புதிய நிலக்கரி சக்தியை அகற்றுவதற்கான உலகளாவிய எரிசக்தி மாநாட்டின் இணைத் தலைவராக இருப்பதில் இலங்கை பெருமை கொள்கிறது - ஜனாதிபதி கோட்டாபய

Published By: Vishnu

02 Nov, 2021 | 12:21 PM
image

“புதிய நிலக்கரி சக்தியை அகற்றுவதற்கான உலகளாவிய எரிசக்தி மாநாட்டின்” இணைத் தலைவராக இருப்பதில் இலங்கை பெருமை கொள்கிறது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோ நகரில் நவம்பர் 01 அன்று ஆரம்பமான கோப்-26 என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றங்கள் தொடர்பான அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் பூமியின் நிலைபேறுக்கு அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்துப் பணியாற்றுமாறு அனைத்து நாடுகளிடமும் ஜனாதிபதி கோரினார்.

Image

இரசாயனப் பசளைப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தியமையானது, சுகாதார நலனுக்குப் போன்றே நிலையான பசுமை விவசாயத்துக்காக இலங்கை எடுத்த சிறந்த நடவடிக்கையாகும்.

காலநிலையால் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைத்துக்கொள்வதற்காக அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் எடுக்கும் தைரியமான தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு கிடைக்க வேண்டும்.

புத்த பெருமானின் போதனைக்கு அமைய போஷிக்கப்பட்டுள்ள எமது கருத்தியல் சார் உரிமையானது, சுற்றாடலின் இருப்புக்கு அதிக பெறுமதியை வழங்குகின்றது. எமது தேசிய கொள்கைக் கட்டமைப்பின் இதயமாக நிலைத்தன்மை விளங்குகின்றது என்றும் ஜனாதிபதி கூறினார்.

“காலநிலை மாற்றங்களுக்கு எதிரான போரின் தீர்மானமிக்க சந்தர்ப்பம்” என்ற தலைப்பில் இடம்பெற்று வரும் இந்த மாநாட்டில், 197 நாடுகளின் அரச தலைவர்கள், அரச பிரதிநிதிகள், நிபுணர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, சுமார் இருபத்தையாயிரம் பேர் கலந்துகொண்டுள்ளனர். ஐக்கிய இராச்சியத்தில் இதுவரை நடைபெற்ற மாநாடுகளில், இதுவே மிகப்பெரிய மாநாடாகக் கருதப்படுகிறது.

உலகின் பாரியளவில் பச்சைவீட்டு வாயுக்களை வெளியிடுபவர்கள், தங்கள் தேசிய கடமைகளை நிறைவேற்றுவது போன்றே, காலநிலை நெருக்கடியை சமாளிப்பதற்கான உதவிகளை அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு வழங்குவது அவசியம் என்று தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்கும் நமது பூமியின் இருப்புக்கு உண்மையான பங்களிப்பின் சக்தியுடன் ஒன்றிணைந்துச் செயற்பட வேண்டுமென்று, அனைத்து நாடுகளிடமும் கேட்டுக்கொண்டார்.

பொதுச் சுகாதாரப் பிரச்சினைகள், நீர் மாசடைதல், மண்ணரிப்பு மற்றும் உயிர்ப் பன்முகத்தன்மை பாதிப்புகள் காரணமாக, இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அண்மையில் தடை விதித்தது. பல்வேறு குழுக்கள் இதனை எதிர்த்தாலும், எதிர்காலத்தில் ஆரோக்கியமான மற்றும் மிகவும் நிலையான சேதன விவசாயத்துக்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது என்று தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இதன் மூலம் புத்தாக்கம் மற்றும் முதலீட்டுக்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

Image

காலநிலை மாற்றங்களானவை, அனைத்து நாடுகளையும் பாதித்திருக்கின்றன. ஆனாலும், அவை அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளையே அதிகளவில் பாதித்திருக்கின்றன. காலநிலை மாற்றத்தின் மூலம் ஏற்படும் அழிவைக் குறைப்பதற்கும் மாற்றியமைப்பதற்கும் துணிச்சலாக நடவடிக்கை எடுத்துவரும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு உதவுவது அவசியமாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் எடுத்துரைத்தார்.

இலங்கையானது, காலநிலை மாற்றத்தின் பாதிப்புகள் தொடர்பாக ஆழமாக அறிந்துள்ளது. புத்த பெருமானின் போதனைக்கு அமைய போஷிக்கப்பட்டுள்ள எமது கருத்தியல் சார் உரிமையானது, சுற்றாடலின் இருப்புக்கு அதிக பெறுமதியை வழங்குகின்றது. அதனால்தான், எமது தேசிய கொள்கைக் கட்டமைப்பின் இதயமாக நிலைத்தன்மை விளங்குகின்றது என்றும் ஜனாதிபதி அவர்கள் எடுத்துரைத்தார்.

