலத்திலே, தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய  அரசியல்  தீர்வொன்றுக்கான  ஏற்பாடுகளில்  அரசாங்கம் எந்தளவுக்கு  கவனத்தைச் செலுத்தும் என்பது தொடர்பில் பெரும் சந்தேகம்  எழுகிறது. அதிகாரப் பரவலாக்கல்  என்று   வரும்போது புதிய அரசியலமைப்பு  வரைவிலும் தற்போதைய  மாகாணசபைகளுக்கு  உரிய  அதிகாரங்கள் மாத்திரம் தான்   உள்ளடக்கப்படுமா?  அல்லது அவற்றுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்படக்கூடிய  ஏற்பாடுகள் உள்ளடக்கப்படுமா ? ராஜபக்ஷ  அரசாங்கம் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்துக்கு  அப்பால்  செல்வது குறித்து (13+)  பேசிய காலமொன்று இருந்தது. இன்றைய அரசாங்கம் அதுபற்றியெல்லாம்  பேசுவதில்லை என்பதும் கவனத்துக்குரியது.

 இத்தகையதொரு பின்புலத்திலே, அரசிலமைப்பு வரைவுச் செயற்பாடுகள் தொடர்பில் இனப்பிளவின் இருமருங்கிலும் இருக்கும்  மக்களின் ஐயுறவுகளை பிரதிபலிக்கக்கூடிய  வகையில் வெளிப்படுத்தப்பட்ட இரு கருத்துக்களை  அவதானிப்பது பொருத்தமானதாக இருக்கும். 

சிங்கள  பெளத்த கடும்போக்கு  தேசியவாத  அரசியல் பேசுகின்ற  தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான  விமல் வீரவன்ச சில தினங்களுக்கு  முன்னர் இலங்கையின் பெளத்த உயர்பீடங்களில் ஒன்றான மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கரான அதி வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை சந்திப்பதற்காக கண்டிக்குச் சென்றிருந்தார். அரசாங்கத்தின்  உத்தேச புதிய  அரசியலமைப்பினால்  நாட்டுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் என்று தான் கருதுகின்றவற்றைப்பற்றி முறையிடுவதற்காகவே அச்சந்திப்பு. நாட்டின் ஒற்றையாட்சி அந்தஸ்துக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியதாக புதிய அரசியலமைப்பு அமையும் என்று  வீரவன்ச கூறியபோது அதற்கு பதிலளித்த மகாநாயக்கர், நாட்டுப் பிரிவினையைத் தூண்டக் கூடிய எந்தவொரு யோசனையுமே அரசியலமைப்பில் உள்ளடக்கப்படமாட்டாது என்று தன்னிடம் ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியளித்திருப்பதாகக் கூறினார் என்று செய்திகள் மூலம் அறியக் கூடியதாக இருக்கிறது. புதிய அரசியலமைப்பு வரைவுக்கு  நாட்டு மக்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக சர்வஜனவாக்கெடுப்பு  நடத்தப்படுமென்பதால் வீணான அச்சங்களை வளர்த்துக்கொள்ளத் தேவையில்லை என்றும்  மகாநாயக்கர் வீரவன்சவிடமும் அவருடன் கூடச்சென்றவர்களிடமும் கூறியிருக்கிறார். தேசியப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ஏற்பாடுகள் என்று வரும் போது சிங்கள அரசியல் சமுதாயமும் மக்களும்  நாட்டுக்கு அச்சுறுத்தலைத் தோற்றுவிக்கக் கூடியவை என்று அஞ்சக்கூடிய எந்தவொரு அம்சத்தையும் அரசாங்கம் உள்ளடக்கப்போவதில்லை என்பதும் அவ்வாறு உள்ளடக்கப்பட்டாலும் பெரும்பான்மையின மக்கள் சர்வஜன வாக்கெடுப்பில் அதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதுமே  மகாநாயக்கரின் அந்தக் கருத்துக்கள் மூலமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும் செய்தியாகும். 

அதேவேளை, சில தினங்களுக்கு முன்னர் திருகோணமலை மாவட்டத்தில் சம்பூரில்  இடம்பெற்ற விவசாயக் கண்காட்சியொன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்  பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் எவரும்  யாரையும் ஏமாற்றி ஒரு முறையான அரசியலமைப்பை உருவாக்க முடியாது. யாரிடமும் யாரும் ஏமாறப் போவதில்லை. புதிய அரசியலமைப்பின் மூலமாக உருவாக்கப்படவுள்ள அரசியல் தீர்வு  மக்களின் அங்கீகாரத்துக்காக சர்வஜனவாக்கெடுப்பிற்கு சமர்ப்பிக்கப்படும். அந்த அரசியலமைப்பு   மக்களின்  ஆணையைப் பெற்ற பின்னர் தான் நடைமுறைக்கு  வரமுடியும். அதனால், எவரும் யாரையும்  ஏமாற்றவேண்டும், ஏமாற்ற முடியும் என்று எண்ணவேண்டிய  அவசியம் இல்லை, என்று குறிப்பிட்டிருந்தார். தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்றக்கூடியதாக அவர்களினால் ஏற்றுக்கொள்ள  முடியாததான அரசியல் தீர்வு ஏற்பாடுகளை புதிய அரசியலமைப்பு உள்ளடக்கியிருக்குமானால், தமிழ் மக்கள்  அதை சர்வஜன வாக்கெடுப்பில் நிராகரிப்பார்கள் என்பதே தனது அந்த  உரையின் மூலமாக சம்பந்தன் விடுத்திருக்கும் செய்தியாகும். 

இம்மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு  விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ-மூனை யாழ்ப்பாணத்தில்  சந்தித்துப் பேசிய சம்பந்தன், தமிழ் மக்களின் சுயாட்சிக்கான அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாக புதிய அரசியலமைப்பில் தீர்வைத் தருவதாக அளித்த வாக்குறுதிக்கு ஏற்ற முறையில் அரசாங்கம் செயற்படத் தவறினால், தமிழ் மக்கள் வாழுகின்ற பிராந்தியங்களை ஆட்சிசெய்ய முடியாத நிலைமையை ஏற்படுத்துவோம் என்று கடுந்தொனியில்  குறிப்பிட்டிருந்தார். அரசியலமைப்பு வழி முறைகளின் ஊடாக அரசியல் தீர்வைக்காண்பதற்காக மேற்கொள்ளப்படக் கூடிய முயற்சிகளைப் பொறுத்தவரை, அரசாங்கத் தலைவர்களின்  நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக தாங்கள் நடந்து  கொள்வதும் அவர்கள் மீது நம்பிக்கை வைக்கவேண்டியதும் அவசியமானது என்று தொடர்ச்சியாக கூறிவருகின்ற சம்பந்தன், அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் தங்களை மீண்டும் ஏமாற்றக்கூடுமோ என்ற ஒரு ஐயுறவை  உள்ளூரக் கொண்டிருக்காவிட்டால்,  ஐக்கிய நாடுகள் செயலாளர்  நாயகத்தின்  முன்னால் அத்தகைய எச்சரிக்கையை விடுத்திருக்கமாட்டார். 

எது எவ்வாறிருந்தாலும்,  இத்தடவை  அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது  தேசிய இனப்பிரச்சினைக்கு பயனுறுதியுடைய  அரசியல் தீர்வு ஒன்றைத் தரக்கூடிய ஏற்பாடுகள் உள்ளடக்கப்படாவிட்டால், தங்களது நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளைக் கருத்தில்  எடுக்காத எந்தவொரு புதிய அரசியலமைப்பையும்  நடைமுறைக்குக் கொண்டுவர முடியாத வகையில் சர்வஜன வாக்கெடுப்பின்  மூலமாக சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த  மக்கள் தடுக்க முடியும்.  அதற்கு தமிழ்பேசும்  மக்கள் அனைவரும் ஒருமித்த  நிலைப்பாட்டுடன்  செயற்படவேண்டியது மிகமிக அவசியமானதாகும். அவர்களை அதற்குத்  தயார்ப்படுத்துவதற்கு அவர்களின் தலைமைத்துவங்கள் அரசியல் துணிவாற்றலைக் கொண்டிருக்கவேண்டும். 

சிறுபான்மையினங்களைச்  சேர்ந்த  மக்களின் நியாயபூர்வமான அரசியல்  அபிலாசைகளை ஓரளவுக்கேனும்  நிறைவேற்றக்கூடிய  ஏற்பாடுகள் இல்லாதபட்சத்தில் இனிமேல்  எந்தவொரு  அரசியலமைப்பையும் நாட்டில் நிறைவேற்றவோ நடைமுறைப்படுத்தவோ முடியாது என்று  பெரும்பான்மையினத்தவர்களுக்கும் அவர்களின் அரசியல் தலைமைகளுக்கும் உணர்த்துவதற்கு தமிழ்பேசும் மக்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய ஒரு அருமையான வாய்ப்பாக உத்தேச சர்வஜன வாக்கெடுப்பை நோக்கலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22