இலங்கையின் கொள்கையானது, 2050ஆம் வருடம் ஆகும்போது காபன் உதாசீனத்தை அடைவதற்காக, காபன் உமிழ்வைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களின் பங்களிப்புடன், 2030ஆம் ஆண்டளவில் தேசிய எரிசக்தி தேவையில் 70 சதவீதம் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்ப்பதோடு, படிம எரிபொருட்களின் பயன்பாட்டைப் படிப்படியாக நிறுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

2030ஆம் ஆண்டுக்குள் நமது காபன் ஒதுக்கீட்டுத் திறனை 7 சதவீதமாக அதிகரிப்பதற்கான முயற்சிகளை செயற்படுத்தும் நிலையான நைதரசன் முகாமைத்துவம் தொடர்பான கொழும்புப் பிரகடனத்துக்கு 2019ஆம் ஆண்டில் இலங்கை தலைமைத்துவம் வழங்கியிருந்தது. இந்த வேலைத்திட்டத்துக்கு மேலும் பல நாடுகள் இணையுமென்று எதிர்பார்ப்பதாகவும், ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

பொதுநலவாய அமைப்பின் பசுமை சாசனத்தின் கீழ், சதுப்புநில சூழல் கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரப் பணிக்குழுவுக்கும் இலங்கை தலைமை தாங்குகிறது. இலங்கை தனது நிலையான முயற்சிகளுக்காக முதலீடுகள், தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான நிதி உதவிகளைப் போன்று, கொவிட்- 19 தொற்றுப் பரவல் மீட்புக்கான விரிவான உதவிகளையும் வரவேற்கிறது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி, பிரான்ஸ் ஜனாதிபதி, பிரித்தானியாவின் பிரதமர், இத்தாலி பிரதமர், இளவரசர் சார்ள்ஸ், ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினர்.

மாநாட்டின் போது உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அவர்கள், காலநிலை மாற்றங்களானவை, ஏற்கெனவே இந்த உலகையும் மனித வாழ்க்கையையும், வாழ்வாதாரங்களையும் அழித்துக்கொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டார்.

அத்துடன், காலநிலை மாற்றங்கள் தொடர்பில் நாடுகளுக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது மாத்திரமன்றி, அதற்கான ஒத்துழைப்புகளை உலகின் ஏனைய நாடுகளுக்கு வழங்குவதற்கான பொறுப்பு ஐக்கிய நாடுகள் சபைக்கு இருக்கின்றதென்றும் விசேடமாக அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுடன் இணைந்து, பாதுகாப்பான உலகப் பகிர்ந்துகொள்வதற்கான ஒப்புதலை வழங்குவதோடு, இன்னும் பலவற்றை நிறைவேற்றுவதற்கு தமது நாடு எதிர்பார்த்திருக்கிறது என்றும் ஜோ பைடன் அவர்கள் தெரிவித்தார்.

காலநிலை மாற்றங்களைச் சமாளிக்கத் தவறியமைக்கு எக்காரணமும் இல்லையென்று, மாநாட்டின் ஆரம்ப உரையை நிகழ்த்திய பிரத்தானியப் பிரதமர் பொரிஸ் ஜொன்சன் அவர்கள் தெரிவித்தார். இது விடயத்தில் கடந்த காலங்களில் பல முன்னேற்றங்களைக் கண்டுள்ள போதிலும், சுற்றாடலுக்காக இன்னும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், இன்று எமது கடமைகளை முறையாக நிறைவேற்றாவிடின், அவற்றின் பிரதிபலன்களை எதிர்காலச் சந்ததியினரே அனுபவிக்க நேரிடுமென்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இந்தப் பூமியானது, எமது கண் முன்னே மாறிக்கொண்டு வருகிறது எனத் தெரிவித்த ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரேஸ் அவர்கள், இது விடயத்தில் ஞானக் கண்ணோடு பொறுப்புகள், கடமைகளை நிறைவேற்ற வேண்டுமென்றும் அபிலாஷைகளோ ஒற்றுமையாகப் பணியாற்ற வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

சமத்துவமின்மையை போக்க நடைமுறை வழிகளைக் கண்டறிய நாம் அனைவரும் ஒன்றிணைந்துச் செயற்பட வேண்டும். அப்போது இந்தப் பூவுலகம் காப்பாற்றப்பட்டு, ஆபத்தில் உள்ள நமது இளைய சமுதாயத்தின் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என்று மாநாட்டின் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸ் தெரிவித்தார்.

ஒக்டோபர் 31ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கோப் – 26 என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றங்கள் தொடர்பான மாநாடு, நவம்பர் 12 ஆம் திகதி வரை க்ளாஸ்கோ நகரில் நடைபெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08